Saturday, June 13, 2015

விழி

ஓம் முருகன் துணை

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

காண்டவம் ஏன் நின்றது என்று வருத்தப்படுவதா? நின்றதுதான் நல்லது, இந்திரநீலம் கிடைத்தது என்று சந்தோஷப்படுவதா?

காண்டவம் நின்றதற்காக வருத்தம் இருந்தாலும், இந்திரநீலத்திற்கு உரிய காதலும், காமமும் நிறைந்து அதில் களித்து பின் காண்டவம் என்னும் குரோதத்தில் குளிர் காய்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். வெண்முரசும் அதைத்தான் நினைக்கிறது என்று நினைக்கிறேன். என்ன ஒரு அற்புதமான பெண்மையின் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அழகும், காமமும், காதலும். 

பெண்ணின் பெரும்தக்கயாவுள கற்பென்னும்  
திண்மை உண்டாகப் பெறின்- என்பதை உய்த்து உணரும் இன்பம்.

பெண்ணை வெறும் அலங்காரப்பொம்மைகளாய், வெள்ளித்திரைநிழல் உயிர் சித்திரங்களாய், விளம்பர பதாகைகளாய் கண்டுக்கண்டு திகைக்கும் நேரங்களில், அவர்கள்மேலேயே ஒரு கோபம் எழுந்து அக்கணத்தை கடந்துபோக வைக்கின்றது. ஏன் இப்படி இவர்களே கசாப்புக்கடைகாரன் கையில் ஆடாகிவிடுகின்றார்கள் என்று நெஞ்சம் விம்புவதை தடுக்கமுடியவில்லை.

மதனன் முன்பு சத்தியபாமையின் விருப்பாக அமையும் தனம் தேர்வு செய்யும் கணத்தில் லோகமாதாவாக ஆகிநிற்கின்றாள். விழைவும் சொல்லும் ஒன்றென் நிற்கும் அந்த தருணத்தில் வந்து நிற்கின்றது கற்பு. இது எப்படி நடக்கின்றது? இதுதான் தெய்வத்தின் விளையாட்டா? காமம், குரோதம், மோகம் அனைத்தையும் ஒரு நொடியில் தாண்டிச்செல்லும் அந்த ஒருகணம். அந்த ஒருகணத்தில் நிலைக்கும் உறுதிச்சொற்கள். சத்தியபாமாவும் இங்கு அறியாமையில்தான் இருக்கிறாள். காரணம் இன்றி இந்த உண்மையை தேடி அழும் மிகவும் எளிய சராசரி பெண்ணாகத்தான் அவளும் இருக்கிறாள் ஆனால் அவள் சென்று அமரும் அந்த அன்னைபீடம் அழகு. அந்த அன்னைபீடத்தில் அமர அவள் நெஞ்சில்தாங்கும் அமுத  கலசம் புனிதம். உடலால், சொல்லால், செயலால் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளும் உன்னத நீராடல். தனக்குள்ளேயே மூழ்கி மூழ்கி குளித்து கரையேறுபவர்கள் கண்டடைவது.  தன்னை  உயர்ந்ததாக்கிக்கொள்ளும் சீவன் என்றும் இறையை இழுக்கின்றது. வீரசேனன்போன்றவருக்கு விழியாக ஒளியாக இருந்த அந்த மூலம் சத்தியபாமாபோன்றவருக்கு மண்ணில் மனிதனாக வருகின்றது.

சத்தியபாமாவிற்கு நேர் எதிர் திசையில் முதுதந்தை வீரசேனனும் அறியாமையோடுதான் இருக்கிறான். அந்த அறியாமையே அவனை ஒரு அந்தகனாக்கி, தனக்குள், தனக்குள் என்று விழுந்து அமிழ்ந்து காமம், குரோதம், மோகத்தை அவனும் தாண்டி சியாமந்தகமணியை அடைகின்றான். அவனுக்கு அதை ஒளியாக,விழியாக, குலதெய்வமாக இருக்கிறது. தந்தை, மகன், என்று அந்த ஞானஒளி கைமாறி கைமாறி வளர்ந்து சென்றுக்கொண்டே இருக்கிறது. 

