Thursday, January 19, 2017

நாயகி




அன்னை பராசக்திக்கு தையல்நாயகி என்று ஒரு திருநாமம் உண்டு. மேலாகப்பார்த்தால் தையலர்களின் நாயகி என்று பெண்களில் முதல்வி என்று தெரிகின்றாள். தையலர்கள் என்றால் என்ன என்றுப்பார்த்தால் புனைந்துக்கொள்பவர்கள்  தையலர்கள் என்ற அர்த்தம் வருகின்றது. 

புனைந்துக்கொள்வதால் பெண்கள் தையலர்கள். நெற்றிக்கு நெற்றிக்சுட்டி அணிந்துக்கொள்கிறார்கள். நெற்றிக்கு நெற்றிக்சுட்டி புனைகிறார்கள். கண்ணுக்கு மை புனைகிறார்கள். உதட்டுக்கு சாயம் புனைகிறார்கள். கன்னத்திற்கு சந்தனம் கொழுந்து மலரிதழ் மகரந்தம் புனைகிறார்கள். கழுத்துக்கு பொன்னும் மணியும் முத்தும் புனைகிறார்கள். கையிக்கு வளைபுனைகிறார்கள். இடைக்கு மேகலையும் பட்டும் புனைகிறார்கள் காலுக்கு கொளுசும் சிலம்பம் புனைகிறார்கள். கையும் காலும் சிவக்க மருதாணி புனைகிறார்கள். தையலர்களால் இவ்வளவுதான் புனைந்துக்கொள்ளமுடியும் ஆனால் தையல்நாயகியால் இவ்வளவையும் புனைந்து இதற்குமேலாக தன் நாயகனையும் நாடறிய புனையமுடியும்.  அதனால்தான் அன்னை பராசக்திக்கு தையல்நாயகி என்று பெயர்.

கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மைய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே-அபிராமி அந்தாதி.

தையல்நாயகி தன்மேனியில் தன்நாயகனை புனைந்தவள் இது அன்னைக்கே உரிய ஆற்றல், புனைதலின் உச்சம் அவள். எதுவும் புனையாதவனை புனையும் சக்தி அவளிடம் உண்டு. எதுவும் புனையாதவன் என்ற அப்பனின் ஆணவத்தை அப்பனை புனைவன் மூலமாக அன்னை அழிக்கிறாள். அன்னை ஆணவத்தை அழிகிறாள் என்பது தெரியாமல் இருக்க அவளே அந்த வெற்றிடத்தில் ஒரு செல்வமாக சென்று நிறைந்து இருக்கிறாள் அதனால் அன்னை தையலரில் தையல்நாயகி. 

அன்னை தையலரில் தையல்நாயகி என்பதால் தையலர் எல்லாம் தையல்நாயகிதான். தையலர் எல்லாம் தையல்நாயகியாக இருப்பதால் அவர்கள் அனைவரும் ஆணின் ஆணவம் அழிக்கும் அன்பின் வாரிதிகள். கிராதம் காட்டும் தையல்நாயகி அன்னைக் காளி.

பாசுபதம் பெறுவதற்கு கைலைமலை செல்லும் அர்ஜுனன் காட்டாளனின் இடம் வில்வித்தையில் தோற்கும்போது தற்கொலை செய்துக்கொள்ள எண்ணும்போது அன்னைக்காளி தனது இளம்மைந்தன் குமரனை இடப்பில் வைத்துக்கொண்டு முதல்மைந்தன்கொம்பன் உடன் தோன்றுகின்றாள். அன்னைக்காளி அங்கு தோன்றுவதால் அர்ஜுனன் தற்கொலை தடைசெய்யப்படுகிறது. அவன் தடுத்து ஆட்கொள்ளப்படுகின்றான். அர்ஜுனன் தற்கொலை தடைசெய்யப்படுகிறது என்பதை விட அர்ஜுனன் ஆணவம் தடைச்செய்யப்படுகிறது என்பதுதான்  கிராதம் காட்டும் சரியான அர்த்தம். . 

