Sunday, April 19, 2015

காலையின் தேனொளி,



இனிய ஜெயம்,

நேற்றைய நாளெல்லாம்  இந்த வர்ணனை அளித்த உளக்கிளர்ச்சி  சொல்லில் பொதிந்து கையளிக்க இயலா ஒன்று.   ஒரே ஒரு சொல், ஒரே ஒரு சொல்லில் நிகழ்த்திய வர்ணனை.  உற்ற மொழியாக, கண்ட காட்சியாக, பூபாளமாக, ஓவியமாக, கலையாக, என் துரியத்தை பதியனிட்ட அத்தனை காலைகளையும் ஒன்றிணைத்து விட்டது.  செம்மை பரவிய விளிம்புகளுடன்  கீழ் வானிலிருந்து  நிறைந்து வரும் மேகம்,  வாசல் பெறுக்க , உயர்ந்து பெருகும்  பொன்னொளிர் புழுதி, நீர் தெளிக்க, ஒளி சிதற தெறித்து விழும் வைரத் துளிகள், ஒளிரும் பீலிப் பிசிர்களுடன், கழுத்து சொடுக்கி திரும்பிப் பார்க்கும் சேவல், அமுதத்தின் முதல் துளி ஊறிய கொங்கைப் பூண்,
முதல் அமுதம் பருகிய மதலையின் குமிண் உதடு, அந்தி மாலையில்,மூதாதைகளை கரைத்த நதியின் தொடுவான் கோடு, அனைத்திலும் அனைத்திலும்  உறைவது இந்த காலையின் தேனொளியே.   காலையின்  தேனொளி,.. எழுதும் வாசிக்கும் எவரையும்  இதை நான் எழுதவில்லையே என பொறாமை கொள்ளவைக்கும் வர்ணனை.

க்ரிஷ்ணயைக் கண்டு, சாத்யகி தடுமாறும் இடம்  அழகு.  கிருஷ்ணனின் தாசானு தாசன், கிருஷ்ணனை பெண்ணாகக் கண்டால் என்னதான் ஆவான்? 

”அவளிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள், பெருஞ்சுழல்பெருக்கில் எதற்கும் பொருளில்லை என்று. எது நிகழ்ந்தாலும் இங்கு நிகழும் மொத்த மானுடவாழ்க்கையையும் முழுமையாக பொறுத்தருளி விண்மீள்பவளே மூதன்னையாகி குனிந்து இங்கு பிறந்துவிழும் மைந்தரை வாழ்த்தமுடியும்.”

திரௌபதி பானுமதிக்கு சொல்லும் சொல்.  கனவுகளுடன் இல்லம் புகும் பானுமத்திக்கு இவை என்ன பொருள் தரும்? எத்தனை பாரம் ஏற்றும்? 

பானுமதி நாளை தோளுடன் தோள் நின்று ஏன் என்று வினவத்தான் போகிறாள்.   அஸ்வத்தாமன் கைகளால் தன் மைந்தர்களை இழந்த பிறகு,  திரௌபதி  பானுமதிக்கு சொன்ன இந்த சொல்லின்  எடையை  ஒருக்கால் உணரக் கூடும்.