சத்தியபாமா முதல் மூச்சியிலேயே அறியாமல் ஏறி அமரும் அன்னை என்னும் பீடம் அவளை கீழே இருக்கும் காமம், குரோதம், மோகம் என்னும் குகைகளை தாண்டவைத்துவிடும். அந்த குகைகளை, படிகளை அவள் கடந்துப்போக அந்த அன்னைபீடமே பிடிமானமாக அமைந்துவிடும். 

வீரசேனன் காமம், குரோதம், மோகம் என்னும் குகைகளை தாண்டித்தாண்டி தெய்வமணியை அடைகின்றான். அந்த மணியை அவன் விடாமல் கைகொள்ளும் அளவுக்கு அவன் மீண்டும் இருளுக்குள் விழுந்துவிடாமல் இருக்கமுடியும், அதை அவன் குலதெய்வமாகவே கொள்வது அற்புதம். குணிக்கர் சென்ற வழியில் வீரசேனனும், கர்ணிகை சென்றவழியில் சத்தியபாமாவும் சென்று தொடவேண்டிய இடத்தை அடைகின்றார்கள். இருவரும் வேறுவேறு வழியை அடைந்தாலும் இருவம் சென்று சேர்ந்து இடம் ஒன்றுதான். இருவரும் பெற்று இருப்பது ஒரு வகை விழிகள் ஆனால் இருவிழிகளும் காண்பது ஒரு பரம்பொருளை. 

வீரசேனருக்கும் ஒளியாகி விழியாகி வாழ்வாழ்கி நின்றது எதுவோ அதுதான் சத்தியபாமவிற்கு கால்கை கொண்ட நீலமேனியாக, பீலிசூடிய குழல் சிரமாக, புன்னகை இன்கள்இதழாக என்றும் காதலனாக வந்து நிற்கின்றது.
  
அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே-என்கின்றார் அபிராமிப்பட்டார்.

ஒன்றாக, பல உருவாக, அருவாக இருக்கும் அந்த பரபிரம்மம் சிலசீவன்களை அன்றே தடுத்து ஆண்டுக்கொள்கின்றது. வீரசேனர்போன்றவருக்கு முதல்விழியாய் காக்கின்றது, உடலில் மண்ணும் புண்ணும் கொண்டு எழுந்து வந்து நின்ற திருவண்ணாமலை ரமணபெருமானாய் ஆக்குகின்றது, சத்தியபாமாபோன்றவருக்கு முலைவிழியாய் நின்று காக்கின்றது. மண்ணில் அனைவருக்கும் அன்னை கண்ணனுக்கே காதலி என்று மீராபாய் ஆக்குகின்றது. புரியவைக்கின்றது. செல்லும் இடம்நோக்கி செல்லவைக்கின்றது.  மற்ற சீவனுக்கு “நான், எனது” என்னும் நாகவிழியாக அல்லவா ஆகி படம் எடுத்து ஆடவைக்கிறது.  அந்த பாம்பின் தலையில், அந்த பசுகட்டி, தேரோட்டி, சொல்லாட்டி, மண்ணில் அனைவரையும் தனது மணவாட்டி என்றெ நம்பசெய்யும் காளிங்க பாம்பாட்டி வந்தாடும் நாளில் பெரும் தரிசனமும், சுகவாழ்வும் கிடைக்கலாம். அதுவரை..

இரவுபகல் பலகாலும் இயல்இசை முத்தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
பரகருணைதப் பெருவாழ்வே பரசிவ தத்துவஞானா
அரன்அருள் சற்புதல்வோனே அருணகிரி பெருமாளே. 

நன்றி
அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்.