Wednesday, April 4, 2018

கண்ணனும் கர்ணனும்



இனிய ஜெ...


கண்ணன் மீது தீராக்காதல் கொண்ட ஒருவராக உங்கள் பிம்பம் ஏனோ என் மனதில் பதிந்து விட்டது. எனவே வெண்முரசு படிக்க ஆரம்பிககையில் ஒருவித ஒவ்வாமை இருந்தது.  


காரணம் மகாபாரதத்தில் எனக்குப் பிடித்த கேரக்டர் கர்ணன்.   எனக்கு மட்டுமல்ல  . பலருக்கும்.  எனவே கர்ணனை எப்படி சித்திரிப்பீர்கள் என்ற ஐயம் இருந்தது   ஆனால் எங்கள் அனைவரையும்விட கர்ணனை நேசிப்பவர் நீங்கள் என்பது போக போக புரிந்தது.  கர்ணனுக்கு முடி சூட்டும நிகழ்வை சிறுகதையாக எழுதியிருக்கிறீர்கள்    வெண் முரசிலும் அது விரிவாக வருகிறது.  எப்பேற்பட்டவனும் அந்த பகுதியை கண் கலங்காமல் படிக்க முடியாது.


அதன்பின் கர்ணனைப்பற்றிய நாவலில் மிக நுட்பமாக அவன் துயர்களை மேன்மையை சொல்லியிருந்தீர்கள்


இதற்கெல்லாம் உச்சமாக கண்ணன் கர்ணன் சந்திப்பு இருந்தது. வெண்முரசின் உச்சம் என எத்தனை பேர் இதை நினைக்கிறார்களோ  கணக்கிட முடியாது
அதை படித்ததும்தான் ஒரு கேள்வி. பெரும்பாலும் கண்ணனை கர்ணனுக்கு எதிரியாகவும் கர்ணனுக்கு துரோகம் செய்வதாகவுமே கண்ணனை நம் மனதில் பதிய வைத்திருக்கிறார்களே..  இது அனைத்து நூல்களிலும் அப்படி இருக்கறதா  அல்லது தமிழ்ச்சூலில் அப்படி பழக்கப்பட்டிருக்கிறோமா


பேரன்புடன்
பிச்சை


அன்புள்ள பிச்சை

மகாபாரதத்தில் அப்படி இல்லை. கிருஷ்ணன் எவருக்கும் எதிரி இல்லை. எல்லாரையும் அறிந்தவர்

ஆனால் நாம் பேசும் மகாபாரதம் பெரும்பாலும் நிகழ்த்துகலைகளிலிருந்து வந்த உணர்வுகளால் ஆனது. நிகழ்த்துகலைகள் அடித்தளமக்களாலால் நடத்தப்படுபவை. அவர்களின் மனநிலை பொதுவாக வீழ்ந்தவர்களுக்குச் சாதகமானது. காரணம் அவர்களின் தெய்வங்கள் தொன்மங்கள் வீழ்ந்தவர்கலைப் பாடுபவை. அது மகாபாரத காலம் முதலே அப்படித்தான். வீரகதைப்பாடல் என்றாலே வீழ்ந்தவனைப் பாடுவதுதான். ஆகவே துரியோதனன் கர்ணன் போன்றவர்கள் பெரிய கதாபாத்திரங்களானார்கள். அவர்களின் எதிரிகள் எதிர்மறை நிறம் கொண்டார்கள். நாம் மகாபாரதத்தை இன்று வாசிக்கும்போது இநத இரு தரப்பில் எதில் நின்றும் வாசிக்கக்கூடாது. ஒரு ஒட்டுமொத்த நோக்கு தேவை. வெண்முரசு அதற்கே முயல்கிறது


ஜெ