இனிய ஜெயம்
இன்றைய பகுதியில் கர்ணன் நீலன் முன் எடுக்கும் சொல் மிக ஆழம் கூடிய ஒன்று .பார்வைக்கு அது வேத முடிவு வாதத்துக்கு எதிரான சொற்கள் போல தோற்றம் அளித்தாலும் ,அந்த சொற்கள் முன் வைப்பது ஒரு வாழ்வை . இங்கே செயல்பாட்டில் இருப்பது விழைவை பின்தொடரும் உயிர்களின் இயக்கம் மட்டுமே . வலிமை கொண்டதே எஞ்சும் . தன் வலிமை பொருட்டு தாய் ஈன்ற குட்டியை கூட கொன்று உண்ணும் என வன இயல்பு மட்டுமே .ஆம் இங்கே உள்ளது மிருகங்களை கட்டி ஆளும் வன நீதி மட்டுமே . நீயும் உன் போன்றோரும் சொல்லும் அறம் ,பேசும் கருணை இவற்றுக்கு இங்கே என்ன பொருள் ?
ஆம் நீலன் மீண்டும் மீண்டும் காலம் தோறும் எழுந்து வருவான் .அனைத்தையும் கடந்து செல்லும் அந்த வெல்லும் சொல்லை மீண்டும் மீண்டும் முன் வைப்பான் .அவன் முன் காலம் தோறும் மீண்டும் மீண்டும் கர்ணனும் முன் வந்து நிற்பான் . தோல்விகளால் மட்டுமே எய்த இயலும் மெய்மையை அவன் முன் வைத்து நிற்பான் .
மிக மிக அடிப்படையான கேள்வி அதில் கிடந்தது உழல்வதால்தான் அவன் கர்ணன் . அதைக் கடந்து நிர்ப்பதினால்தான் இவன் நீலன் .
துரியனை பாஞ்சாலி எச்சரிக்கிறான் ''இனி அன்னையர் மடி என எதுவும் உனக்கு எஞ்சாது '' அப்படியே ஆகிறது .காந்தாரி துரியனை மறுதலிக்கிறாள் . ஆனால் பானுமதி ? நீ செல்லும் நரக இருளில் உன்னுடன் நானும் நிற்ப்பேன் என துரியன் பின்னே செல்கிறாள் .
ஆனால் கர்ணனின் நிலை ? ஒரு பழியும் அறியா சிசுவாக இருக்கும்போதே அவனை குந்தி கைவிடுகிறாள் . பெண்பழி சூடி அன்னை மடியை இழந்தவன் துரியன் . அன்னை தனது மடியை அளிக்க மறுத்ததால் பெண் பழி கொண்டவன் கர்ணன் . அன்னையும் மறுத்ததை அளித்த பானுமதி எங்கே ? இவள் எங்கே ? நீ செல்லும் நரகில் உன்னுடன் நானும் இருப்பேன் என நின்றிருக்க வேண்டியவள் அல்லவா கர்ணனின் மனைவி ? உதிர்ந்த அந்த மயிர்ப்பீலி அளிக்கும் மீட்பு தான் அவளுக்கு முக்கியம் . கர்ணன் உழலும் இருள் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை .அல்லவா .
குந்தி கர்ணனை இழந்து கண்டடைவது இதுதான் .
// அங்கிருந்து கிளம்பும்போது காட்டின் இலைநுனிகளிலெல்லாம் கூர்வாளின் ஒளிவந்திருந்தது. சேவகர்கள் முன்னால் செல்ல ஐந்து மைந்தர்களுடன் அவள் தொடர்ந்தாள். இளங்காலையின் ஒளியில் அவள் அப்பாதையை முழுமையாகக் கண்டாள். பூக்குலைகளில் தேனுண்ணப் பூசலிட்டன பூச்சிகள். அவற்றை துரத்தி வேட்டையாடின பறவைகள். ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று வேட்டையாடிக்கொண்டிருந்தது. கொல்வனவற்றின் உறுமலும் இறப்பவற்றின் ஓலங்களும் இணைந்தெழும் ஓங்காரத்தில் அனைத்தும் பிணைக்கப்பட்டிருந்தன. //
குந்தியை இழந்து கர்ணன் அடைந்து இதுதான்
//
“இங்கு வாழ்வெனத் திகழ்வது என்ன? நெறியற்ற முட்டிமோதல். ஒன்றை ஒன்று தின்று செல்லும் வெறி. நெறியென்று எதையேனும் நம்பியிருப்போர் வீழ்ந்து மிதிபட்டு அழிய தன்னை எண்ணி தானொன்றே ஆக முன்செல்வோர் வெல்கிறார்கள். யாதவரே, என்றும் வெல்வது நாணமற்ற, தற்குழப்பங்களற்ற, இரக்கமற்ற, வெல்லும்விழைவின் விசை மட்டுமே. விழிகொண்ட எவரும் காண்பது ஒன்றே, இங்கே என்றும் நிகழ்வது அறமறியா ஆற்றலின் வெற்றி. எப்போதுமுள்ளது வெதும்பி அழியும் எளியோரின் இயலாமைக் கண்ணீர்” என்றான் கர்ணன்.
“இதோ அறமும் மறமும் முயங்கித்திரிந்திருக்கின்றன. நல்லோரும் நல்லோருக்கு எதிராக வில்லெடுத்து நின்றிருக்கிறார்கள். தன்னை மிஞ்சிய ஆற்றலால் எதிர்க்கப்பட்டால் புல்லோர் போலவே நல்லோரும் குருதிசிந்திச் செத்துவிழுவார்கள். வெல்வது அறமோ மறமோ அல்ல, ஆற்றல் மட்டுமே. //
நீலன் என்ன பதில் வைத்திருக்கிறான் ? தெரியவில்லை . ஆனால் அவன் சொல்லில் இருந்து கர்ணன் தனது ஆற்றலை மீண்டும் பெறுவான் . மீண்டெழுவான் . ஆம் கர்ணனின் வில் ஓய்ந்திருக்கும் நிலையில் மட்டுமே அர்ஜுனனால் அவன் மார்பை பிளக்க இயலும் .
சர்வ வல்லமை கொண்ட காண்டீபம் அது . ஆனால் அதனால் வில் ஓய்ந்த கர்ணனைதான் சாய்க்க முடியும் .