Saturday, June 6, 2015

நகரெங்கும் நாணிலாப் பெண்கள்.



இனிய ஜெயம்,

சுஃப்ரை  விஷயத்தில் திரௌபதியின்  நகர்வு ,  முற்றில்  கணிக்க இயலாதது.  வெளியே சென்றால் நிச்சயம் சுஃப்ரையால் எளிய சூதப் பெண்ணாக அமைந்து விட  இயலாது.  சத்ரியர் எவரையும் பித்துக் கொண்டு பின்தொடர செய்யும் வல்லமை ஒன்று அவளுள் குடிகொண்டு உள்ளது.

மாறாக  அவளை திரௌபதி  அரண்மனைக்குள்ளேயே [கிட்டத்தட்ட சிறை போல] தன் கண்காணிப்பின் கீழேயே வைத்துக் கொள்வது வல்ல யுக்தி. நெருப்பை விட்டு விலகினாலும், நெருப்புடன் இயந்தாலும்  நஷ்டம் மானுடர்க்கே.  சரியான எல்லையில் வைக்கப்பட வேண்டிய நெருப்பைப் போல் சுஃப்ரையை வைத்து விட்டாள் திரௌபதி.

அனைத்துக்கும் மேல் அவள் கொண்ட கலையால் சுஃப்ரை இணை சொல்ல இயலாதவள். அவளை நிச்சயம் தன் நகர் விட்டு நீங்க விட மாட்டாள் திரௌபதி.  

துவாரகை கடற்கரையில் துவங்கி,  தலை வாயில் வரை  திருஸ்தயுத்தும்ணன் செய்யும் பயணம், இணையற்ற வர்ணனை.  குறிப்பாக  காலையின் தேனொளி மெல்ல மெல்ல துலங்குவது தொட்டு,  பீதர் கலம்  மலை என உயர்ந்து நிழல் என கவிவது வரை. திருஸ்தயுத்தும்ணன்  தோளருகே நாமும் நிற்பதான உளமயக்கு.

அவன்  'விஞ்ச்'இல் உயருகையில், அதுவரஎலான வர்ணனை  நிலம் விட்டு எழுந்து, பறவை போல இறக்கை கொள்கிறது. திருஸ்தயுத்தும்ணன்  சாத்யகியுடன்  செய்யும் குதிரை [பந்தயம்] பயணம் வேறொரு தளம்.  கொக்கு போல இரு காலில் எழுந்து பறக்கும் குதிரை மீது நாமும் ஆரோகணித்திருக்கிறோம்.

முற்றிலும் தோற்றவன் என்ற மனநிலையில்  துவாரகைக்குள் நுழையும்   திருஸ்தயுத்தும்ணன்னை  அவனது அகத்தை என்கிரிந்தோ கண்காணித்து அறிந்து கொண்டிருக்கிறான் கிருஷ்ணன்.  ஆகவேதான் திருஸ்தயுத்தும்ணன்னை கிருஷ்ணனால் எளிதாக கரை சேர்க்க முடிகிறது.

உங்கள் தூது எது எனினும் அது  நிறைவேற்றப் படும்  என்று  அவன் துவாரகைக்குள் கால் வைத்த நொடியே  வாக்களிக்கப் படுகிறது. என்ன கம்பீரம்.  தூது எனும் இலக்கு முன்பே நிறைவேறி விட்டதால் , மீதி இருக்கும் நேரம் எல்லாம்  களி ஆட்டம்தானே.

நகரெங்கும் நாணிலாப் பெண்கள்.

நிச்சயம் இந்த விஷயத்தில்  திரௌபதி தான் அமைக்கும் நகரில் கிருஷ்ணனை விஞ்ச முடியாது.
 
கடலூர் சீனு