ஜெ
வெண்முரசின் வம்சப்பட்டியல்களைப்போன்ற
சிலவிஷயங்கள் வேறு சிலவும் உண்டு. ஒன்று வாழ்த்துக்கூவல்கள். இரண்டு வரவேற்புமுறைமைகள்.
மூன்று அவைகூடும் சடங்குகள். அவைபுகுவது வெளியேறுவது. நான்கு நகர்நுழைவு ஐந்து நகரைவிட்டு
நீங்கிச்செல்லுதல். இப்படிச் சில விஷயங்கள் வந்தபடியே இருக்கின்றன. சின்னச்சின்ன மாற்றங்களுடன்
ஒன்றே திரும்பத்திரும்ப நிகழ்கிறது.
ஆரம்பத்தில் இது
ஒரு சலிப்பு தந்தது. இன்றைக்கு இந்தச்சலிப்பே இந்நாவல் உத்தேசிப்பது என நினைக்கிறேன்.
மீண்டும் மீண்டும் இதெல்லாம்தான் நடக்கிறது. டெல்லியிலும் சென்னையிலும் இதுதான் இன்றைக்கும்
நடக்கிறது. இப்படித்தான் நடந்துகொண்டே இருக்கும். வம்சங்கள் வந்துபோகும். எதுவும் மாறாமல்
நடக்கும்.
ஒட்டுமொத்தமாக
நினைத்துப்பார்க்கையில் விதவிதமான நகர் நுழைவுகளோ அவைபுகுதல்களோ ஒட்டுமொத்தமாக நினைவிலே
முண்டியடிப்பதும் யார் எவர் என தெளிவாகப் பிரித்தறியமுடியாமலிருப்பதும்தான் வெண்முரசின்
இயல்புகள் வெண்முரசு அளிக்கும் அனுபவமே அந்த perplexity தான் என நினைக்கிறேன். சரித்திர தரிசனம்
என்பது இதுதான்.
அருண்