Sunday, April 19, 2015

வாசலில் நிற்கும் வேழம்




திருதராஷ்டிரன் போன்ற பெரும் வேழம் அஸ்தினபுரி என்னும் நவமணி பொக்கிஷத்தை தூக்கி கொடையாக கொடுக்கும் கொடையாளியாக இருக்கும்போது அதன் கன்றுகள் உட்காரும் இடத்தில் ஒட்டிக்கொள்ளும் மண்ணுக்காக நான் முந்தி நான் முந்தி என்று போட்டிப்போடுவதைக்காணும்போது அதன் பெருங்கருணை இழிவாகும் தருணத்தில் கிளர்ந்து எழுந்து மதம்கொள்வது அற்புதம்.

ஒருமனிதன் ஒருமனிதன்மீது கோபம் கொள்வது அந்த நேரத்தில் அந்த சூழலுக்கானது என்றுதான் நினைக்கின்றோம் ஆனால் அந்தகோபம் அந்த நேரத்தில் நடக்கும் தவறுக்கானது இல்லை. முன்னால் நடந்த தாங்கமுடியாத தவறை தாங்கிக்கொண்டு இருக்கும்போது இப்போது வந்த தவறு வழி உண்டாக்கும் இந்த தவறு என்பதுபோல் அந்த தவறின் கோபம் வெளியே துள்ளி வந்துவிடுகின்றது. 

கோபம் கொண்டவனுக்கு தெரியும் இது இதற்கான கோபம் இல்லை என்பது, ஆனால் கோபத்தில் மாட்டிக்கொண்டவனுக்கு தெரிவதில்லை இந்த சாடல் முந்தியதற்கானது என்பது. 

தவறுசெய்தவன் நினைக்கின்றான் இந்த கோபம் இன்றைக்கானது என்று மட்டும். மீண்டும் தொடங்கிவிடுகின்றான் இன்றைய கோபத்தை நாளைக்கு கிளறிவிட.   “அம்பைவிட்டவன் மறந்துவிடுகின்றான், அம்பு தைத்தவன் மறப்பதில்லை”  என்று வலம்புரிஜான் சொல்வார்.

பானுமதியுடன் திருமணம் நடந்து புதுமாப்பிள்ளையாக இருக்கும் துரியோதனன், புதிய உலகத்தில் எல்லாம் புதியதாக இருக்கும் என்று நினைத்த துரியோதனன் நினைத்து இருப்பாானா? இன்று திருதாரஸ்டிரன் பிடுங்கிவீசியது அன்று விட்ட வாரணவத சதி என்னும் பழைய அம்பு என்பதை. 

வாழ்வும் காலமும் விசித்திரமானதுதான், முற்றும் புதிய காலத்தில், புதிய உலகத்தில், புதிய கணக்கை எழுதி எடுத்துச்சென்று திருத்தக்கொடுத்தால் பழைய கணக்குக்கு அல்லவா மதிப்பெண் போடுகின்றது.

அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிக்கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே! என்று அன்னை அபிராமியை அழைத்து தனக்கு என்ன என்னவேண்டும் என்று கேட்கும் அபிராமிப்பட்டர் 
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்- என்கிறார்.(கலையாத கல்வியும்-அபிராமி அம்மை பதிகம்)

தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் என்று கேட்டவர், திருதராஸ்டிரன் பிள்ளைகளைப்பெற்று படும் பாட்டைப்பார்த்துதான் இப்படிக்கேட்டு இருப்பாரோ?

விருட்சம் மிதித்து
வானம்தொடும் வேழம்
சாம்சார வலைபடும்
பாச அங்குசத்தில் வதைப்படும்
வாசால்வரும்
தலைபடும் கால்சுமந்து
வேழம் என்பதை மறந்து
வேடிக்கைப்பொருளாய் நடைபோடும்.

பிள்ளையைப்பெற்றப்பிறகு வேழம்கூட மரப்பாச்சிதான், அது எப்பவாவது பிள்ளைகளை குத்தி அழவைக்கும் அதுகூட பிள்ளைகள் தன்னை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள செய்வதுதான். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.