வெண்முரசு காவியம் இன்றைய காலத்திற்கேற்ப எழுதப்படுகிறது. மூல கதைகளில் வரும் மாய நிகழ்வுகள் பொருத்தமான யதார்த்த நிகழ்வுகளாக மாற்றப்படுகின்றன. அவை மூலகதைகளின்போக்கிற்கு எவ்வித முரணையும் அளிக்காமல் உறுத்தலுமின்றி நாவலில் இணைகின்றன. சில மாய நிகழ்வுகள் உருவகங்கள் என மாறுகின்றன. அது உளச் சிக்கலை உருவகப்படுத்துவதாக, ஆன்மீக தத்துவங்களை வெளிபடுத்த, பிரபஞ்ச உருவாக்கம், இயக்கம் போன்றவற்றை விளக்க, மனித பண்பாட்டின் வளர்ச்சி போன்றவற்றை எடுத்துரைக்க பயன்படுத்தப்படுகின்றன.
இவை எதுவும் வெளிப்படையானவை அல்ல. வாசகன் தானே உய்த்துணரும்படி பூடகமாக விடப்பட்டுள்ளன. இது இந்த நாவலுக்கு காவியத்தன்மையை அளிக்கிறது. நம் சிந்தனைக்கேற்ப இந்த உருவகங்கள் நமக்கு பலவாக பொருள் தந்து நம் வாசிப்பின்பத்தை கூட்டுகின்றன. ஒவ்வொரு முறை படிக்கும்தோறும் ஒரு சிந்தனையை நாம் பெற முடிகிறது. இன்று அன்னையக் கொல்லும் அரக்கன் கதை வெளியாகியுள்ளது. இக்கதையை நான் இப்படி ஒப்பிட்டுக்கொள்கிறேன்
ஒரு கூட்டுக்குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். அதில் தாய் தந்தை மற்றும் பல குழந்தைகள் இருப்பதாக கொள்வோம். அந்தக் குடும்பத்தையே ஒரு தாயென நாம் உருவகித்துக்கொள்ளலாம். அந்த குடும்ப நபர்கள் அனைவரும் அந்தக் குடும்பத்தின் குழந்தைகள். அக்குடும்பம் அக்குழந்தைளுக்கு உணவூட்டி வளர்க்கும் அன்னையென ஆகிறது. அதைப்போல நாம் ஒரு சமூகத்தை அல்லது ஒரு நாட்டை ஒரு அன்னையெனக் கொள்ளலாம். அது தன்னுள் கொண்டிருக்கும் மக்கள் யாவரும் அதன் குழந்தைகள் , அதை அழிக்க முற்படும் அரக்கன் யாரெனக் காண்போம்.
திருட்டு கொள்ளை போன்ற சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களா? அவர்கள் மற்ற குழந்தைகளை தொந்தரவு செய்து விளையாடும் சண்டித்தனம் செய்யும் குழந்தைகள் போன்றவர்கள். அவர்களை அன்னை அதட்டி தேவைப்பட்டால் தண்டித்து சரி செய்யப்பட வேண்டியவர்கள். அவர்களல் சமூக அன்னைக்கு பெரிதான ஆபத்து ஏதுமில்லை.
ஊழல்வாதிகளா? அவர்கள் மற்ற குழந்தைகளுக்கு சேர வேண்டிய உணவில் ஒரு பகுதியை தெரிந்தும் தெரியாமலும் எடுத்துக்கொள்பவர்கள். இவர்களால் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் அன்னையும் தன் நலனிழப்பாள். இருந்தாலும் இவர்கள் சமூக அன்னையை கொல்பவர்கள் இல்லை. ஏனென்றால் சமூகம் இருக்கும்வரைத்தான் இவர்கள் உண்டு கொழிக்க முடியும். இந்த சுயநலனுக்காவது சமூகம் முன்னேற வேண்டும் என நினப்பார்கள். அதனால் சமூகத்திற்கு இவர்களால் நலிவு ஏற்படுமே தவிர சமூகம் அழியவேண்டும் என நினைப்பவர்கள் இவர்களில்லை.
முதலாளிகளா? அவர்கள் மற்ற குழந்தைகளை தன்னுடன் சேர்த்து குடும்பத்திற்கென பொருள் சேர்ப்பவர்கள். ஆனால் அந்த பொருள் பெரும்பகுதியை தனக்குரியதென்று எடுத்துக்கொண்டு அன்னையின் குடும்பத் தேவைக்கு கூடியவரை குறைவாகத் தர நினைப்பவர்கள் நினைப்பவர்கள். அன்னை சில சம்யம் அவர்களை அதட்டி வாங்க வேண்டி இருக்கும். இவர்கள் தான் உயர இந்த சமூகம் தேவை என நினப்பதால் சமூக அழிவதை எதிர்பார்க்க மாட்டர்கள்.
இடதுசாரி சிந்தையுள்ளவர்கள், யார் எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அனைவருக்கும் ஒரேஅளவு உணவுதான் அளிக்கவேண்டும் என வாதிடுபவர்கள். அவர்கள் சொல்வது சரிபோலத்தான் தோன்றும். ஆனால் அவர்களின் இந்த நிலை, குடும்ப உறுப்பினர்களின் பொருள் சேர்க்கும் ஊக்கத்தை வெகுவாக குறைத்து சமூகம் வறுமையடைய காரணமாகிவிடுகிறது. இவர்கள் செய்கை சமூகத்தை நலிவாக்குகிறது என்பதை அறியாதவர்கள்.
பின்னர் யார்தான் சமூகத்தை சாகடிக்க துணிபவர்கள்? அவர்கள் சமூகத்தை வெட்டி எறிய நினைப்பவர்கள். இவர்கள் சமூகம் சிதைவடையவேண்டும் என நினைப்பவர்கள். மக்களுக்கு இனம் மதம், மொழி, சாதி என பலவிதமான உணர்ச்சிகளைத்தூண்டி சமூகத்தை பிளக்க நினைப்பவர்கள். ஒருவருக்கொருவர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இவர்கள் ஒரு பிரிவின் காவலன் என்று தன்னை வரிந்துகொள்வார்கள். மற்றொரு பிரிவினரில் சில செய்யும் தவறுகளை பெரிதுபடுத்தி தன் பிரிவினரை அச்சமூட்டி மற்ற பிரிவினரின் மேல் வெறுப்பு பகை கொள்ள வைப்பார்கள். அதே நேரத்தில் தன்னை சமூகத்தை காக்கவந்தவன் எனச் சொல்லிக்கொள்வர்கள். சமூக அமைதியை ஒற்றுமையை வேண்டி அதற்காக பணிபுரிபவரை எளனைப்படுத்தி பழிசொல்லி அழிக்க முயல்வார்கள். ஒன்றுபட்டு ஒரு சமூகம் எச்சரிக்கைகொண்டு முதலில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது இவர்களிடம்தான். இவர்கள் சமூகம் என்ற அன்னைக்கு பேராபத்தானவர்கள். இவர்களே அன்னையைக் கொல்லத் துடிக்கும் அரக்கர்கள்.
தண்டபாணி துரைவேல்