Saturday, November 18, 2017

அணிகொண்டெழுதல் (எழுதழல் - 51)


      அழகு   என்ற கருத்தாக்கத்தை  தத்துவ ரீதியாக அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களைப்  பார்த்திருக்கிறோம்.  அழகு என்பது நம் மனதைக் கவர்ந்து உலகியலில் இறுத்திக்கொள்ளக்கூடியது அது ஞானத் தேடலுக்கு எதிராக அமையும் என்று கூறப்படுகிறது.  உலகில் எவ்வளவோ துன்பங்களும் தீர்க்கவேண்டிய பிரச்சினைகளும் இருக்கும்போது அழகு என்பதே ஆடம்பரமான ஒன்று  என சொல்பவர்கள் அதிகம்.  ஆனால் அழகாய் இருக்க விழைதலும்   அணிகளைக்கொண்டு அழகுபடுத்துதலும் எப்போதும் இயற்கையின் ஒரு கூறாகவே இருந்துகொண்டிருக்கிறது.  மனிதர்கள் அனைவருக்கும் அழகுணர்ச்சி எப்போதும் இருக்கிறது.  சிறு பிள்ளைகள்கூட அணிசெய்துகொள்ள விரும்புகின்றன. ஆடைகளும் அணிகளில் ஒன்றாகிப்போகிறது.   விழாக்கள்  அனைத்திலும் அலங்கரித்தல் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.  துன்ப நிகழ்வுகளிலும் கூட  அலங்கரித்தல் என்பது இல்லாமல் இல்லை.   விழாக்கள் இல்லாத சமயத்தில்கூட தம்மை அலங்கரித்துக்கொள்வதை யாரும் நிறுத்திவிடுவதில்லை. அழகாய் இருக்க விழைதலும், அழகால் கவரப்படுதலுமான உணர்வுகள் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் கூட இருக்கின்றன என்பதை நாம் காண்கிறோம். 

   அணிசெய்வது என்பது உயிர்களைத் தாண்டி இயற்கையில் அனைத்து கூறுகளிலும் இருக்கிறது.  மரங்கள் தன்னை பூக்களால்,  கனிகளால், அவற்றை நாடிவரும்  பூச்சிகளால், பறவைகளால்   அழகு செய்துகொள்கின்றன.  நதிகள் தன்னை தாவரங்கள் அடர்ந்த கரைகளால் அணிசெய்துகொள்கிறது.   நீர் நிலைகள்,  வண்ண மலர்செடிகளால், துள்ளி விளையாடும் மீன்களால்  அணிசெய்யப்படுகின்றன.   பூமி  தன்னை மலைகளாலும் வனங்களாலும் பனிபோர்வைகளாலும் அணி செய்துகொள்கிறது. வானம் தன்னை விதவிதமான மேகக் கூட்டங்களால், சுடர் வீசும் சூரியனால், குளிரொளி பொழியும் நிலவால் மினுமினுக்கும் விண்மீன்களால், அவ்வப்போது ஆரமென சூடிக்கொள்ளூம் வானவிற்களால் அலங்கரித்துக்கொள்கிறது.  நிலம் நதிகளால் அணிசெய்யப்படுகின்றது.  பெரும் சமுத்திரங்களை, காற்று அலைகளை, சுழல்களை உருவாக்கி அணிசெய்கிறது.  காற்றை நெருப்பு தன் தனலிதழ்களால் அணி செய்கிறது.  பெருகி எரியும் தீக்கு  அணி முடியென ஆகாயம் திகழ்கிறது. அந்த ஆகாயம்  பிரபஞ்சத்தின் பல்வேறு கூறுகளால் அணிசெய்யப்பட்டிருக்கிறது.   இப்பிரபஞ்சமே அந்தப் பரப்பிரம்மம் தனக்கு அணியென சூடிக்கொண்ட ஒன்றென ஆகி  நிற்கிறது.  
  நம் எண்ணங்களை  சொற்களால் அணிசெய்துகொள்கிறோம்.  சொற்களை மொழியும், மொழியை சொற்களும் ஒன்றை ஒன்று அணிசெய்துகொள்கின்றன.   அன்றாட செயல்களை பாவனைகளால் அழகுபடுத்துகிறோம். உலகில்  நம் இருப்பை வாழ்வதன் மூலம் அணிசெய்துகொள்கிறோம்.  வாழ்வதின் அணிகளென நம் செயல்களால் ஈட்டும்  புகழ்கள் விளங்குகின்றன.  அதன் இறுதிஅணியென   இறப்பு அமைகிறது.  அந்த இறப்பின்  அணியாக இல்லாமை விளங்குகிறது.

