Wednesday, April 22, 2015

அரசியின் இடம்

குந்தி அவனை அசையாத விழிகளுடன் நோக்கி “இல்லை, நான் என் முழு அகம்படி இல்லாமல் அஸ்தினபுரிக்குள் செல்வதாக இல்லை” என்றாள். “இல்லை அன்னையே, நான் சொல்லவருவதென்னவென்றால்…” என்று சாத்யகி தொடங்க “மூடா, நான் எப்படி நகர்நுழையப்போகிறேன்?” என்றாள். “சுங்கத்தலைவரிடம் தேர்…” என்ற சாத்யகி நிறுத்திக்கொண்டான். “என் அகம்படிப்படகில் மார்த்திகாவதியின் கொடி கொண்ட அரசத்தேர் இருக்கும். எனக்குமுன் கொம்பும் முழவும் கொடியுமாகச் செல்லும் வீரர்களும் என்னைத் தொடரும் அணித்தேர்களும் அப்படகில் இருக்கின்றன”. சாத்யகி தலையசைத்தான். “பொறுத்தருள்க அன்னையே” என்றான்.

அரசியான குந்திதேவியென்று இல்லை,  எளிய பெண்ணாக விளங்கும் எந்தவொரு இல்லத்தரசிக்கும், கணவன் அருகில் இல்லாமலோ அல்லது இவ்வுலகில் இல்லாமலோ இருக்கும்போது ஏற்படும் உளப்போராட்டமே இது.  அவர் இருந்தால் நாம் இவ்வாறா நடத்தப் படுவோம் என்ற நினைவே அவர்களைச் சுட்டெரித்து வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருக்கும்.  அஸ்தினாபுரியின் மகாராணி மற்ற படகுகளின் பொதியிறக்கத்துக்காக இவ்வாறு காத்து நிற்கும்போது நம் உள்ளமும் வருத்தமுறுவதைத் தடுக்க முடியவில்லை.

கணபதி கண்ணன்