நான்கு திசைகளிலும் சென்று மெய்மை அறிந்து, அறிந்த மெய்மைக்கு நிகராக பெரும் சக்தியாயுதம் தாங்கி நிற்கும் அர்ஜுனனை மெய்மையும் ஆயுதமும் கைவிடும்போது அர்ஜுனன் தற்கொலை செய்துக்கொள்ளத் துடிப்பது தோற்றதற்காக அல்ல தனது ஆணவத்திற்காக.  ஆணவம்தான் அர்ஜுனனை இறந்துப்போ என்கிறது. அவனும் தனது ஆணவத்தை நிறைவுச்செய்யத்தான் இறந்துப்போக துடிக்கிறான். தற்கொலை செய்துக்கொள்ளும் அனைவரும் தனது ஆணவத்தை நிறைவுசெய்துக்கொள்ளவே இறந்துப்போகின்றார்கள் என்பதை காட்டுகின்றது கிராதம். 

வாழ்வின் அனைத்து திசையிலும் கணத்திலும் நிலையிலும் மனிதன் பெறுவது எல்லாம் ஆணவம் மட்டும்தான். ஆணவ வளர்ச்சிதான் வெற்றியாகவும் புகழாகவும் பொன்னாகவும் பொருளாகவும் குலமாகவம் குடியாகவும் நாடாகவும் வாழ்க்கையாகவும் உயிராகவும் நிற்கிறது. ஆணவத்தின்மீது இடிவிழும்போது வெற்றி புகழ் பொன் பொருள் குலம் குடி  நாடு வாழ்க்கை உயிர் அனைத்தும் நிலைகுலைகிறது. நிலைகுலைதலை தாங்கமுடியாத மனிதன்  தான்இல்லாமல்போதலின் வழியாக தன் நிலைநிறுத்துவதாக நினைக்கிறான். இறந்தவர்களை எத்தனை ஆண்டுகள்  கழித்துப்பார்த்தாலும் இளமையோடு இருப்பதுபோல இல்லாமல் போனவன் ஆணவம் இளமையாகவே இருக்கிறது. தன் ஆணவத்தை இளமையாக வைக்க அர்ஜுனன் நடத்தும் நாடகம் இந்த கணம்.. இது அவன் அறியாத ஒன்று இதை அவன்வழியாக  இது நடத்துகின்றது. அவனுக்கம் அவன் ஆணவத்திற்கும் உள்ள இடைவெளி என்ன என்பதை காட்டாளன் காட்டமறுக்கும் இடத்தில் அன்னை காளி எழுந்துவந்து காட்டுகின்றாள்.

அர்ஜுனன் இடம் போரிட்டு வெல்லும் காட்டாளன் தான் வென்றேன் என்று சொல்லவில்லை மாறாக நீ மாபெரும் வில்வீரன் என்பதை அறிந்துக்கொண்டேன் என்றுதான் சொல்கிறான் அப்போதே அர்ஜுனன் வென்றவன் ஆகின்றான். வென்றவன் தன்னை வென்றவன் என்று நம்பமுடியாமல் செய்வது அவன் ஆணவம். நான் வில்விஜயன், நூறுகளம் கண்டவன், நூறுபரணிப்பாட்பட்டவன், சூதர்கதைகளின் கதை நாயகன் என்று கூறும்  அர்ஜுனன் இடம் ஆணவம் உள்ளது என்பதை  ’’நான் என் மனைவியால் நன்கறியப்பட்டவன். பங்காளிகளால் வெறுக்கப்படுபவன். நீ எண்ணுவதை முன்னரே அறியும் திறன்கொண்டவன் என்று போருக்கு முன்பே காட்டாளன் உன்னிடம் உள்ளது ஆணவம் என்று குறிப்பு உணர்த்துகின்றான். இதை அர்ஜுனன் ஆணவன் கேலிஎன்று நம்பவைக்கிறது. உண்மைகள் எப்போதும் கேலிச்சட்டையை அணிந்தே பலவேளைகளில் உலவுகின்றது.

