Sunday, June 14, 2015

ஏழுபிறவி

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

அன்னை பிராமி, அன்னை மகேஸ்வரி, அன்னை கௌமாரி, அன்னை வைஷ்ணவி, அன்னை வராகி, அன்னை இந்திராணி, அன்னை சாமூண்டீஸ்வரி என்று வரும் சப்த கன்னியர் வரிசையை சத்தியபாமா கண்டடையும் விதம் அழகு.

ஏழடித்தூரத்தில்தான் நீலன் நிற்கின்றான். ஒவ்வொரு அடியையும், ஒவ்வொரு யுகமென, ஒவ்வொரு பிறவியென அவள் கடந்து செல்லும் பிறவிப்பெருங்கடல் பெரியது.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
என்று சொல்லும் வள்ளுவர்தான் கற்றவரைமட்டும் கண்ணுடையவர் என்கின்றார்.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
பாமா இங்கு கண்ணனை கற்கின்றாள். கற்பது உன்நாமம் என்கின்றார் அபிராமிப்பட்டர்.  அந்த கற்றல்மூலம் அவள் கண்ணுடைவள் ஆகின்றாள். அந்த கண்கள் வழியாக எழும்தோறும் அவள் ஏழு பிறப்பும் பிறக்கின்றாள். பாதாதி கேசம் வரை அவள் கண்ணனை துதிக்கின்றாள் கண்டடைகின்றாள். ஒவ்வொரு துதியிலும் அவள் ஒவ்வொரு பாவனைக்காட்டுகின்றாள். பக்திக்கு பாவனை அழகு. ஒருபாவனையில் இதுவரை பிறந்தபிறப்பிற்கு எல்லாம் முடிவுக்கட்டி இறைவனை கட்டிக்கொண்டுவிடமுடியும் என்னும்போது பாமா ஏழுபாவனைக்காட்டுவது பக்தியின் உச்சத்திற்கே செல்கின்றாள்.

ஒரு கன்னி தனது ஆணுக்குமுன் சப்தகன்னியெனவே வருகின்றாள். வருபவள் ஒருவள் அல்ல சப்த கன்னி என்று அறியும் விழிக்கொண்டவன் எத்தனை பேறுபெற்றவன்.

நல்ல மருமகன் கிடைத்தால் பெண்ணைப்பெற்ற குடும்பத்திற்கு மற்றும் ஒரு மகன் கிடைத்துவிடுகிறான். நல்ல மருமகன் கிடைக்காவிட்டால் பெண்ணும் யாரோ?

//“என் மகள், சத்யபாமைஎன்றார் சத்ராஜித். “தங்கள் குலம் வாழ்த்தப்பட்டதுஎன்றான்//

கண்ணனைப்பெற்று எடுத்ததன் மூலம் வசுதேவரும், சத்தியபாமாவைப்பெற்று எடுத்ததன் மூலம் சத்ராஜித்தும் இருவேறு வழிகளில் ஒன்றின் நிறைவை அடைகின்றார்கள்.

மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, துரியம் என்னும் ஏழு உலகத்தை ஆண் அடையும்வழி அறிவின் மூலம் என்றால், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி,வைஷ்ணவி, வாரகி, இந்திராணி, சாமூண்டீஸ்வரி என்று ஏழு உலகத்தை பெண்அடையும் வழி அன்பால். அறிவு வடிவம் அற்று உள்நின்று மலர்கின்றது. அன்பு வடிவம் கொண்டு வெளிநின்று அருள்கின்றது. 

விண்ணில் ஏழுக்குமேல் எண்ணிக்கை இல்லை என்று விண்முகில் நகரத்தில் ஒரு வரிவரும், அதைப்படித்து இளம்புன்னகை எழுந்தது அன்று. இன்று பாமாவைப்பார்க்கையில் ஏழுக்குமேல் எதுக்கு எண்ணிக்கை என்று தோன்றுகின்றது.

//அவன் முகில்களை அள்ளிஅள்ளி தேடிக்கொண்டிருந்தான். ”என்ன தேடுகிறீர்கள் தேவா?” என்றாள் அப்சரப்பெண். “இன்னும் இளமங்கையர் இங்குண்டோ என்றுஎன்றான் கந்தர்வன். “நாங்கள் ஏழுபெண்டிர் இங்குளோம் அல்லவா?” என்றாள் அவள். “விண்ணில் ஏழுக்கு அப்பால் எண்ணிக்கை இல்லை என்று அறியமாட்டீரா என்ன?”.-விண்முகனில் நகரம்-8.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே-அபிராமிப்பட்டர்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.