Wednesday, December 18, 2019

களிற்றியானை நிரை-05 உதி்ப்பும் உழைப்பும்அன்புள்ள ஜெ வணக்கம்.
“மேதமை என்பது தொண்ணூறு விழுக்காடு உழைப்பு, பத்துவிழுக்காடு உதிப்பு” என்று ஐன்ஸ்டீன் சொல்கிறார்.
ஒரு விழுக்காடாவது உதிப்பு இல்லை என்றால் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு உழைத்தும் ஒரு விழுக்காட்டையும் உருவாக்க முடியாது.
ராஜராஜபெரும்தச்சனில் உதித்ததுதான் ராஜராஜசோழன் உழைப்பால் இன்று தஞ்சையில் வான்தொடுகின்றது. தஞ்சைபெருஉடையார் கோயில்.
உதிப்பது எப்படி?
விண்ணிருந்து சொட்டுகிறது, நற்சிப்பிகள் அந்த துளியை ஏந்தி முத்தாக்கிவிடுகின்றன. ஆழத்திலிருந்து ஊறுகிறது. நல்லவிதைகள் அதை அதை கனிரசமாக்கிவிடுகிறது.  
“கடினமான கணிதத்திற்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் உங்களால் விடை சொல்லமுடிகிறது?” என்று கேட்கும்போது அன்னை ஸ்ரீநமகிரி தாயார் கொண்டு வந்து தருவதாக  கணிதமேதை ராமானுஜம் சொல்கிறார்.   
ரேடியம் கண்டுபிடிக்க முயன்ற மேடம் கியூரி,தனது கண்டுபிடிப்பு முழுவதும் தோற்று நிற்கதியாகி நிற்கும்போது, ஒரு நாள் இரவு தூக்கத்திலிருந்து எழுந்து ஆய்வகம் சென்று ஒரு சூத்திரத்தை எழுதிவைத்துவிட்டு வந்து படுத்துவிடுகிறார். வழக்கம்போல காலையில் மீண்டும் ஆய்வகம் சென்றவர் தான் எழுதிய அந்த சூத்திரத்தை பார்த்து ஆச்சர்யமும் பரவசமும் அடைகிறார். ரேடியம் கண்டுபிடிக்கிறார்.அவருக்கு தூக்கத்தில் உதித்தது அந்த அற்புதம். அந்த உதிப்பும் அவரின் உழைப்பும் அருக்கு அறிவியல் உலகத்தில் சிம்மாசனம் அமைத்தது. நோபல்பரிசை சிரத்திற்கு அணிவித்தது. 
தூங்குபவர்களுக்கு எல்லாம் உதித்துவிடுமா?  நூறு விழுக்காடு உழைக்க உரம் கொண்டவருக்கு உதிக்கிறது.   
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் –என்கிறார் திருவள்ளுவர்.
ஹஸ்திபதன் தான் கற்ற கலைக்காக தேய்ந்து வௌவாலாகவும் மாறுகின்றான். புதைந்து நாகமாகவம் ஆகின்றான். அத்தனை ஆழமான கற்றல் உடையவருக்கு, தான் கற்றகலைக்காக அத்தனை பெரிய உழைப்பை போடுவற்கு தயாராக இருப்பருக்கு உதிப்பு வெளியில் இருந்தோ உள்ளிருந்தோ வருகிறது. சேக்கிழாருக்கு நடராஜர் கோயில் கருவறையில் இருந்துவருகிறது. மேடம்கியூரிக்கு கனவிலிருந்து வருகிறது. ஹஸ்திபதனுக்கு வானில் இருந்து அமராவதி நிழலாக விழுகிறது.
இளையராஜா “எனது இசைகளை எனது அறிவால் நோட்ஸ்களாக உருவாக்கி தந்தால் நன்றாகத்தான் இருக்கும், அதற்கு ஒரு எல்லை இருக்கம். அதற்கும்மேலே அதில் ஜீவன் இருப்பதற்கு காரணம், அது மேலே நாதசாகரத்தில் இருந்து வருகிறது. எனக்கு காட்டப்படுகிறது. அதை எடுத்து அப்படியே வழங்குகிறேன்” என்கிறார்.   
//கற்றல் நிகழும் கணங்களில் தான் மானுடன் என்னும் நிலையிலிருந்து ஒரு கணம் எழுந்து பிறிதொருவனாக ஆகி மீள்வதை கற்போன் அறிகிறான்//-களிற்றியானை நிரை-05.
வழக்கமாக முடிவெட்டிக்கொள்ளும் கடையில் கூட்டம் இல்லை, நல்லதாகிவிட்டது.  உள்ளே நுழைந்தால் வழக்கமாக முடிவெட்டுபவர் இல்லை. எழுபது வயது பெரியவர் பெஞ்சில் உட்கார்ந்து இருந்தவர் எழுந்து “உங்கள் ஆளு இன்னைக்கு இல்லை, நாளைக்கு வருகிங்களா தம்பி? இல்ல, என்னிடம் வெட்டிக்கிறீங்களா?” என்றார்.
