Thursday, March 31, 2016

பெண்ணின் கரவு (பன்னிரு படைக்களம் - 5)      சிறுவர்கள் மற்றவர் பொருளை ஒளித்து வைத்து விளையாடுவது வழக்கம். ஒளித்துவைக்கப்பட்டபொருள் அப்படி ஒளித்துவைக்கப்பட்டதாலேயே அது முக்கியமானதாகிவிடும். அதை எப்படியாவது  கண்டு பிடித்துவிட மற்றவர் முயல்வர்.  அந்த விளையாடலை பெண்கள் வளர்ந்த பின்னரும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். வளர்ந்த பெண்கள் இனி பொருட்களை ஒளித்துவைத்து விளையாடுவது இல்லை. அவர்கள் தன் உள்ளத்தை ஒளித்துவைத்து விளையாடுகிறார்கள். ஆண்களும் தம் உள்ளத்தை மறைக்கிறார்கள். ஆனால் அது பெரும்பாலும் அயலார்களிடம். நெருங்கிய உறவினரிடம்  நட்பினிடம், காதலியிடம் அவர்கள் தம் உள்ளத்தை மறைப்பதில்லை. அப்படி மறைக்க முயன்றாலும் பரிதாபமாக தோற்றுவிடுவார்கள். ஆனால் ஒரு பெண் ஒன்றை மறைக்க வேண்டும் என நினைத்தால் முற்றிலுமாக மறைத்துக்கொள்கிறாள். அவள் அப்படி தன் எண்ணங்களை கரவு கொள்வதற்கு காரணங்கள்கூட தேவைப்படுவதில்லை.


   அவள் பலசமயம் தனக்கு இதில் விருப்பம் என்ற எண்ணத்தைக் கூட மறைத்துக்கொள்வாள்.  அவள் குழந்தை முகமும் மென்மையான உடலும் நயமான பேச்சும் அவள் எண்ணங்களை முற்றிலுமாக நம்மிடமிருந்து மறைத்துவிடுகின்றன. முக்கியமாக அவள் தன் அறியாமையை என்றும் வெளிக்காட்டிக்கொள்வதில்லை.  ஒன்றை அறியாத போது அதை தனக்கு பிடித்தமில்லாதது என தெரிவிக்கிறாள். ஒன்றின்மேலான வெறுப்பை பயமென காட்டிக்கொள்வாள். அருவருப்பை வெறுப்பு என காட்டுவாள். நன்கு தெரிந்த ஒன்றை  தெரியாது என நடிப்பாள்.


  எவ்வளவு நெருங்கிப் பழகிய காதலினடமும் அவள் தன்  முழுக் காதலை திறந்து காட்டுவதில்லை. அப்படியே முழுமையாக காதலிப்பதாக சொல்லும் காதலியிடம் ஒரு விலகல் மிச்சமிருப்பதை காதலன் அறிந்து திகைத்து நிற்பான்.  எப்போதும் காதலனுக்கு மெலிதாக ஒரு ஐயம் இருக்கும்படி நடந்துகொள்வாள். ஒருவரிடம் தான் காதல்கொண்டிருப்பதைப்பொல் ஒரு உடல் மொழியிலும் மற்றொரு  உடல்மொழியில் அவனை அவள் அலட்சியம் செய்வதாகவும் காட்டி அவனை குழம்பவைப்பாள். அவள் உள்ளத்தில்  என்னதான் மறைந்திருக்கிறது என ஆண் தவித்துப்போவான்.  


   காமத்தில் ஒரு பெண் கொள்ளும் கரவு போல ஆணைக் குழப்புவது எதுவும் இல்லை. அவள் காம நுகர்வுக்கான மன நிலையில் இருக்கிறாளா என்பதை ஒருபோது முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. ஆண் அருகில் செல்லும் போது விருப்பில்லாததுபோல் விலகுவதும்,  விலகிச் செல்லும் போது சீண்டி அழைப்பதும்  என ஒரு கண்ணாமூச்சி ஆட்டம். அவள் அந்த நுகர்வில் நிறைவுற்றாளா, இல்லையா, அப்படி காட்டிக்கொள்கிறாளா என எதையும் ஒரு ஆண்மகன் அறிய முடிவதில்லை. இயற்கையாகவே ஆண் இதில் ஒரு பெண்ணிடம் எதையும் ஒளித்துவைக்க முடியாது. தன் துணைவன்  வேறொரு பெண்ணை காண்பதில் இருக்கும் காமத்தை ஒரு பெண் எளிதில் அறிந்துகொள்கிறாள்.  வெகுசில பெண்கள் வெளியுறவில் ஈடுபடுவதை,  யார்சொல்லியோ அல்லது நேருக்கு நேராக பார்த்தாலன்றி, அவர்கள் நடத்தையிலிருந்து அந்த கணவன்களால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.


