Friday, June 26, 2015

கிருஷ்ணனும் காந்தியும்



ரகுராமன்,

நீங்கள் சொல்வது சரி. காந்தியின் மனவோட்டம் ராமபிரானின் மனவோட்டத்தை ஒத்ததே. காந்தி கிருஷ்ணரைப்போல் வாழ்வைக் கொண்டாட்டமாகவோ களியாட்டமாகவோ நினைத்தவரே அல்ல. இன்றைய காந்தி "காந்தியும் காமமும்" பகுதியில் இது குறித்து ஜெயமோகன் பேசியிருக்கிறார். காந்தியின் ஒழுக்கவியலே அவரை இத்தகைய கடும் சோதனைகளுக்கு இட்டுச்சென்றது. அவர் காமத்தை நோக்கும் பார்வையில் தனக்கு உடன்பாடில்லை என்று ஜெ சொல்லியிருப்பார். வாழ்வு என்பது கொண்டாட்டமும் கூடத்தான் என்பதை காந்தி ஒருவகையில் மூர்க்கமாக மறுத்திருக்கிறார். அதற்கு அவரது சமணப்பின்னணி ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

என்னுடைய வாதத்தில் நான் சொல்ல முயன்றிருப்பது காந்தி சந்தித்த சவால்களை. அதை இப்படித் தொகுக்கலாம்: தீர்க்கவேண்டிய சிக்கலை முழுதுணர்வது ‍(பிரிட்டிஷார் இந்தியா மீது செலுத்தும் இராணுவ, பொருளியல் ஆதிக்கம்); அதைத் தீர்ப்பதை நோக்கி மக்களின் கருத்தைத் திருப்புவது; ஆதிக்கப் பொருளியலுக்கு எதிரான மாற்றுப் பொருளியலை உருவாக்கி நிலைநிறுத்துவது; அதற்கான அரசியல் முறைகள் அனைத்தையும் கையாள்வது.

ஏறத்தாழ கிருஷ்ணன் செய்வதும் இவற்றையே. அவன் அதுவரை பாரதவர்ஷத்தை நிலைநிறுத்தி தற்போது தேங்கியிருக்கும் ஷத்ரிய சக்திகளுக்கு எதிரான மாற்று சக்தியை உருவாக்க முயல்கிறான். அதற்காகப் புதிய பொருளியல் முறையை அறிமுகப்படுத்துகிறான். யாதவ சக்திகளை ஒன்றிணைக்கிறான். பல்வேறு அரசியல் முறைகளால் அதைச் சாதிக்கிறான்.

ஆனால் காந்தி இவை அனைத்தையும் ராமனின் வழிமுறைகளைக் கொண்டு (சத்தியம் தர்மம், நடையில் நின்றுயர்தல், இத்யாதி) சாதிக்க எண்ணுகிறார். குருஜி "காந்தி ராமரை முன் நிறுத்தி, கிருஷ்ணரை பின் தொடர்ந்தார்" என்று சொன்னதை, "காந்தி ராமரின் வழியில் கிருஷ்ணன் சந்தித்த சவால்களைச் சந்தித்து வென்றார்" என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். "காந்தியும் கிருஷ்ணனும்" என்று பேசும்போது இவையும் பேசப்படுவது சரியாக இருந்திருக்கும் என்று தோன்றியதாலேயே இவற்றைச் சொல்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இறுதியாக நீங்கள் எழுதிய அந்த கடிதத்தை வெண்முரசு விவாதங்கள் தளத்தில் வந்தபோதே படித்தேன். நீங்கள்தான் அந்தக் கடிதத்தை எழுதியவர் என்பது தெரிந்திருந்தால் சென்ற கடிதத்தில் உங்கள் எழுத்தை வியந்திருப்பதுபோல் வியந்திருக்க மாட்டேன். வழக்கம்போல அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்லியிருப்பேன். :-)

திருமூலநாதன்