திரும்பிவிடத்தான் நினைத்தேன். நாளைக்கு கல்லூரி, இன்றுவேறு கூட்டம் இல்லை. “சரி” என்று உட்கார்ந்துவிட்டேன்.
பெரியவர்களால் பேசாமல் இருக்கமுடிவதில்லை. பேச்சுதான் அவர்களை இளைய தலைமுறையுடன் இணைக்கிறது. இளமையாகவும் நினைக்க வைக்கிறது. அதற்கும்மேலாக அவர்கள் இளைய தலைமுறைக்கு ஒரு அனுபவத்தை கொடையாக கொடுக்க நினைக்கிறார்கள். அதுதான் அற்புதம். அதுதான் இளைய தலைமுறைக்கு புரியவில்லை. 
யாரு? பேரு? அப்பா? சொந்தஊர்? என்று சொல்சொல்லாய் என்னை அவருக்குள் சேர்த்துக்கொண்டே சென்றார்.
கைவிரல்கள் தலையில் விளையாடின. முடிவெட்டுவது தொழில் இல்லை கலையும்கூட என்று காட்டினார். இப்பொழுது தொழில் இருக்கிறது கலையில்லை என்றார்.  
அவருடன் பழகும்போதுதான் தெரிந்தது. நாதஸ்வர வித்வான் மற்றும் குஸ்தி பயில்வான். சந்தியாராகம் தாத்தா திரு.சொக்கலிங்க பாகவதர்போல இருப்பார். இவரா குஸ்திபயில்வான் என்று எண்ணிக்கொண்டேன்.  அவருடைய இணை நண்பர்களையும், அவரின் மாணவர்களையும் சொன்னார். நிஜம்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒரு திருவிழா கூட்டத்தில் குஸ்திவிளையாட்டு, ஒவ்வொரு இணைகளையும் தூக்கிப்போட்டு பந்தாடி இருக்கிறார். இணைகள் எல்லாம் முடிந்து இறுதியில் தனியாக நின்றவர் ஆர்வமிகுதியில் வலது இடது தொடைகளை தட்டி சலாவரிசை எடுத்து உட்கார்ந்து தரையை வலது கையால் அடித்து எழுந்து நின்று இருக்கிறார்.
கூட்டத்தில் குஸ்திப்பார்த்துக்கொண்டு இருந்த ஒருவர் சட்டையை கழட்டி கூட்டத்தில் எறிந்துவிட்டு, வேட்டியை மடக்கி லங்கோடாக கட்டிக்கொண்டு களத்தில் குதித்து சலாவரிசை எடுத்து குருவணக்கம் செலுத்தி நான் தயார் என்று நிற்கிறார். வாட்டசாட்டமான உருவம், கரளைகட்டை சுற்றிய உடம்பு.  
இவர் நினைத்துப்பார்க்கவே இல்லை இப்படி ஒரு எதிரி எதிரில் வந்து நிற்பான் என்று.
அப்பதான் அவருக்கு புரிந்து இருக்கிறது. தான் உற்சாகத்தில் தரையில் அடித்து எழுந்தது. ஒரு அறைகூவல் என்று.  அறைகூவல் விட்டப்பின்பு ஏற்றுதானே ஆகவேண்டும்.  அவரை இவரும், இவரை அவரும் புரட்டி எடுத்திருக்கிறார்கள். அவரிடமிருந்து இவரும் இவரிடமிருந்து அவரும் கற்று இருக்கிறார்கள். அன்று அவர் இவரை கட்டிப்பிடித்து பாராட்டி இருக்கிறார்.
மனிதர்கள் சும்மா இருக்க நினைத்தாலும் அவர்கள் கற்ற கல்வி அவர்களை சும்மா இருக்கவிடுவதில்லை. நாடோடி விட்டுவிடத்தான் சொல்கிறார். நாடோடி சொல் புலவரை தட்டி எழுப்பி அவைகளத்தில் நிறுத்திவிடுகிறது, புலவர் பெருங்கந்தரை எழுந்து களமாட வைத்துவிடுகிறது. மனுசன் புரட்டி புரட்டி எடுக்கிறார். பனி என்ற ஒரு சொல்லிருந்து காலம் புடவி பிர்மம் வரை சென்று விவர்த்தவாதம் பரிணாமவாதம் வரை சென்று ஆடி முடிக்கிறார். பெரும்கந்தர் பெயர் சிறப்பு.  அன்புள்ள ஜெ மயங்கவைத்து தெளியவைத்து அடித்ததுபோல் இருந்தது.
அப்படியென்றால் அரிசியும் சோறும் வேறுவேறு பொருட்கள்” என்று அழிசி சொன்னான் என்பதுதான் அற்புதம்.
இந்த உலக வாழ்க்கையின் சிறப்பே அவர் அவர் கையளவுக்கே அள்ளி ஆனந்தப்படும் நிலையில் இருப்பதுதான்.
அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.