Wednesday, January 11, 2017

வைணவப்பாடகர்களின் வருகை



ஜெ

வெண்முரசு கிராதத்தில் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதது வைணவப்பாடகர்களின் வருகை. என்ன இது என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால் பிறகு சிந்தித்தபோது சரிதானே என்றுதான் நினைக்கத்தோன்றியது, மிகக்குரூரமான பிச்சாண்டவர்களின் உலகில் இருந்து ஆரம்பித்து கனிந்துகொண்டே வந்தது நாவல். உக்ரன் வந்தபோதே கனிய ஆரம்பித்தது. சிவனும்பார்வதியும் குறவனும் குறத்தியுமாக வந்தபோது மிகவும் இனித்தது. அந்த இனிமை விஷ்ணுவில் வந்துமுடிந்தது.

அதோடு இது சிவப்பெருமை சொல்லும் நாவலாகத் தோன்றினாலும் உள்ளே வைணவவேதம் உருவாகி வந்ததைத்தான் பேசிக்கொண்டிருந்தது. அது எப்படி முடிவடைகிறது என்றுதான் சொல்லப்போகிறது. நான் வியாசர் வருவார் என நினைத்தேன். ஆனால் அவர் கதையிலிருந்து விலகி நெடுநாளாகிறது. ஒரு நாவலின் இறுதியில் அப்படி சட்டென்று வரமாட்டார் என தெரிந்துகொண்டேன். அவர் ஒருநாவலின் தொடக்கத்தில்தான் வருவார் இல்லையா?

ஆனந்த் பெரியசாமி