Thursday, November 9, 2017

அவைஅன்புநிறை ஜெ,

தங்கள் பதிலைப் பார்த்து முகம்  சூடிக்கொண்ட புன்னகை இன்னும் இருக்கிறது. 

உண்மையில் இது ஒரு ஆற்றாமையில் விளைந்த ஊகம்.

எழுதழலை பெரும்பாலும் பிரலம்பன் வாயிலாகவே பார்க்கிறோம். அவனது உணர்வெழுச்சிகளை தரிசனங்களை வாசகர்களும் அடைகிறோம். (நண்பர்கள் நிலையும் அதுவே. எனவே பன்மை)

நீர்க்கோலத்தில் சம்பவன், முக்தன் போன்றார் வழியாகவே மைய மாந்தர்களை நெருங்கி அறிந்தோம். இந்த துணை மாந்தர்களுக்குக் கிட்டும் பேரனுபவங்கள் கனவுகளைத் தூண்டுவது. விதி நியமித்த தருணங்களில் தக்க விதைகளோடு காத்திருந்த நிலம் இவர்கள். மழையெனப் பெருமாந்தர் அணுகிட மண் கிழித்தெழுந்து வேறு தளங்களுக்குச் சென்று விடுகிறார்கள்.

அன்றாடங்களின் கிளைகளிலிருந்து இவர்கள் பறந்தேறும் விண் பரப்பு ஏக்கத்தைக் கிளர்த்துவது. இவர்களில் பெரும்பான்மையோர் ஆண்கள்.  அன்று முதல் இன்று வரை கனவு காணவேனும் வாய்ப்பு கிட்டியவர்கள். 

வேறொரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன் - இமயச் சிகரங்களை நோக்கி வசீகரிக்கப்பட்ட ஒரு ஆன்மீக குருவின் சுயசரிதை. அதன் விமரிசனத்திற்குள் இறங்காமல், இத்தகைய தேடல்களை மட்டும் கண்டோமானால் மனம் தவிக்கிறது.

தேடலும் அலைக்கழிப்புகளும் பெண்களுக்கும் உண்டு என நீங்கள் நம்புவீர்கள் அல்லவா. இமயச் சிகரங்கள் நோக்கி ஏகாந்தமாய் அலைந்து திரிவதும், பேரும் ஊருமின்றி நடைபயணமாய் அலைந்து பாரதத்தைப் பார்ப்பதும், 
யாதொரு சுவடுபடாமல் வாழ்ந்து உதிர்ந்துவிடுவதுமாய்  இன்னும் எத்தனை எத்தனையோ கனவுகள். இத்தகைய கனவு காண்பதற்கே ஆயிரம் தடைகள். இவை அனைத்தும் ரகசிய மயிலிறகாய் ஒளித்து வைத்திருக்க, இங்கே இமையாப் பீலி அகம் நோக்கிப் புன்னகைக்கிறது.

ஏக்கம் தலைதூக்கும் போதெல்லாம் தாட்சண்யமின்றி காலால் நசுக்கி உலகியல் வெற்றிகள் எனும் முகப்பூச்சுகளால் புன்னகை புரியும் முகத்தையே கண்ணாடி காட்டுகிறது. 

எத்தடையுமின்றி பெண்கள் தங்களை வெளிக்காட்ட நீலன் ஒருவனே இருக்கிறான். எனவே அவனது அவைக்கு நானாக இருந்தால் சென்றிருப்பேன் என்ற ஏக்கத்தின் நீட்சிதான் அந்த ஊகம். பிரலம்பன் கண்டதன் துளியை நானும் கண்டிருப்பேன் எனும் கனவு.

அதன் தொடர்ச்சியாக மனம் சென்று தொடும் மற்றொரு புள்ளி: 
எல்லாப் பெண்களாலும் தாய்மை எனும் பெரும் பேறொன்றால் மட்டும் நிறைவடைய முடிவதில்லை. தாய்மையின் உயர்பீடத்தில் நின்றும் அது விரிக்கும் மாயையில் சிக்கி நின்றுவிடுபவர்கள், அதற்கான வாய்ப்பு கிட்டாத வாழ்க்கை அமைந்தவர்கள், அது தங்களது முழுமைக்கான பாதையல்லவென உணர்பவர்கள் எனப் பல வகைப்படுத்தலாம்.


தாய்மை குறித்த எத்தனையோ மின்னல்கள் வெண்முரசில் வந்திருக்கிறது. எனில் இதில் பெரும்பான்மையினராகிய முதலாம் வகையினர் குறித்த  அரியதும் கூர் மின்னுவதும் ஆன கூற்று ஒன்று:
// மாயைகளில் பெரிது அன்னையெனும் பற்று. அனைத்துச் சிறுமைகளையும் அள்ளிக்கொண்டு வந்து நிறைக்கிறது. அனைத்து வாயில்களையும் மூடி அறியாமையை வளர்க்கிறது. அனைத்துக்கும் மேலாக அன்னையென்று அமைந்து ஆற்றுவதெல்லாம் நன்றே என்ற பொய்யில் திளைக்கவைத்து மீட்பில்லாதாக்குகிறது.//

அதனாலேயே தேடல் நிறைந்தவர்களுக்கு 
தாயைத் துறந்தோடும் கனவுகள் நிறைந்த இளமைப் பருவமே வாய்க்கிறது. மொத்த வாழ்க்கையுமே பாதுகாப்பென்றும் அணியென்றும் கனவென்றும் எண்ணி அவள் நம் மேல் நிறைத்த சுமைகளைக் கழற்றி வீச முயன்று ஓடுவதாய் அமைகிறது.  ஒரு வகையில் தாயிலிருந்து விலகும் முதல் முயற்சிதானே பிறப்பும். மொத்த மகாபாரதமும் பல்வேறு அன்னையரின் சுயநலங்களும் ஆதங்கங்களும் கனவுகளும்தானே.  

தன் உடலை உண்ணத் தரும் சக்கரவாகப் பறவையும் தன் குட்டியை மென்று உண்ணும் ஓநாயும் தாய்மையின் இரு முகங்கள்தானே. கண்ணனே இது இரண்டுமாகவும்தானே இருக்கிறான். அர்ஜுனனுக்கு முலை சுரக்கும் அன்னை, அபிமன்யுவை இரையெனக் கவ்விக் கொள்ளப் போகும் இறையென அபிமன்யுவிடம் அவனே அறிவிக்கிறான்.

அன்னையரை அவனன்றி யாரறிவார் அவள் பூதனையென்றாலும்.

மிக்க அன்புடன்,
சுபா