Saturday, January 7, 2017

மொழி



மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு எனது சிரம் பணிந்த வணக்கம்.


தங்களது வெண்முரசு மகாபாரத நாவல் வரிசையில் அமைந்த முதற்கனல் நாவலை தற்போது படித்து வருகின்றேன். தங்களின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது மொழி ஆளுமையின் சொல்லாற்றல் திறம் மனதிலே பல கோணங்களில் சிந்திக்க வைத்துச் செல்கிறது. பிறருடைய படைப்புகளில் காண கிடைக்காத அரிய சொற்கள் அர்த்தமுடையதாகவும் ஆழமுடையதாகவும் கவித்துவம் நிறைந்ததாகவும் அமைக்கப்பட்டுள்ளதை நாவலில் படித்துணர்கிறேன்.


உதாரணமாக முதற்கனல் நாவலில் சத்தியவதியிடம் பீஷ்மர் ‘மனம் திறக்காமல் வயிறு திறந்தால்’ அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது’ என்று கூறுகையில் சொல்லாற்றலின் வலிமை மிகுகிறது.  ‘பிறவியிலிருந்தே விழியற்றவன் என்பதை ‘முடிவிலா இருள்’ எனப் பெயரிடப்பட்ட தீர்க்கசியாமர்’ என்னுமிடத்தில் கவித்துவம் நிறைந்துள்ளது. இதனை போன்று கூறுவதற்குரிய தடங்கள் நாவலில் ஏராளம். உவமை, உருவகம், படிமம், மறுஆக்கம் போன்றன நாவலின் பல இடங்களில் சிந்திப்பதனை செழுமையடையச் செய்கின்றன.


    நான் தங்களது வெண்முரசு நாவல்களில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கின்றேன். ஆகையால் ஆய்வு நிறைபெறும் தருணத்தில் நேர்கானல்காக தங்களை அணுகுவதற்கு ஆசீர்வாதத்தோடு அனுமதி வழங்கி வாய்ப்பு நல்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                                                                                இப்படிக்கு
                            தங்கள் வாசகி
                                    சி.லலிதா.