Friday, June 12, 2015

எடையிலி


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

நேற்று கண்ணப்பநாயனார் கதையில் வரும்  பெரிய புராணப்பாடல் ஒலிவடிவம் கேட்க நேர்ந்தது பாக்கியம். 

கதையை சொன்னவர் இப்படிச்சொன்னார். மாடிப்படிகளில் ஏறினால் எப்படி இருக்கும்?

கால்வலிக்கும், களைப்பாக இருக்கும், மூச்சுவாங்கும், மொத்தத்தில் உடம்பே பெரும் சுமையாக இருக்கும்.

“ஏன் உடம்பு சுமையாக இருக்கிறது?. இந்த உடம்பு நாளுபேரு தூக்கிக்கொண்டு போகவேண்டியது, அதை நாமே தூக்கிக்கிட்டுபோறோம் அல்லவா அதனால சுமையா இருக்கு?” என்றார்.

என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சிரித்தாலும் அது எத்தனை பெரிய உண்மை. நாளுபேர் தூக்கி சுமக்கும் உடலைதான் நாம் தின்றுத்தின்று பெருக்க வைத்து தூக்கி சுமகின்றோம் என்று நினைத்தபோது. நெஞ்சம் கனத்தது. நெஞ்சம் கனக்கும்போதே இன்று மெஸ்ஸில் சிக்கன் வறுத்ததா? குழம்பா? என்றும் நினைவு ஓடியது.

கதை சொல்பவர், கண்ணப்பர் குடுமிமலைத்தேவரைக்காண அந்த மலைமேல் ஏறும்போது ஒரு வித்தியாசமான உணர்வை அடைகின்றார். மேலே செல்ல செல்ல கண்ணப்பர் தன்மேல் உள்ள பாரம் குறைவதாக உணர்கின்றார். அந்தப்பாடலை சொன்னார். 
 ஆவதென் இதனைக் கண்டிங்  
கணைதொறும் என்மேல் பாரம்
போவதொன் றுளது போலும்  
ஆசையும் பொங்கி மேன்மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் 
விருப்புற விரையா நிற்கும்
தேவரங் கிருப்ப தெங்கே 
போகென்றார் திண்ண னார்தாம்.பெரியபுராணம்


பாரம் குறைய குறைய பறக்கும்நிலை தோன்றும். அந்த பறக்கும் நிலை அன்பால் தோன்றும்.

புவிஈர்ப்பு விசை மண்ணோடு நம்மை பிணைக்க ஒரு பாரத்தை நம்மீது வைக்கின்றது. அந்த பாரம்,  பாரம் இல்லாததுபோலவே இருக்கின்றது.   பாரம் என்பதை மேலே நாம் எழும் நிலையில்தான் உணர்கின்றோம். ஒவ்வொரு உயிரும் ஒரு பாரத்தை இயல்பாய் சுமந்துக்கொண்டு மண்ணில் உள்ளது. அன்பைத்தவிர மற்றணைத்தும் உயரே செல்லச்செல்ல பாரமாக மட்டும் இருக்க, அன்பு மட்டும் உயரே செல்வதற்கு பரம் குறைப்பதாக இருக்கிறது.

சத்தியபாமா தனது கனவில் எடையில்லாமல் அவதாக வரும் காட்சியல் அவள் அறியாமலே  நீலன்மீது அவள் கொள்ளும் அன்புதான். அவள் அறியாமலே அந்த அன்புதான் எத்தனை பெரிதாக இருக்கவேண்டும். கருவில் திருவுடையான்போல, இது கருவில் வரும்காதலாகத்தான் இருக்கவேண்டும்.அந்த நகரம் அவ்வளவு பெரியதுஆனால் நான் இறகுபோல எடையில்லாமல் பறந்தபடி அதன்மேல் ஒழுகியலைந்தேன்.” 

அன்பு, காதல்.பக்தி எல்லாம் வடிவங்கள் வேறாக இருந்தாலும் அதன் அடிப்படை மூலத்தால் ஒன்றுதான். பறக்கவைக்கின்றது. 


நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.