Tuesday, June 9, 2015

தொலைதல்



இது நீங்கள் பல முறை சொல்லி சலித்தது. எல்லாருக்கும் தெரிந்தததை சொல்லுவது இலக்கியம் அல்ல. யாரும் என்ன முடியா கற்பனைக்கு சென்று அதை மொழி மூலம் வெளி கொணர்வதே நல்ல இலக்கியம் என்று. இன்று அதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.
ஆதிபெரும் தனிமையில் ஜடமாக கிடந்தது என்  உணர்வு பிரபஞ்சம். பெரும் பாலைவனத்தின் சிறு துளி மண் போல அகண்ட வெளியில் உணர்வற்று கிடந்தேன். சட்டென்று தோன்றியது உங்கள் கற்பனை எண்ணும் மின்னல். மொழி என்ற ஒளியின் வழியாக அது என் காய்ந்த நிலத்தை தாக்கிய போது உருவானது ஒரு பெரும் சுழற்சி. வெடித்து சிதறின என் உணர்வு எனும்  அண்டம். சிதறிய ஒவ்வொரு துளியும் மறுபடியும் வெடித்து சிதறின. பல்லாயிரம் கோடி முறை இதே மாதிரி வெடித்து சிதறி அதில் உருவானது என் உலகின் முதல் உயிர். தங்களின் ஒவ்வொரு வார்தைகளும் சிறு சிறு பிரபஞ்ச இயக்கத்தை என்னுள் உருவாக்கி கொண்டு இருக்கின்றன.
காதிறங்கிய கரிய மென்மயிர்கள் மழைகொணர்ந்த நீலமணல்வரிகள்”.. இது தான் தங்கள் கற்பனை மின்னல் என் ஜட பிரபஞ்சத்தை தொட்ட அந்த முதல் மணி துளி. அவளின் சிறு பொட்டு “தளிரிலை மேல் அமர்ந்திருக்கும் இந்திரகோபம். ஒளிர்வாளில் எஞ்சிய செங்குருதித் துளி”. அவள் மூக்குக்குழைவு ஆயிரம் கோடி கோடிழுத்த ஓவியனின் கைவீச்சில் பிறந்த வளைவு. “இளமையென்றானது  அவள் கழுத்து”. அவள் கைகள் “இரையுண்டு துயில்கொண்ட வெண்ணிற மலைப்பாம்புகள்”.சிறுசிப்பிகள் என அவள் நகங்கள். கிளிமூக்குகள். சிட்டுக்குருவி அலகுகள்
 இருதுளி திரண்ட தளிர்கள். ஆயிரம் பல்லாயிரம் அமுதக்கிண்ணங்கள். மென்திரை ஒன்றுக்கு அப்பால் ஊறி நின்றது பாற்கடல். ஒசிந்து அமர்கையில், எழுந்து கை தூக்கி குழல் திருத்துகையில், தாவி மரக்கிளை மலரை கொய்யமுயல்கயில்,அவள் சாதாரணமான நடையில் , அது ஆடும் நடனம் என் கண் நிறைக்கிறது.
ஒவ்வொரு சொல்லும் முத்தத்திலிருந்து பிறக்கிறது. பேசிப்பேசி சிரித்துச் சிரித்து அவை காற்றில் அனுப்பும் கோடி முத்தங்களைப் பெற ஒளியில் சிறகசைத்து குளிர் காற்றென வந்து ததும்பும் கண்ணறியா கந்தர்வகள்”.. இதை படித்ததும் புரிந்து கொண்டேன் இரு உதடுகள் புணருகையில் பிறப்பதுதான் அவளின் சொல் எனும் குழந்தை.
சரியாக சொன்னீர்கள்விழிபூக்கும் செடிகளே பெண்ணின் உடல்களென்று” உடல் அற்று, விழி அற்று, ஒளி அற்று, காற்றாகி நிறைவதே காமம் என இந்த பகுதியை படிக்கையில் புரிந்தது. சாத்யாகி மேல் கடும் கோபம் வந்தது திருஷ்டத்யும்னன் மூலமாக உங்களின் பெருங்கனவை ரசித்து கொண்டு இருந்த பொழுது அதை வந்து கெடுத்தற்காக.
ஓம்! சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்!
வெண்முகில் நகரம் பகுதி 19 யில் இதே மாதிரி அனுபவம் ஏற்பட்டது. அது பெண்மையின் இன்னொரு வடிவம். ஐவரோடு சேர்ந்து, மறைந்து கொண்டு அந்த ஆதி சக்தியை  தொழும் அந்த சாக்தனோடு, நானும் சேர்ந்து அவளை தொழுது எழுவராகி போனேன். அதை படிக்கையில் முற்பிறவியில் நானும் ஒரு சாக்தனாக இருந்திருப்பேனோ என்று தோன்றியது. இப்பொழுது இது தங்கள் மொழி என் ஆழ் மனதில் செய்யும் மாயாஜாலங்கள் ஆகவும் இருக்கலாம் என தோன்றுகிறது.

மர கூட்டில் சிறு பறவை குஞ்சாய் நான் எதிர் பார்ததோ ஒரு துளி நெல் மணியை, ஆனால் தாங்கள் என்னை கூட்டி சென்று விட்டதோ எல்லையே இல்லாத ஒரு பெரும் நெல் வயல் தோட்டத்தில். திசைகள் தெரியா அடர்ந்த இருள் காட்டில் நான் கேட்டது என்னமோ ஒரு மின் மினி  பூச்சியின் ஒளியை, ஆனால் தாங்கள் எனக்கு தந்தது அந்த சூரியனே கூசும் ஒரு ஒளி பிரம்மாண்டத்தை. எட்டி எட்டி நான் தொட விரும்பியதோ என் வீட்டு அலமாரி முற்றத்தைதான், ஆனால் தாங்கள் என்னை தூக்கி சென்றதோ அந்த வானத்தை தொட.  ஒரு ஏறும்பின் சிறு கால்களாகதான் நான் இருந்தேன், ஆனால் இப்பொழுதோ தங்களின் கற்பனையால் முடிவில்லா பிரபஞ்சதையே அளக்க ஆரம்பிக்கிறேன். குருடாக இருந்த என் கண்கள் காண விரும்பியதோ, வண்ணத்தை பற்றிய ஒரு சிறு கனவை, ஆனால் தாங்கள் எனக்கு காட்டியதோ  வானமாய் நிறைந்த ஒரு பெரும் வானவில்லை. எல்லா கற்களும் கற்கள் ஆகவே இருக்கிறது, சிலர் வந்து தொடும் பொழுது தான் அது அகலிகையாக உருமாறுகிறது.
ஜெ, எனக்கு ஏற்பட்டது என்னவோ ஒரு அற்ப மானிட தாகம் தானே, ஆனால் அதற்காக பாற்கடலையா கொண்டு வருவது. நான் அதிலும் ஒரு துளி நீரைதானே அருந்த முடியும்...
நீங்களாக இருப்பதனால்தான் இப்பெருங்கனவில் வெறும் பையை மட்டும் தொலைத்து இருக்கிறீர்கள். நானாக இருந்தால் என்னையே தொலைத்து வீடே திரும்பியிருக்கமாட்டேன்.
 ரகுராமன்