Tuesday, April 21, 2015

சொல்லாமல் சொல்லுதல்


பிறந்த உயிர்கள் அனைத்தும் இறந்துவிடும் என்பது மாறாத உண்மை. இந்த உண்மையை பொய்யாக்க ஒவ்வொரு சீவனும் முயற்சி செய்கின்றது, அதில் வெற்றியும் பெருகின்றது. தான் இறக்கும்போது தனது சந்ததிகள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் அது.

மன்னனாக ஒரு மனிதன் விரும்புவது அல்லது ஆசைப்படுவது பலப்பலவாக இருக்கலாம், ஆனால் ஒரு தந்தையாக ஒரு மனிதன் விரும்புவது தனது மகன் உயிருடன் இருக்கவேண்டும் என்பதுதான். மகன் தந்தையின் வடிவம். ஒரு தந்தை தனது மகனில் தன்னையே காண்கின்றான். புறவயமாக மகனை அடக்கி வைக்கிறான். அகவயமாக மகனை வழிபடுகின்றான்.  

மகன் வளரவளர தந்தை தான் உயரம் குறைவதை புறத்தில் உணர்கின்றான். அதனால் மகன்மீது ஒரு புறத்தில் ஒரு அர்த்தமற்ற சினம் தொடர்கிறது. மகன் வளரவளர தந்தை தான் விரிந்து பரவுவதை அகத்தில் உணர்கின்றான். அதனால் அகத்தில் ஒரு பரவசபித்து அன்பின் நடனம் துளிர்க்கிறது. இந்த இரண்டுமே ஒரு கணத்தில் ஆத்திரத்தை ஏற்படுத்திவிடும்.  துரியோதனின் வளர்ச்சி கண்ணில்லாத திருதராஸ்டிரன் புறத்தில் கைநழுவிப்போவதை உணரச்செய்கின்றது. அகத்தில் வழிபாடு பெருகிச்சென்று மூழ்கடிக்கின்றது. திருதராஸ்டிரன் அகம் புறம் இரண்டிலும் தத்தளிக்கின்றான். 


பாண்டுப்பிள்ளைகள் கைவிட்டுப்போய்விட்டார்கள் அந்த இழப்பு சரிச்செய்யப்படாமல் இருக்கும்போதே துரியோதனன் காசிநாட்டின் இளவரசியை தனது விருப்பத்திற்கு ஏற்ப சிறை எடுத்து வந்துவிட்டான். இது முதல்பிழையா? இல்லை. பாஞ்சாலி திருமணம் முடிந்தபின்பு பாஞ்சாலத்தின்மீது படைக்கொண்டு சென்றது முதல்பிழை. தந்தையைக்கலக்காமல் காசிநாட்டு இளவரசியை சிறைக்கொண்டது இரண்டாவது பிழை. இந்த இரண்டுபிழைகளையும் துரியோதன் தனது விருப்பப்படி,திருதராஸ்டிரனைக் கலக்காமல் தன்னிக்சையாக செய்கின்றான். துரியோதன் புறத்தில் உடைந்துப்போகும் இடம் இது.

ஏன் இதற்காக திருதராஸ்டிரன் உடைந்துப்போகவேண்டும்? கண்ணன் உடன் திருதராஸ்டிரன் பேசும்போது எனது பிள்ளைகள் தனது கையைவிட்டு செல்லமாட்டார்கள், தனது பேச்சைமீறமாட்டார்கள் என்று கொடுத்த வாக்கு பொய்யாகும் தருணம் இது. அந்த வார்த்தை பொய்க்கும் தருணத்தில் திருதராஸ்டிரன் அகம்படும்பாடு மகனை பெற்ற தந்தைகள் படும்பாடு. மகன் வளர்ந்துவிட்டான் என்று முழுவதும் நம்ப முடியாமலும், தான் சொற்கள் இனி வழிபாட்டுக்குறியவையாக இருக்குமா என்று நம்பமுடியாமலும் தவிக்கும் தருணம்.  

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான்கொல் எனும் சொல்-திருக்குறள்.

இந்த திருக்குறளை நம்பாத ஒரு தந்தையும் மண்ணில் இல்லை. அறம் என்ற ஒரு வார்த்தை மண்ணில் உண்டென்று எண்ணாத தந்தைகூட அந்த குறளுக்கு தனது மகன் பொருளாக இருக்கவேண்டும் என்று கனவுக்காண்கின்றான். இந்த திருக்குறளை காலில் போட்டு மிதிக்காத மைந்தர்கள் இருந்தால் அவர்கள் ஏதோ ஒரு வழியில் வையகத்தை வாழ்விக்கும் நல்லவர்களாகவும். உலக சரித்திரத்தில் வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள். ஆனால் அந்த மைந்தர்கள் எளிதில் பிறந்துவிடுகின்றார்களா? 

