Friday, June 26, 2015

சீதையும் பாமாவும்

தையும் பாமாவும்:
ராதை  கண்ணனின் பாதங்களை  கண்டு  மலர்கிறாள். பாமா அவனை ஒரே முறை முழுமையாக பார்க்கிறாள். ஒரே முறை அவன் பேசுவதை கேட்கிறாள். அதில் அவனை முழுமையாக உள் வாங்கிக் கொள்கிறாள். அவள் ஒரு நிறை வாழ்வு கண்ணனோடு வாழ்ந்து முழுமை அவளுக்கு அப்போதே கிடைத்துவிடுகிறது.  பின்னர் அவள் வாய்ப்பு கிடைக்கும் போதுகூட அவனை காண்பதில்லை. அவள் தன் ஆன்மாவை கண்ணனிடம் முழுமையாக சமர்ப்பித்துவிடுகிறாள்.  அவள் தன்னை பற்றிய கவலையை முழுமையாக விட்டுவிடுகிறாள். இனி அவளுக்கு எது நடந்தாலும் கண்ணனே பொறுப்பு. இந்த முழுமையான சரணாகதி அவளை அவனுக்கும் மேலாக உயர்த்துகிறது. அந்த கள்ள மாயனை தன் முழுமையான சரணாகதியினால் கட்டிப்போடுகிறாள் பாமா. பாமாவிடமிருந்து அவனுக்கு எந்த சொல்லும் செல்லத்தேவையில்லை. அவள் இப்போது பேசும் பேச்சு, செய்யும் செயல் எதுவும் அவள் நலம் சார்ந்தல்ல கண்ணன் பொருட்டே. கண்ணன் அந்த இடத்தில் இருந்தால் என்ன பேசுவானோ எதைச்செய்வானோ அதையே பாமா பேசவும் செய்யவும் செய்கிறாள்.  கண்ணன் பாமாவில் பிரதிபலிக்கிறான்.

      சீதை அசோகவனத்தில் சிறைபட்டிருந்ததையும்  இப்போது பாமா மரத்தடியில் விரதம் பூண்டிருப்பதையும் எனக்கு ஒப்பிடத்தோன்றுகிறது. சீதை பாமா இருவரும் தம் தலைவர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். அங்கே சீதையை ராமனிடமிருந்து பிரித்துவைப்பது  இராவணன் என்றால் இங்கே பாமாவுக்கு எதிராக இருப்பது அந்தகர்களின் மனக்குழப்பம், அகங்காரம்.  இருவரும் தன் தலைவன் மட்டுமே தம்மை மீட்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார்கள். சீதை ராமனை மணந்தவள். அவளை காக்கும் கடமை ராமனுக்கு உண்டு. ஆனாலும் சீதை மனதில் சோகமும் சற்று ஐயமும் இருக்கிறது. சீதைக்கு அனுமன் ஆறுதல் அளிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் கண்ணனோடு உலகியல் ரீதியாக எவ்வித பந்தமும்  இல்லாத  பாமா இவ்வித ஐயமோ குழப்பமோ இல்லாமல் மிகத்தெளிவாக இருக்கிறாள். அதற்கு காரணம் கண்ணனிடமான பாமாவின் முழுமையான சரணாகதி மட்டுமே என  நினைக்கிறேன்.