Monday, May 2, 2016

கன்னியும், கன்னி நிமித்தமும்: (பன்னிருபடைக்களம் 34)




ஒரு ஆண் மனதில் பெண் எவ்வாறெல்லாம் அழிவின்மை அடைந்திருக்கிறாள் என்பதன் ஆவணம் இன்றைய பகுதி. எந்த ஒரு விவரணமுமே ஒரு முழுமையான, ஒரு பெண்ணைப் பற்றியதல்ல. ஒவ்வொன்றும் ஒரு அழியா நினைவு. ஒரு நிறம் மங்கா நிலைக்காட்சித் தருணம்(snapshot).  ஆண் தான் வளர்ந்த ஒவ்வொரு பருவத்திலும், அந்தந்த வயதில் கண்ட பெண்களின் நினைவே இவை. பெண்ணின் ஏழு வகை பருவங்களிலும் ஒரு ஆணின் நினைவில் சென்று சேரும் கன்னியின் அழகுகள். குழந்தையாக, தொட்டிலிலும், தரையிலும் தவழ்கையில் கண்ட பெண்ணின் அங்கங்கள், கொஞ்சம் வளர்ந்த போது வரும் களித் தோழியரிடம் பெற்ற அனுபவங்கள் - கரந்துகொண்டுவரும் சிறுபரிசுகள், உனக்கே என்னும் நோக்கு, அத்தோழி சற்று விலகிச் சென்று அரும்பத் துவங்கும் காலத்தில் அளித்த உணர்வுகள் -  “எண்ணத்தயக்கம் தெரியும் பேச்சு. சொல்லாச் சொல் இடைவெளி விழுந்த உரை. அதை சொல்லி மறையும் விழி. சொல்லித்தவித்து இதழை கடிக்கிறாள். அவ்விதழில் எஞ்சிய பற்தடமென ஒரு சொல். சொல்லொழுக்கு நடுவே மூச்சுவிழுங்குகிறாள். கழுத்துக்குழாய் அசைவாக காலத்தில் உறைந்தாள்”, அவளே அரும்பி, மொட்டவிழ்ந்த காலத்தின் பொன் மயக்கம் தரும் கற்பனைகள், அவளின் ஆக்கும் ஆழங்களை வெல்ல இயலாமல் தவித்த கணங்கள், அவளை அன்னையாக்கிய அற்புதத் தருணங்கள், இறுதியாக அவளையே ஒரு மகளாக மடியில் இருத்துகையில் கொண்ட மெய்சிலிர்ப்புகள் என ஒரு ஆணின் ஒட்டுமொத்த பெண் அனுபவங்களையும் பெய்து தீர்த்து விட்டார் ஜெ. பேச்சிழந்து, சொல்லிழந்து, தோய்ந்து நிற்கிறேன். மீண்டாக வேண்டியே எழுத வேண்டியுள்ளது. அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போன்றது பின்வரும் வரிகள்.


அழியாநினைவின் பெருவெளி சூழ்ந்துள்ளது பெண்ணே! அறிவாயா நீ, இறப்பின் எருமைத்தலைமேல் கால்வைத்து அமுதகலம் ஏந்தி எழுந்துவிட்டய் என்பதை? விழியென உளமென நிகழ்ந்து நிகழ்ந்து மறையும் ஆண்களின் திரையில் அழியாத சித்திரம் நீ. கன்னியென்றானவள் எவள்? இங்கு அவள் ஆட விழைவதுதான் என்ன? அடையப்படாத பெண்களால் நிறைந்த சித்தம் எனும் சித்திரச்சுமையை முதுகொடிய சுமக்காத எவருளர்?
ஆம்... அவள் கன்னி என்று அமுத கலம் ஏந்துகையில் தானே மந்தையாகத் திரிந்த நான் ஆண் என இறந்து பிறந்தேன்!! 
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்