Monday, April 27, 2015

எம்பெருமான்



ஓம் முருகன் துணை

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

குன்றக்குடி அடிகளார் எழுதிய திருவாசகத்தேன் என்னும் நூலின் முதல் கட்டுரையை வாசித்தபோது ஒரு கருத்து நெஞ்சை அள்ளியதுமாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகத்தில் இருந்து  மனிதக்காட்சிக்கும், கடவுள் காட்சிக்கும் உள்ள வேறுப்பாடு  எப்படி இருக்கும் என்று சொல்லி உள்ளார்.

மனிதக்காட்சியில், மனிதன் தொலைவில் இருக்கும்போது  வடிவம் தெரியும் அருகில் வரும்போது உறுப்புகள் தெரியும், மிகமிக அருகில் வரும்போது வண்ணம் தெரியும். கடவுள் காட்சியில், கடவுள் தொலைவில் இருக்கும்போது வண்ணம் தெரியும், அருகில் வரும்போது வடிவம் தெரியும், மிகமிக அருகில் வரும்போதுதான் உறுப்புகள் தெரியும்.

மாணிக்கவாசக சுவாமிகள்  பெற்ற மெய்யுணர்வை, அக புற காட்சியை,  ஞானத்தை, பக்தியையை அள்ளி அள்ளி தமிழை ஊற்றி கவிதையை அமுதம் என்று செய்கின்றார்.  

வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்ற
   
நேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்றங்
கெண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
   
எய்துமா றறியாத எந்தாய் உன்றன்
வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி
   
மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்
   
எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே. –திருவாசம் திருச்சதகம்-25.

கண்ணனையும், பீஷ்மனையும் வைத்து இன்று வெண்முரசு  விளையாடுகின்றது, உள்ளும் புறமும் கண்ணனாகி, பீஷ்மனாகி உறவின் எல்லையில் நின்று விளையாடுகின்றது. ஏகன் என்றும் அநேகன் என்றும் வெண்முரசு கண்ணனாகி வந்து விளையாடுகின்றதுகண்ணனை ஏகன் என்றும், அநேகன் என்றும் பீஷ்மர் கண்டும், கேட்டும், உணர்ந்தும் உள்ளுணர்ந்து திகைக்கிறார். மறுக்கிறார், உணர்கின்றார். அழுகின்றார்.  

கண்ணன் பிதாமகர் பீஷ்மரை ஹஸ்தவனம் காட்டில்    ஒருமுறை சந்தித்து வணங்குகின்றான். இன்று அஸ்தினபுரத்தின் அரண்மனையில் வணங்குகின்றான்.  இந்த இரண்டு வணக்கத்தையும் கண்ணன் எட்டு அங்கமும் மண்ணில் படும்படியே செய்கின்றான். ஒரே மாதரியான வணக்கம் ஆனால் ஒரே பொருளையா இங்கு தருகின்றது. அந்த வணக்கத்தை பெரும் பீஷ்மர் இருபெரும் எல்லையில் நின்று அதை அனுபவிக்கின்றார்.  அன்று ஏகனாகி வந்து வணங்கிய ஒருவன், இன்று அநேகனாகி வந்து வணங்கிய ஒருவன். ஏகனாகி வந்து வணங்கியபோது தெய்வம்போல் வந்து வணங்கினான் ஆனால் பீஷ்மன் மனிதன் என்று நினைத்தான். இன்று அநேகன் போல  வந்து வணங்குகின்றான், ஊரும் உலகமும் மனிதன் என்று நினைக்கின்றது ஆனால் பீஷ்மன்  இறைவன் என்று நினைக்கின்றான்.

வெண்முரசு விளையாடுகின்றது ஜெ.

 ஹஸ்தவனம் காட்டில் இருக்கும்போது நீலன் என்ற அவன் வண்ணத்தை அறிந்தவராக இருக்கின்றார். ஹஸ்தவனம் காட்டில் பீஷ்மரை சந்திக்க செல்லும் கண்ணன் ஓசையற்ற காலடிகளுடன் நடந்து சென்று விழுந்து வணங்கி தன்னை காட்டுகின்றான். கண்ணனை கண்ட பீஷ்மர் இங்கு அனுபவிக்கும் உணர்ச்சிகளை அக புற நிகழ்வுகளை அற்புதம் என வடித்து உள்ளீர்கள். கண்ணனை கண்டு வியக்கிறார். பொருள்கொள்ளமுடியாமல் நோக்குகின்றார். அவர் விழிகள் ஒளிபெருகின்றன. கண்ணனின் தலைதொட்டு வாழ்த்துக்கின்றார்.  அன்று இறைவன்போல வந்தான் ஆனால் பீஷ்மர் அவனை மனிதன்போல நினைத்தே வாழ்த்தினார்.

