Thursday, April 7, 2016

ஆழமும் இருப்பும்:



ஒரு கதை குழந்தைக் கதையாகும் போதே அது கொள்ளும் கரவுகள் பன்மடங்காகி விடுவதையும், அக்கதை சொல்லல் கொண்ட அடுக்குகள் மேலும் மேலும் அடர்த்தியாகி விடுவதையும் வெண்முரசு மீண்டும் மீண்டும் நிறுவி வருகிறது. ரம்பன், கரம்பன் தவம் செய்யும் அந்த பகுதி அப்படியே ஒரு குழந்தைக் கதை. ஒரு ஊருல எனத் துவங்கி ஒரு இரு வயது குழந்தைக்கு எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் அது அவ்வளவு மட்டும் தானா?

கரையில் தீயின் மேல் தவமியற்றும் ரம்பனை ஓர் யானையும், நீரடியில் மூச்சடக்கித் தவமியற்றிய கரம்பனை ஓர் முதலையும் இழுகின்றன. இது ஒரு எளிமையான கதை. ஆனால் அக்கதையோடு கஜேந்திர மோட்சத்தைக் கொண்டு வந்து சேர்த்த போது அந்நிகழ்வின் தத்துவம் மிகப் பெரிதாக நம்முன் விரிகிறது. தன்னில் இருந்த கரம்பனை முதலைக்கு கொடுத்து தான் மட்டுமாக நிறைந்திருக்கும் ரம்பனிடம் யானையின் மீது வந்த இந்திரன் கூறுவதாக வரும் இச்சொற்கள் “நூறு யுகங்களுக்கு முன்பொரு நிலத்து யானையை நீர்முதலை கவ்வியது. ஆழம் இருப்புடன் போரிட்டது. அப்போர் முடிவதற்குள் ஆழியுடன் இறைவன் எழுந்தான். இன்று நான் ஆழமென வந்து முழுமையாக உன்னை வென்றுள்ளேன்.”, கஜேந்திர மோட்சம் என்ற குழந்தைக் கதையின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. நாம் நாமாக இயங்கும் இந்த உலகிற்கும், அதில் நம் இருப்பிற்கும், நம் அக ஆழத்தில் நாம் தவிர்த்தவற்றால் ஆன இருளின் விசைக்குமான போராகவே கஜேந்திரனைக் கவ்விய முதலையின் கதை வருகிறது. ஆம், அது இருப்பிற்கும் ஆழத்துக்குமான போர். அன்று அந்த போரில் அறமெனும் சக்கரம் ஆழத்தை வீழ்த்தியது. இன்று அதே ஆழம் ரம்பனில் விழைவை ஏற்படுத்தி அவனில் இருந்த கரம்பனை வென்றது. விழைவின் தெய்வம் தானே இந்திரன்.

பன்னிரு படைக்களத்தின் ஒவ்வொரு வரியும் கூர்ந்து கூர்ந்து வாசித்தாக வேண்டும். போகிற போக்கில் வரும் ஒரு வார்த்தை, வரி மொத்தத்தையும் கவிழ்த்துப் போட்டு வேறு ஒன்றாகக் காட்டும். கதை முழுக்க முழுக்க இருமையைப் பற்றியே பேசுகிறது. இருமையும், அதன் ஒன்றாக வேண்டும் என்ற விருப்பும், அவ்விருப்பு இயற்கைக்கு எதிர் என்பதும், அந்த ஒன்றாதல் இறுதியில் தன்னழிவில் தான் முடியும் என்பதைப் பற்றியதாகவே இருக்கிறது. ஆனால் கதை சொல்லலிலும் அந்த இருமை கூடியுள்ளதே நமக்கு ஜெ வைத்திருக்கும் சவால். ஒரு வகையில் வாசித்து முடித்தால் வேறு ஒரு வகையிலும் அதே பகுதியை வாசிக்க இயலுகிறது. இரு வகை வாசிப்பும் சரியாகவே அமைகிறது. இரண்டில் ஒன்றை உண்மை என்று முடிவும் செய்ய இயல்வதில்லை. மிகச் சரியாக இதை ஓர் உவமை மூலமாகவே பன்னிரு படைக்களம் ஊசலின் ஆட்டம் என்கிறது. நாம் ஒரு திசையில் மட்டுமே வாசிக்க இயலாது. நாம் வாசிக்கும் ஒரு திசையின் எல்லையில் மறுதிசைக்குச் செல்லும் விசையை வைத்திருக்கிறது இந்நாவல். இரு திசையிலும் அலைந்து அலைந்து சமநிலைக்குச் செல்ல வேண்டியதே வாசகராக நம்முன் இருக்கும் அறைகூவல்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்