அர்ஜுனன் இடம் உள்ள ஆணவத்தை நன்கு அறிந்தும் காட்டாளன் அதை அழிக்க மறுக்கின்றான் மாறாக அதை வளர்க்க தூபம்போடுகின்றான். அன்னைக்காளி ஒரே அடி அந்த ஆணவத்தை உடைக்கிறாள். அன்னைக்கும் தந்தைக்கும் உள்ள வேற்றுமையே இதுதான். ஆனால் அன்னை அதை நான் செய்தேன் என்று நாம் நம்பும் அளவுக்குகூட இடம்தராமல் செய்துவிடுகிறாள். 

அன்னை காளி ஒரு கையால் தூக்கித்தரும் பன்றியை இருகையால் பற்றமுடியாமல் நழுவவிடும் அர்ஜுனன் அன்னையிடம் உடலால் தோற்கிறான். இளம்மைந்தன்போல் இருக்கிறாய் என்று அதட்டி அடிக்கப்பாய்கையில் உள்ளத்தால் தோற்கிறான். தோற்றாய் என்றால் புதிதாய் ஒன்றை கற்க அதை சந்தித்திருக்கிறாய் என்று சொல்வழங்கையில் அறிவால் தோற்கிறான். அன்னை தோற்றகடிக்கும்போதே தோற்கடிக்கின்றேன் என்பதைக்காட்டாமல் வளர்க்கவேண்டியது என்ன என்பதை காட்டுகின்றாள். தந்தையும் இதையேதான் செய்தார். அர்ஜுனன் தோளில் காலில் அம்புவிட்டு உடலால் தோற்கடிக்கிறார். மானிடரையும் உண்ணாத உயிரையும் நான்கொல்வதில்லை என்று உள்ளத்தால் தோற்கடிக்கிறார். நிகராக வந்து என்னைத்தழுவிக்கொள் என்று அறிவால் தோற்கடிக்கிறார். தந்தை தோற்கடிக்கும்போது தோற்கடிப்பது கண்முன்னே தெரிகிறது அதற்கும்மேலே வளர துளி இடம்கூட இல்லை என்று புரிகின்றது. இந்த இடம் இன்மை அன்னை வரும்போது இருப்பது இல்லை அதற்கும் அப்பால் வான்வரை இடம் இருப்பது தெரிகின்றது.  அந்த வானிடம்வரை நோக்குவிரியும்போது மானிட மனம் தனது எளிமையை சிறுமையை ஆணவத்தை அறிந்து அகற்றிக்கொள்கிறது. மானிடக்குலம் அன்னையின் அன்பிற்கு கட்டளைக்கு பணிந்து வளர்கிறது.

//ஒரு மூச்சிலேயே உளம்கொண்ட சுமையெல்லாம் அகன்று எடையிழந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். “அவர் காலடியை வணங்கி கல்வியை கேள்என்றாள் அவள். அவன் காலை நொண்டியபடி எடுத்து முன்னால் வைத்து காளனின் அருகே சென்று வலியுடன் முழந்தாளிட்டுகாலவடிவரே, நான்  எளியவன். ஆணவத்தால் ஆட்டிவைக்கப்படும் இழிந்தோன். உம்மிடமுள்ள அறிவையும் திறனையும் எனக்கும் கற்பித்தருளவேண்டும்என்றான். காளன் உரக்க நகைத்து அவன் தலைமேல் கைவைத்துஎழுகநான் அவள் ஆணைகளை மீறுவதில்லை…” என்றான். //

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப்பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.-அபிராமி அந்தாதி. 

இறைவன் மண்ணுயிரைக்காக்க தாயுமானவன் என்று பெயர் எடுக்கவேண்டியது சரிதான். 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.