  உறவுகளிடம் தான் கொண்டிருக்கும் கோபத்தை வஞ்சத்தை, வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கும் திறன் பெண்களுக்கிருப்பதைப்போல் எவருக்கும் இல்லை. சிறு விஷயங்களுக்கான் பகைகளைக்கூட பொறுத்திருந்து வஞ்சம் தீர்ப்பதில் அவர்கள் வல்லவர்கள். மாறாக ஒரு ஆண் தான் கொண்டிருக்கும் சிறு பகைளை மறைப்பதில்லை. அப்போதே வெகுண்டெழுந்து தன் கோபத்தை வெளிக்காட்டிக்கொள்வான்.


   ஒரு ஆண் தன்னை வலிமையனவனாக காட்டிக்கொள்வான். ஆனால் அவன் மனம் சீக்கிரம் தடுமாறும். மாறாக பெண் தன் மனத் திண்மையை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. அது அவள் சிக்கலான தருணங்களில் இருக்கையில் வெளிப்படும் போது நாம் பிரமித்து நிற்போம்.  இத்தகைய துணிவு, உறுதி, அச்சமின்மை,  போராடும் உத்வேகம் அவள் பெற்றிருப்பதை நாம் அறிந்திருப்பது இல்லை.  துணையிழந்த ஆண்தான் துவண்டுவிடுகிறான். ஆனால் ஒரு பெண் அந்தக் குடும்பத்தை தூக்கி நிறுத்துகிறாள். ஆண் இல்லாத குறையை அக்குடும்பம் உணராவண்ணம் போராடி வெல்லும் பல பெண்களை பார்த்திருக்கிறோம். ஆனால் சிறு  கரப்பான் பூச்சிக்கு பயப்படுவதாக வெளிக்காட்டி தன் மனத்திண்மையை தன் பூவுடலுக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள். 


  இப்படி தன் விருப்பை வெறுப்பை, அறிவை, அறியாமையை, காதலை, காமத்தை, மனத்திண்மையை வெளிக்காட்டாது இருப்பதால் அவள ஒரு மர்மமானவளாக ஆண்களின் கண்களுக்கு தெரிகிறாள். அவ்வப்போது மின்னலென வெளிப்படும் அவள் கரவுகொண்டிருக்கும் குணங்கள் ஒரு ஆணை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. அந்த அச்சம் ரம்பனின் உள்ளத்தில் எழுகிறது. அதுவும் முழுமை என்பது பூவுலகில் இல்லாத ஒன்று. அவளின்   முழுதளித்தல் என்பது அவனுக்கு கடும் ஐயத்தை கிளப்புகிறது, அவள் உண்மையில் கரவு கொண்டிருப்பது  எதுவென அறிய துடிக்கிறான்.  அந்தக் கரவுகொண்டிருந்த உண்மை மகிஷி என எழுந்து அவனை அழிக்கிறது. 


   பெண்ணில் ஒளிந்திருந்து எழும் இந்த பேராற்றலை உணர்ந்த நம் பெரியவர்கள் போர்க்கடவுளை, மனிதர்களை காவு வாங்கும் பெருநோய்களுக்கான இறையுருவை, தவறுகளுக்கு தண்டிக்கும் ஊர்தெய்வத்தை பெண்வடிவில் உருவாக்கி வழிபடுகிறார்கள். உண்மையில் யோசித்துப் பார்த்தால் பெண்தானே உலகின் உண்மைத் தேவை அவளே கருக்கொண்டு உயிர்களை படைப்பிக்கிறாள். உயிர்களுக்கு உணவளித்து ஊட்டி வளர்க்கிறாள். ஆண் அந்த வேலைக்கு உதவும் ஒரு சிறு உதவியாளன் மட்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அவனோ ஒரு எஜமானன்போல் நடந்துகொள்கிறான்.   இந்த உண்மையை அறிந்திருக்கும் பெண் ஒரு புன்னகையுடன் இந்த உண்மையை தனக்குள் ஒளித்துவைத்துக்கொள்கிறாள். அவனின் பணிப்பெண்போல் தன்னைக் காட்டிக்கொள்கிறாள். இராணித்தேனிக்காக உணவு சேகரித்துக்கொடுக்க. பாதுகாப்புக்கு தன் உயிர் கொடுத்து போரிட என்றே படைக்கப்பட்டுள்ள வெறும் வேலைக்காரத் தேனீக்கள் அல்லவா ஆண்கள். 

தண்டபாணி துரைவேல்