துரியோதனன் திருதராஸ்டிரனை மீறுகின்றான் என்பதைவிட, திருதராஸ்டிரனின் வார்த்தையை பொய்யாக்கிவிட்டான் என்பதை திருதராஸ்டிரன் கண்டுகொள்கின்றான். அடேய், இழிமகனே! அவர்களுக்குரிய பெண்களை நீ எப்படி கவர நினைக்கிறாய்?” என்றார் திருதராஷ்டிரர்.

கண்ணனும் திருதராஸ்டிரனும் இனி சந்தித்தால் என்மகன் எனது வார்த்தைக்கு கட்டுப்பட்டவன் என்று எப்படி சொல்லமுடியும்? தருமனுடன் ஒப்பிட்டால், திருதராஸ்டிரன் நிலை என்ன? தருமனை எனது தந்தையின் வடிவம் என்றானே பீமன். அதை அவன் பொய்யாக்குவானா? ஆனால் இந்த துரியோதனன் எவ்வளவு எளிதில் திருதராஸ்டிரனை மீறி இயல்பாக செல்கின்றான். திருதராஸ்டிரன் இருப்பை மறக்கின்றான். எளிதாக நீங்கள் கண்ணற்றவர் என்பதை நினைவுப்படுத்துகின்றான். மகன் முன் தந்தை தோற்றுப்போவது வலி இல்லை. மகனால் தந்தை மற்றவன் முன்பு தோற்றுப்போவது வலி. அந்த வலியை திருதராஸ்டிரன் உணர்ந்ததுபோல் யார் உணரமுடியும்.

புறத்தில் நடக்கும் இந்த வேடிக்கைகள் ஒரு புறம் இருக்கட்டும். திருதராஸ்டிரன் அகம் என்ன நினைக்கும். இதுவரை துரியோதனன் எடுத்துவைக்கும் எந்த அடியிலும் வெற்றிப்பெறவில்லை. முதல் தோல்வி குருகாணிக்கையை தருவதற்கு பாஞ்சாலன்மீது தொடுத்தப்போர்.  இரண்டாவது தோல்வி பாஞ்சாலியை மணம்முடிக்க எடுத்த வில். மூன்றாவது தோல்வி மீண்டும் பாஞ்சாலம்மீது படையெடுத்து தருமன் திருப்பி அனுப்பியது. காசி இளவரசிகளை கவர நினைத்து பானுமதியை மட்டும் கவர்ந்தது. வாரணாவத சதி தோல்வியில் முடிந்தது, இந்த தோல்விகள் எல்லாம் கொடுக்கும் பரிசு என்னவாக இருக்கும்? பாண்டவர்களின் பகை. பகையின் இலக்கு உயிர் குடித்தல். திருதராஸ்டிரனுக்கு முன்பு துரியோதன் உயிர் ஊசலாடும் கொடுமை. ஒரு தந்தையாக திருதராஸ்டிரன் படும்பாடு இங்கு உச்சம். ஷத்ரியன் இறப்பதற்காகத்தான் பிறக்கின்றான் என்றாலும் இலட்சியம் இல்லாமல் இறக்கும் ஷத்ரியன் விண்ணேற முடிவதில்லையே.

மகனை கொல்வதற்காகத்தான் இங்கு திருதராஸ்டிரன் அடிக்கின்றான் ஆனால் அவன் வாழவேண்டும் என்ற அதிகப்பட்ச தந்தை பாசத்தின் உந்துதல். யாராலோ சாவதைவிட என்கையால் சாவு. அந்த ஒரு நிம்மதியாவது எனக்கு இருக்கட்டும் என்ற எளிய தந்தையின் இதயவலி. பார்வைக்குதான் பாண்டவர்களுக்காக திருதா துரியோதனனை அடிப்பதுபோல் உள்ளது. அகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை இருக்கவும் இருக்காது. அறம் மீறிய மகன் தோற்றும் வருகின்றான் என்பதுதான் தந்தையாக திருதராஸ்டிரன் கொள்ளும் சினம். இழிமகனே என்ற ஒற்றைச்சொல்லுக்குள் அகம் புறம் இரண்டிலும் ஏற்படும் வலியை வெளிப்படுத்துகின்றான். 

திருதராஸ்டிரன் துரியோதனனை அடிப்பதன் மூலம்  மேலும் ஒரு உண்மையை அவனுக்கு உரைக்கின்றான். நீங்கள் மூவரும்(துரியோதனன், கர்ணன்,துச்சாதனன்) எனது ஒருவன்  கைகளுக்கு தாக்குபிடிக்ககூடியவர்கள் அல்ல, பீமனையோ, கண்ணனையோ எப்படி தாக்குபிடிப்பீர்கள்? இது சொல்லாமல் சொல்லும் வித்தை.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்