இன்று அஸ்தினபுரம் அரண்மனைக்கு வரும் கண்ணன் சத்தமின்றி வரவில்லை, பெரும் சத்தத்தோடு ராஜவரவேற்போடு வருகின்றான். முழுக்க முழுக்க தன்னை மனிதன் என்றே காட்டிக்கொண்டு வருகின்றான். அவன் தனது அருகில் வருவதை அறியாததுபோலவே இருக்கிறார்அவன் வந்து அன்றுபோல்தான் வணங்கினான் ஆனால் அவர் அன்றுபோல் அன்று அவனை மனிதனாக நினைத்து வாழ்த்தவில்லை, அவன் கடவுள் என்றே வாழ்த்துகின்றார்.  நான் நான் என்று பதறுகின்றார். தனது சிறுமையை உணருகின்றார் அவன் பெருமையை அறிந்து இருக்கின்றார். மண்ணுலகம் உன்னுடையது.. அதை பேணுகஎன்று வாழ்த்துகின்றார்.

கண்ணன் அங்கும் இங்கும் ஒன்றுதான்  செய்தான். பீஷ்மன் இரண்டை அறிகின்றான். இதைதான் மனிதன் தன்னைத்தான் உணர்தல் என்கின்றார்களாகடவுள் தரிசனம் என்பது இதுதானா? தானே உணர்வதுதான் கடவுள். மற்றவர்கள் சொல்வது அல்ல.   பீஷ்மனின் இந்த இடத்தையும், சிசுபாலனின் இடத்தையும் இங்கு வைத்துப்பார்க்கும்போது ஒருவனுக்கு கடவுளாக இருப்பதும், ஒருவனுக்கு எதிரியாக இருப்பதும் அவன் அகம் அன்றி வேறு ஒன்று இல்லை. இங்கும் அங்கும் கண்ணன் கண்ணனாக மட்டும்தான் இருக்கிறான்இருக்கு என்பவனுக்கும் இல்லை என்பவனுக்கும் இடையில் உள்ள தூரம் உணர்தல் மட்டும்தான்.எவ்வளவு மெல்லிய வேறுபாடு.
  
விண்ணவர்கள் ஏத்தும்போதும் மறைந்து இருந்த எம்பெருமான் வல்வினையேன்  எனக்காக  நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டிஎன்று சொல்லும் மணிவாசகத்தின் மணிவரிகளின் ஒளிவெள்ளம் பாய்ந்து பீஷ்மனாகி மின்னுகின்றது.

ஒருவன் இறைவனை உணர்வதால் இறைவன் வருகின்றானா? இறைவன் வந்து உணர்த்துவதால் ஒருவன் இறைவனை உணர்கின்றானா? பீஷ்மரின் வாழ்வில் இது இரண்டும் நடந்து செல்கின்றது.  

//பீஷ்மர் முதியவர்களுக்குரியவகையில் முகவாயை சற்றே தூக்கி உதடுகளை உள்ளே மடித்து ஓசையின்றி அழுதுகொண்டிருப்பதை பூரிசிரவஸ் கண்டான். அவரை அவரது மாணவர் ஹரிசேனர் மெல்ல பற்றி அமரச்செய்தார். அவர் மேலும் அழுதுகொண்டிருக்க ஒரு சிறிய மரவுரியை அளித்து துடைத்துக்கொள்ளும்படி சொன்னார். பீஷ்மர் மூக்கை உறிஞ்சி துடைத்துக்கொண்டு தலைநடுங்க அமர்ந்திருந்தார். அவர் அழுவதை எவரும் நோக்கவில்லை. அனைவரும் கிருஷ்ணனையே பார்த்தனர்//

எத்தனை பெரிய கூட்டத்தில் இருந்தாலும் யாரோ ஒருவன் அந்த கூட்டத்தில் தனித்து நின்று உண்மையை அறிந்து, அந்த உண்மை தந்த ஆனந்தத்தில் ஆனந்த கண்ணீர்விடுகின்றான். அவனை உலகம் அழுமூஞ்சி  என்கின்றது.    ஆனால் அந்த கண்ணீர்  அழுபவனுக்கு அமுதம்.  

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்