     நாம் அணி செய்துகொள்வது நம் மேல் நாம் கொண்டிருக்கும் அன்பைக் காட்டுகிறது. சில சமயம் நாம் பிறர் மேல் காட்டும் அன்பை அவர்களுக்கு அணிசெய்வதன் மூலமாக காட்டிக்கொள்கிறோம்.  ஒரு குழந்தையை பெற்றெடுத்து பேணி வளர்ப்பது ஒரு கடமை.  ஆனால் நம் கடமையைத் தாண்டி அக்குழந்தைக்கு நாம் ஏதாவது செய்ய விரும்புகிறோம்.  அக்குழந்தையை அணிகளால் அழகு செய்கிறோம். குழந்தை எவ்வளவு அழகுவாய்ந்தது. இருப்பினும் நாம் அதற்கு அணிசெய்வது நம் அன்பைக் காட்டுவற்காக  மட்டுமல்லவா?  அணிகள் என்பவை அழகை கூட்டுபவை. ஆகவே அணிகள் அழகில் நுண்மை கொண்டவையாக இருக்கின்றன.  மலரில் பார்த்த நுண்மையை, வானில் பார்த்த விண்மீன்களில் ஒளிச் சிதறல்களை, வண்ணக் கோலங்களை, எல்லாம் நாம் அணிகலன்களில் நிகழ்த்துகிறோம். 


    "அணிகளால் குழந்தை மலர்கிறது. கன்னியர் கனிகிறார்கள். அன்னையர் நிறைவுறுகிறார்கள். அரசர்கள் மாண்புறுகிறார்கள். தெய்வங்கள் விழியுருக் கொள்கின்றன. அணிகளன்றி அவர்களுக்கு அளிக்க மானுடனிடம் ஏதுமில்லை. அணிகள் அழகென மானுடன் அறிந்தவற்றின் நுண்செறிவு. அவன் விழிகொண்ட தவத்தை கைகள் அறிந்ததன் சான்று. ஆக்கி அழிக்கும் தெய்வங்களுக்கு முன் பணிந்து அவன் காட்டும் ஆணவம்."

    இதோ அந்தப் பேரிறை நம் பொருட்டு கனிவுகொண்டு ஒரு திருவுருக்கொண்டு சிலையென கோயிலில் எழுந்தருளுகிறது.  அதன் பெருங்கருணையின் காரணமாக நம்முள் பெருகும் பக்தியெனும் அன்பால் நாம் அதை அலங்கரிக்கிறோம். தூய ஆடைகள் கொண்டு, பொன்னால். மணிகளால், பலவண்ன மலர்களால், சந்தனம் போன்ற நறுமணப்பூச்சுகளால் அலங்கரிக்கின்றோம். அவ்வளவு செய்தும் மனம் இன்னும்  எதைக்கொண்டு அணி செய்யலாம் என ஏக்கம் கொள்கின்றது.   

   அந்தப் பரப்பிரம்மம் ஒரு மனித உருக்கொண்டு  கிருஷ்ணனென உயிர்கொண்டு எழுந்து வந்திருக்கிறது.    உலகில் இதுவரை உருவாகிவந்த அணிகளெல்லாம்  அவனை அணிசெய்ய துடிக்கின்றன. ஆணுக்கென இருக்கும் அணிகள் அதிகம் இல்லை. ஆனால் அவன் ஆணென எழுந்திருந்தாலும் ஆலிலையில் துயிலும் குழந்தையும் அல்லவா?  ஆகவே எவ்வளவு அணிகளைப் போட்டபின்னும் நம் மனம் நிறைவுகொள்வதில்லை. நாம்  அவனை அணிசெய்வது அவனை நம்மவன் என இருத்திக்கொள்ளும் நம் ஆவலின் காரணமாகத்தானே?   அவனை எப்படியெல்லாம் அணிசெய்யலாம் என வெண்முரசு ஏங்குகிறது. 

