Wednesday, December 18, 2019

களிற்றியானை நிரை-03 அமைதல் அலைதல் தொலைதல்

அன்புள்ள ஜெ வணக்கம்.

பாம்பன் குமரகுருதாசசுவாமிகள் பாம்பனில் இருந்து கிளம்பி தொலைவுக்கு செல்கிறார். அவர் சென்ற தொலைவு, தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத்தெய்வமணி  ஆகிய முருகபெருமான் வள்ளலாரைப்பாட வைத்த இன்றைய தள்ளரிய சென்னைக்குதான். இன்றைக்கு அது தொலைவே இல்லை.  அந்த தொலைவே அவருக்கு போதிய தொலைவாக இருந்தது  
சுவாமிகள் ஊரைவிட்டு நீங்குவதற்கு நீருக்குள் தோணியில் ஏறி உட்கார்ந்து இருக்கிறார். சுவாமிகளி்ன் துணைவியார் காளிமுத்தம்மாள் கையில் கடைசி மகனை பிடித்துக்கொண்டு சாமிகளை தடுத்துவிட பதைபதை்து ஓடி தவித்து வருகின்றார்.
பதைத்துவரும் மனைவியையும், குழந்தையையும் பார்க்கும் சாமிகள் தோணியில், மனைவியும் குழந்தையும் கரையில், கரைகு்க்கும் நீருக்கும் இடையி்ல் ஒரு ஊசல் ஆட்டம்.  சாமி தோணியில் இருந்து இறங்கிச்சென்று “இனி என்னை தேடிவரமாட்டேன் என்று சத்தியம் செய்” என்று கைநீட்டுகின்றார்.
அன்னை சத்தியம் செய்கின்றார். சாமிகள் தோணியில் ஏறி தொலைவுக்கு சென்றுவிட்டார்.  அதன் பின் அன்னையும் தேடிப் போகவில்லை. சாமியும் திரும்பி வரவில்லை. பாறை உடைந்ததுபோல் அப்படி ஒரு விடுபடல். 

கிருபானந்தவாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக துறவுப்பற்றி சொல்வார். துறவறம் போகிறேன் என்று திண்ணைவிட்டு இறங்கிய கணவன் தெருவை தொட்டதும் திரும்பி மனைவியை அழைத்து “திண்ணையில் இருக்கும் சுண்ணாம்பு டப்பாவை உள்ளே எடுத்துவை” என்பான். 
அப்பாவின் இளமைகாலத்திலேயே தொலைவு தொலைவு என்று ஊரைவிட்டு தொலைந்துபோகும் ஒருவரை இப்போதும் ஏப்பவாவது ஊரில் பார்ப்பேன். அவருடைய மனைவி குழந்தையுடன் அவரை விட்டு தொலைவுக்கு சென்றதுதான் மிச்சம். அவரால் தொலைவுக்கு செல்லமுடியவில்லை.
தொலைவு என்பது சாவுதான். சிலரால் மட்டுமே வாழ்வதற்காக சாகமுடிகிறது.
சதுரமோ செவ்வகமோ நீளம் அகலத்தோடு உயரம் இருந்தால்தான் அது வடிவமும் உருவமும் கொள்கிறது. வாழ்க்க்கையும் தொலைதல் இருத்தல் இடையில் ஊசாலட்டமும் இருக்கும்போதுதான் வாழ்க்கை வடிவமும் உருவமும் கொள்கிறது. ஆதன் ஊர் எல்லையையே தாண்டாத முதுசாத்தனிடமும் ஆசி வாங்குகின்றான். ஊரிலேயே இருக்காத ஊரையும் தாண்டாத மிளையனிடமும் ஆசி வாங்குகின்றான்.
முதுசாத்தன் சொல்லில் செயலில் உறவில் அமுதம் என்றால், மிளையன் சொல்லில் செயலில் உறவில் நஞ்சு. அமுதும் நஞ்சும் அருகருகே இருக்கிறது. இரண்டையும் அணையாமல் வாழ்தல் என்பது ஏது?   ஊஞ்சல் கிழக்கே செல்வது மேற்கே செல்வதற்கான சக்தியை பெறுவதற்கு. மேற்கே செல்வது கிழக்கே வருவதற்கான சக்தியை பெறுவதற்கு. ஆதன் அமையும் முதுசாத்தனிடமும், அலையும் மிளையனிடமும் செல்வது தொலைதலின் சக்தியை பெறுவதற்கு.
எனக்கு தெரிந்த பெரியவர் தனது தொன்னூறு வயது வரை வீடு காடு என்றே வாழ்ந்தார். அவருக்கு பக்கத்தில் ஊர் என்று ஒன்று இருக்கிறது என்று தெரியுமா? என்று நினைத்துக்கொள்வேன். மகன்களாலும், மகள்களாலும், பேரப்பிள்ளைகளாலும் நிறைந்த குடும்பம். அவரை புதைத்து தலைமாட்டில் வைத்த ஆலம்போத்து இன்று பெரிய ஆலமரமாகி மண்ணை ஆயிரம் கரங்களால் அனைத்து நிற்கிறது. இவர் ஒரு முதுசாத்தன். மிளைஞன் ஆகாயதாமரைபோல, இருப்பார்கள் ஆனால் இருந்த இடத்திலே இருக்கமாட்டார்கள்.    ஒரு ஊர் என்றால் இப்படிதான் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் சராசரியான ஊசலாட்டம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அப்பொழுதுதான் ஊர் என்பது ஒரு வடிவமும் உருவமும் கொண்டு திகழ்கிறது.  இந்த மாதரியான ஊர் வாழ்க்கை சூழ்நிலையில் இருந்துதான் ஒரு உயிர் தனக்கான தொலைவுக்கு செல்லவேண்டும்.
நித்தியசைதன்ய யதி என்னும் ஆதன்கள் அப்படிதான் வந்துக்கொண்டு  இருக்கிறார்கள். வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபு.   
களிற்றியானை நிரை-03 அமைதல் அலைதல் தாண்டி தொலைதல் என்கிறது.

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.