Wednesday, April 22, 2015

திருதாவின் நிலையழிவு



அன்புள்ள ஜெ,

யானையின் அடி எவ்வாறு இருக்கும் என்று மிக நன்றாகவே உணரவைத்து விட்டது, திருதராஷ்டிரர் தன் மைந்தர்களை தூக்கி வீசும் அந்த அத்தியாயம். அவர் ஏன் அப்படி நிலையழிந்தார்? வாரணாவத நிகழ்வுக்காகத்தான் என்றால் அவர் பாஞ்சாலியின் திருமணத்திற்குப் பிறகான ஓர் தருணத்திலேயே அதைச் செய்திருக்கலாம். தருமனின் கடிதத்தை உண்மையென்றே அவர் நம்புகிறார். ஆழ்மனதில் ஒன்றும் மேல்மனத்தில் ஒன்றும் வைத்துக் கொள்ளக்கூடியவர் அல்ல அவர். எனவே தன் மகன் தவறு செய்யவில்லையென்றே அவர் உளமார நினைத்திருப்பார். மேலும் இப்போது இருக்கும் திருதா மிகத்தெளிவாகவே தனக்கு துரியனின் நலமன்றி வேறெதுவும் முக்கியமன்று என்பதை நன்குணர்ந்த ஒருவர். அப்படிப்பட்டவர் எதனால் இவ்வாறு நிலையழிந்து அவனைத் தாக்குகிறார்?

அவரின் நிலையழிவுக்குக் காரணம் சம்படையின் மரணம். உண்மையில் அவள் மரணம் அவருக்கு ஓர் விடுதலையை அளித்திருக்கும் அவர் அவளைத் தினமும் காணும் தொலைவில் இருந்திருந்தால். ஆனால் அவள் மரணம் அவரை அவரின் தவறுகளை நோக்கித் திருப்பி விட்டுவிட்டது. மழைப்பாடலில் வரும் சம்படையும், தசார்ணையும் அன்று வாசகர்கள் மட்டுமல்ல திருதாவுக்குமே பெரும் ஆறுதலைத் தந்தவர்கள். அவர்களில் சம்படை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சிழந்து, தன் இருப்பையும் இழந்து அணங்கு கொண்டவளாகிறாள். அவ்வாறு பேச்சிழப்பதற்கு முன் அவள் சகுனியிடம் தான் காந்தாரத்திற்கே சென்று சேடியாகவாவது வாழ்ந்துவிடுவதாகவும், அரண்மனையிலிருந்து கூட்டிச்செல்லுமாறும் கெஞ்சுவாள். அது முடியாதென்று தெரிந்த பிறகு அவள் அமைதியாகி சுவரோவியமாகிவிடுவாள். அவள் அவ்வாறு வாழ்வையிழந்ததற்கு ஒரு வகையில் திருதாவும் காரணமே. அவருடனான மணம் நடவாதிருந்தால் அவள் அவ்வாறு அமைந்திருக்க மாட்டாள். எனக்கு தாயார் பாதம் பாட்டி தான் நினைவுக்கு வந்தாள். தன் இருப்பாலேயே அந்த தாத்தாவுக்கு அவள் வழங்கிய தண்டனை போன்ற ஒன்றைத்தானே திருதாவுக்கு சம்படை அன்னையும் தன் இறப்பால் வழங்கிவிடுகிறாள். அவரின் மகன்களில் ஒருவர் தான் குண்டாசி என்பது இன்னும் ஓர் விதியின் விசித்திரம். திருதா குண்டாசியை தன்னை ஏச அனுமதிப்பது ஒரு எல்லையில் சம்படையிடம் கோரும் மன்னிப்பு தானே.

அந்த நிலையழிந்த உள்ளத்தில் தான் துரியன் மேலும் இரு இளவரசிகளைக் கவர அனுமதி கேட்கிறான். மீண்டும் அணங்கு கொள்வதற்காக இளவரசிகளைக் கவரத்தான் வேண்டுமா? இதுவரை அந்த அரண்மனை கொண்ட அணங்குகள் போதாதா? அவை விட்ட சாபங்கள் போதாதா? இச்சாபங்களைத் தாங்க வேண்டியவன் மீண்டும் அத்தகையதோர் செயலைச் செய்யலாமா? அதை உணர்த்தவே அவர் துரியன் மீது கோபம் கொள்கிறார். அது தந்தையர் கொள்ளும் கோபம். மகன் மீது மாளாப் பாசம் வைத்த அவர்களால் மட்டுமே கொள்ளப்படத்தக்க கோபம். காலில் கல்லுரசி தோல் கிழிந்து ரத்தம் வர அழுது கொண்டிருந்த என்னை, முதலும் கடைசியுமாக கன்னத்தில் அறைந்த என் தந்தையை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். 

அவரின் நிழல் விப்ரரும் இதைத்தானே சொல்கிறார். "மூடா… என்ன செய்யவிருந்தாய்? அவன் உன்மகன். அவன் செய்ததெல்லாம் நீ செய்த பிழை. உன் பிறவிப்பெருங்கடன் அவன். அதை தீர்த்துவிட்டுச்செல் இழிமகனே." வெண்முரசில் வரும் சிறுபாத்திரங்கள் கொள்ளும் விரிவு பெரிய பாத்திரங்களுக்குக் கூடக் கிடைப்பதில்லை. விப்ரர் அவ்வரிசையில் சென்று சேர்ந்த காட்சி இது.

ஆனால் துரியனும் கூட அந்த சன்னதம் தன் வாரணாவதத் தவறுக்கான தண்டனை என்றே கருதுகிறான். ஆம், அவ்வழியில் தானே அவனால் அமைதி கொள்ள இயலும்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.