      " உயர்ந்த அறைக்கதவினூடாக இளைய யாதவர் அரசணிக்கோலத்தில் வெளிவந்தார். பச்சை மரகதங்கள் பதிக்கப்பட்டு தளிரென்று ஒளிவிட்ட பொற்குறடு. இளநீல அருமணிகள் சுடர்ந்த கழல். உருகிவழிந்த பொன் என நெளிவுகள் அமைந்த அரையாடை. அனலொளி கொண்ட வைரங்கள் செறிந்த பொற்கச்சை. அதில் செருகப்பட்ட உடைவாளின் பிடியில் கருடன் செவ்விழி திறந்திருந்தது. பொற்கவசமிட்ட மார்பு. தோளிலையும் புயவளைகளும் கங்கணங்களும் கணையாழிகளும். அணியிலாத ஓர் இடமில்லை. பூத்த மரங்களில் நிகழும் நிறைவு. "
 

    ஆதியிலிருந்தே கிருஷ்ணனின் பிறப்புக்காக இயற்கையன்னை தன்னை ஒருங்கு செய்துகொண்டாள். அவன் சூழலை விதவிதமாக அலங்கரித்துவைத்தாள்.    அவன் நடக்கப்போகும் வழியெல்லாம பசும்புல் கம்பளங்களை விரித்திருந்தாள். அதன் ஓரங்களில் செடிகளை நட்டு அவற்றில் வண்ண வண்ண மலர்களை சூடி வைத்திருந்தாள்.  அவன் செல்லும் பாதையெங்கும் பச்சைக்குடைகளாக கவிழும்படி மரங்களை வளர்த்து வைத்தாள். அவன் காதுகளில் இனிய ஓசைகளை விழச்செய்ய சிறு பறவைகளை பறக்கும் இசைக்கருவிகளென ஆக்கி வைத்திருந்தாள்.  அவனோடு கூடியும் மோதியும் விளையாட  விதவிதமான விலங்குகளை படைத்து வைத்திருந்தாள்.  இவ்வளவு செய்தும் அவள் நிறைவுகொள்ளாமல் தானே  ராதை என்ற பெண்ணுருக்கொண்டு அந்தக் களத்தில் திகழ்ந்தாள். சிறு குழந்தையாய் அவனை தோளில் சுமந்துகொண்டாள்.    சிறு கன்னியாய் அவனை சேர்த்தணைத்து இதம் தந்தாள்.  அவள் அவனுக்கென அத்தனை அணிகளுக்கப்பால் அவன் என்றும் சூட ஒரு அணிகலனை சிந்தித்தாள்.  அது பொன்னால், மணிகளால் ஆனதாக இருந்தால் அவன் உடலை சற்றேனும் உறுத்தும்.  மலர்கள் என்றால் சிறிது நேரத்தில் அவை வாடிவிடும். பட்டாடை என்றால் தன் தூய்மையை சிறிது காலத்தில் இழந்துவிடும்.  ஆகவே    வான்நீலமும்,  அந்திச்சிவப்பும்,  புவிமூடும் பசுமையும் கலந்தமைந்து  தென்றலின் மென்மையை தன்னுள்கொண்டு   என்றும் பொலிவோடமையும்  மயிற்பீலியை  அவனுக்கு அணியென சூட்டி மகிழ்ந்தாள்.  அன்றிலிருந்து எப்போதும் அந்த மயிற்பீலி  அவன் பூணும்  அத்தனை அணிகளுக்கும் மேலாக அவன் சிரத்தின்மேல் அமைந்து  வான் சுட்டி நிற்கிறது.  


   "செம்பட்டு சுழற்றி அதன்மேல் முத்தாரம் சுற்றி வைரமலர்கள் பதித்து இப்புவியின் முதன்மைப்பெருஞ்செல்வம் என்று அமைத்த மூன்றடுக்கு மணிமுடியின் மீது வானிலிருந்து மிதந்து வந்து விழுந்து மெல்ல தைத்து நிற்பதுபோல் மயிற்பீலி காற்றில் அசைந்தது." 
     

அந்த மயிற்பீலி குழலுடன் இணைந்து தோன்றும் கணமெல்லாம் நம் உள்ளத்தில் உறையும் அந்த மாயவனின்  இருப்பை உணர்த்திவருகிறது.

தண்டபாணி துரைவேல்