ஜெ
பன்னிருபடைக்களத்தின் செறிவான வார்த்தைகளை ஒன்றுக்கு இருமுறை வாசித்துத்தான் முழுமைசெய்ய முடிகிறது. பல அத்தியாயங்கள் சிறியவை. ஆனாலும் பலமுறை வாசிக்கவேண்டியிருப்பதனால் நீளமானவை என்றஎண்ணமே எழுகிறது
இன்றுகாலைதான் இதை வாசித்தேன்
அகச்சொற்களுடன் அறியாச் சொற்கள் வந்து இணைந்துகொள்ளவே அவர்களின் உள்ளம் அவர்கள் அறியாத பேருருவம் கொண்டு விரிந்தது. தங்களுள் ஓடும் எண்ணங்களை தாங்களே உணரும் கணங்களில் அவர்கள் அலறியபடி தலையை கைகளால் அறைந்துகொண்டனர். கைகளை விரித்தபடி எழுந்து வெட்டவெளிநோக்கி ஓடினர். ஆடைகளை கழற்றிவிட்டு நெஞ்சிலும் முகத்திலும் அடித்துக்கொண்டு நடுங்கி உடல்குறுகினர். தங்களுக்குள் குடியேறியவற்றை பிடுங்கி வெளியே வீசுவதுபோல கைகளை அசைத்தனர். அவர்கள் வாயிலிருந்து அவர்கள் எண்ணாத சொற்கள் ஓயாது வெளியே கொட்டிக்கொண்டிருந்தன.
சொற்கள் பொருளிழந்து ஒலிகளே என்றானபோது தானவத்தின் ஒவ்வொரு பருப்பொருளும் பெயரை இழந்தது. பெயரிழந்தவை பொருளையும் இழந்தன. பொருளிழந்த பொருட்கள் வெற்றிருப்பாயின. வெற்றிருப்புகள் அவர்கள் மேல் முட்டின. அவர்களை வீழ்த்தின. அவர்களைச் சூழ்ந்து உளம்பதைக்கச்செய்யும் அமைதியுடன் அமர்ந்திருந்தன. மொழிப்பொருளென்றாகி அவர்களைப் பிணைத்திருந்த ஒவ்வொன்றும் சிதற உருவாகி வந்த பெரும் பொருளின்மையில் ஒவ்வொருவரும் முழுத்தனிமையை அடைந்தனர். ஒருவரோடொருவர் விழிமுட்டாது உடலுரச அங்கே அவர்கள் சுற்றியலைந்தனர்
பைத்தியம் என்று ஒற்றைவரியில் சொல்லிவிடலாம். ஆனால் இப்படி வாசிக்கையில் மனம் திடுக்கிடுகிறது. கொஞ்சமேனும் இந்த அனுபவம் அத்தனை பேருக்கும் அமைந்திருக்கும்
முதல் பத்தியில் அகம் குலைவது எப்படி என்ற விளக்கம். இரண்டாம் பத்தியில் அதை ஒட்டி புறவுலகும் எப்படிக் குலைந்துவிடுகிறது என்னும் விளக்கம்.
பயமுறுத்தும் நாவல்
சாரங்கன்