Tuesday, June 9, 2015

பெண்ணென மலர்ந்தது




இனிய ஜெயம்,

இன்றைய அத்யாத்தில்  பல வரிகள்  பித்தேற்றுகின்றன.   முன்பு திரௌபதி நீராடுகையில் , அவளுடலில் நீர் வழிந்தோடும்  தடமெல்லாம் ,  உருகி வழியும் நெய்யில்  பற்றி சுடரும் தழல் போல் சொல்லெழுந்தது .

இம்முறை பசிய காட்டில்  வந்து வீழும் மாமழையின், ஒவ்வொரு துளியும் தீண்டும்  இடத்தில் ,முளைக்கும் பச்சையம் போல முளைத்தெழுகின்றன சொற்கள்.

பெண்கள் நிறை  மெய்யாகவே, முற்றிலுமான விடுதலை  என்றொரு நிலையில் இருந்து இயங்கினால்,  அங்கு  நிற்கும்  கொல்லவும் வெல்லவும் பிறந்த ஒருவன் , கலாச்சாரதடைகள்  தன்முனைப்பு  அனைத்தையும் களைந்து  அவர்களை நோக்கினால் , அவன் எய்துவது என்ன?  அதன் இலக்கிய சாட்சியமே இன்றைய அத்யாயம்.

முத்தத்திலிருந்து  பிறக்கும் சொற்கள். ஆம் . பெண் என்று உச்சரித்துப் பார்த்தேன் அந்த சொல்லெ முத்தத்திலிருந்துதான் பிறக்கிறது.

புறம்புல்கும் இளம்பெண்ணின், வெம்மை இணை முலைகளின் , மென்மைகளின் வன்தொடுகை ஏற்று, செவிகள் கொள்ளும் வெங் குருதிச் செம்மையை  , அவ்வனுபவத்துக்கு நிகர்த்த ஒன்றினை அளித்தது த்ரிஷ்தயத்தும்ணனின் பித்து மொழிதல்.

இறுதியில் ஆடல் அரங்கில், இளமை முதுமை  அனைத்தையும் கடந்து  கிருஷ்ணனுக்கான  ஏக்கமாக மட்டுமே , தூய பெண்ணை மட்டுமே த்ரிஷ்தயத்தும்ணன்  அறிவது, தமிழில் இதுவரை நிகழாத தருணம்.

புதர் இலைகள் நுனி ஒளி போல கண்கள்.

ஊஹும்  இந்த கடிதத்தை முடிக்க முடியாது ஆகவே இங்கே நிறுத்திக் கொள்கிறேன்.

கடலூர் சீனு.