Sunday, June 21, 2015

பேறு

இனிய ஜெயம்,

சக்காரியாவின் கதை ஒன்று. 'என் பெயர் கோட்சே'.  நன்மை தீமை  என்ற எளிய முரண் துவங்கி, வாழ்வு மரணம் என்ற ஆதார வினா வரை  இங்கு செயல்படும் முரண் இயக்கங்களை [டைலடிக்ஸ்]  உடைத்து அதன் இயக்க நியாங்களை நியதிகளை பரிசீலித்துப் பார்த்த நெடுங்கதை.

முதல் முறை அக்கதையை வாசிக்க நேர்கையில், என் அக அடுக்குகள் கலைந்து அமைந்தது. அந்தப் பரவசம் மிகச் சில பிரதிகளே அளித்திருக்கின்றன.

இன்று  சிசுபாலன் முன் சப்த தேவியரும்  தோன்றி, அவன் ஏழ் பிறவி கொண்டு  இங்கு மீண்டும் மீண்டும் எய்த வந்ததென்ன என்று உரைக்கும்போது ,  என் உள் அடுக்குகள் கலைந்து  நான் அடைந்த உவகையை சொல்ல வார்த்தைகளே சிக்கவில்லை.

ஆம் பாமாவுக்கு  நிகரானவன் சிசுபாலன்.  கிருஷ்ணனை நோக்கி வரும் அனைத்து உணர்வுகளும் உச்சம் கொண்டே விளங்குகின்றன. உச்சம் கொண்ட உணர்வு, இன்னொரு உணர்வால் சமன் கொண்டே கிருஷ்ணனை அடைகின்றன.  மாளாக் காதல் தீராத குரோதத்தால் சமன் செய்யப்பட்டே கிருஷ்ணனை அடைகிறது.  பாமா  சிசுபாலனை சமன் செய்கிறாள். ராதை கம்சனை சமன் செய்கிறாள்.

ப்ரேமையால் கிருஷ்ணனை அறிவதைக்காட்டிலும், குரோதத்தால் கிருஷ்ணனை அறிவது  எத்தனை உயர்வு.  யாருமே அறியாத தனித்துவமான புள்ளி ஒன்றினில் நின்று கம்சனும்  சிசுபாலனும் கிருஷ்ணனை அறிகிறார்கள்.

கம்சனுக்கு கிடைக்காத பேறு  சிசுபாலனுக்கு கிடைத்திருக்கிறது.

முலையுண்டு மகிழ்ந்த மகவின் இளநகை என செவ்விதழ் விரிந்த தாமரை மேல் பூத்திருந்தாள். செம்பொன்னிறப் பாதங்களில் பத்து விழிமணிகள் சுடர்ந்தன. பொற்பட்டாடையின் அலைகளுக்குமேல் எழுந்தன பொற்றாமரைக் குவைகள். வலதுமேல்கையில் வெண்தாமரை விரிந்திருந்தது. இடதுமேற்கையில் அமுதக்கலம். அருளி அணைக்கும் இரு மலர்ச்செங்கைகள். முலையூட்டி முடித்து குனிந்து மகவை முத்தமிடும் அன்னையின் கனிந்த விழிகள். அது சிரிப்பதைக் கண்டு மலரும் சிரிப்பு. செம்பொன் உருகியது போல் ஒளிவிடும் மேருமுடிகள் நடுவே சூரியன் என அவள் முலைகளுக்கு மேல் சியமந்தகம் நின்றது. அவன் ‘அன்னை’ என்றான். அச்சொல் எஞ்சியிருக்க நினைவழிந்து நிலத்தில் விழுந்தான்.

 
அன்னையின் தரிசனம் கண்டு அவன் ''அனைத்திலிருந்தும் மீண்டு விட்டான்''.  இனி அத்தனை குரோதமும் கொண்டு சிசுபாலன் பயணப்படப் போவது , சுழியை எறிவதற்கு முன் கிருஷ்ணன் பூக்கப் போகும் புன்னகையை காணவே.
 
கடலூர் சீனு