Sunday, September 6, 2015

கடல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.. நீண்ட நாட்களுக்கு பின் எழுதும் கடிதம்.. இந்திர நீலம் கடைசி பகுதி படித்த உடன் எழுத நினைத்தது.. முடிய 4 நாட்கள் ஆகிற்று..

ஆகஸ்ட் 30 இந்திர நீலம் வாசித்து முடிந்ததும் எழுந்த முதல் எண்ணம், இன்னும் இந்திர நீலம் தொடர என்ன உள்ளது? என்று தான்... இப்போது யோசிக்கையில் புரிகிறது நாவலின் மைய கதா நாயகரகளின் பிரிவை சொல்லாமல் அது முடிவு பெற்றிருக்க முடியாது !


முதற்க்கனலில் இருந்த்து எல்லா நாவல்களையும் தொடர்ந்து தினசரி வாசித்து விட முயன்று வந்து , ஒரு சில நாட்க்களில் மிஞ்சி போனால், 3 அல்லது நான்கு நாட்களின் பதிவை தொடர்ந்து வாசித்து அனைத்து நாவல்களையும் வாசித்து விட்டேன். ஒவ்வொரு நாவல் முடிவும், ஒரு எழுச்சியையும், பிரமிப்பையும் தரும்... ஆனால் இந்திர நீலம் அனைத்தையும் தாண்டி பெரும் ஏக்கத்தை, பிரிவின் சோகத்தை உணர்ந்து, தொண்டை அடைக்க வைத்தது !!! முக்கியமாக 31ஆம் தேதிய பதிவு..


இந்திர நீலம் எட்டு தேவியர்கள் பற்றியது, அவர்களின் ஆளுமை பற்றியது , அதோடு சாத்யகி-திருஷ்டத்யும்னன் நட்பு ப்ற்றியது என்ற எண்ணமே நாவல் படித்து கொண்டிருக்கும் போது இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 30 பதிவையும், நாவல் முடிந்தபின் அதை பற்றி எண்ணும் போதும் , இந்த நாவல் எனக்கு கிருஷ்ணனனை பற்றியும், கிருஷ்ணனின் பரப்பிரம்ம, பற்றற்ற நிலை குறித்தும் பேசிக்கொண்டிருந்தது என்ற எண்ணம் வந்தது


அரசியல் சூழலில் இறுக்கமான தருணங்கலில் விளையாட்டாக நடந்து கொள்வது, எல்லா போர் நிகழ்வுகளிலும், பதட்டமோ, கோபமோ, இறுக்கமோ அல்லாமல் எப்போதும் புன்னகையுடன் வெற்றி நடத்தும் மாமன்னனாக வரும் கிருஷ்ண்னனை படிக்கையில் கீதையில் கேட்ட ஸ்திதப்ப்ரஞ்ஞன் வார்த்தைக்கு அர்த்தப்படுத்த முடிகிறது...


"யார்?” என்றேன். “ஒரு பெண்… மஞ்சள் ஆடை அணிந்து அடர்காட்டினூடாக செல்கிறாள்” என்றான். “அது சிறுத்தையாக இருக்கும். அல்லது பூத்த கொன்றை. உனக்கு வண்ணமேதும் பெண்ணே” என்றேன். அவன் குனிந்து “உனக்கு?” என்றான். “பெண் ஏதும் வண்ணமே” என்று சிரித்தேன்."
கிருஷ்ணனின் ஆத்ம பார்வை இந்த கடைசி வரியில் முழுவதுமாக விளக்கப்பட்டதாக பட்டது.. இது போல நாவல் முழுவதும் பல பல இடங்களில் கிருஷ்ணனின் ஆளுமை முழுவதுமாக அள்ளிக்கொண்டது..



என் தந்தை துறைமுக ப்ணியில் இருந்தமையால் வாழ்வின் முழுவதும், கடல் அருகிலேயே வாழ்ந்து , சிறு வயது அனுபவங்கள் அநேகமாக கடலுடன் தொடர்புடைபவையாக இருந்ததாலோ என்னவோ, துவாரகை இன்னும் என் மனதில் பெரிதாக ரூபமிட்டு கொண்டிருக்கிறது... கடல் சம்பத்தப்பட்ட விவரனைகள் அனைத்தும் மனதில் ஒரு தேடலை பொங்கி எழ செய்தன.. அதுவும் கடைசியில் கடல் மாளிகை பற்றிய பகுதிகளில் வரும் கடல் விவரணைகள்... அற்புதம் ... என் பால்ய நாட்களை கொண்டு வந்து கண் முன் நிறுத்தின...



சிறு வயதில் கோடை விடுமுறை, விழாக்கள் விடுமுறைகள் ஆகியவற்றிற்க்கு குடும்பத்துடன் என் தாய் வழி தாத்தா வீட்டிற்க்கு செல்வோம். தாத்தாவின் மகன்கள், மகள்கள் குடும்பங்கள் யாவரும் வருவர். தாத்தாவிற்க்கு மக்கட்செல்வம் நிறைய என்பதால், வயதொத்த சிறுவர் பட்டாளம் பெரிதாக இருக்கும், 10 நாள் அனைத்தையும் மறந்து கொண்டாட்டமாக இருக்கும். விடுமுறை முடிந்து பெட்டி படுக்கைகளை கட்ட ஆரம்பிக்கும் போது ஒரு சோகம் அழுத்தும்.. ஒரு உலகத்தில் இருந்து வேறொரு உலகத்திற்க்கு செல்லப்போவது போல.. இந்திர நீலம் கடைசி பகுதி படிக்கும் போது எங்கேயோ அடி மனதில் ஆழ்ந்து போயிருந்த அந்த சோகம் மீண்டும் வந்தது... வெண்முரசு நாவல் வரிசையில் முதல் முறை அனுபவிக்கும் உணர்வு... சாத்யகியுடனும் , திருஷ்டத்யும்னனுடனும் துவாரகையை முழுதும் அனுபவித்து விட்டு நானும் அங்கிருந்து பிரிவது போல்...


வெண்முரசு வரிசையில், நீலத்தின் பித்து நிலையை இந்திர நீலம் எட்டவில்லை தான் ஆனால் வெண்முரசு நாவல்கள் ஒவ்வோன்றும் மற்றது எட்டாத ஒரு புள்ளியை, ஒரு உயரத்தை அடைந்த்து ஒவ்வொன்றும், வரிசையின் தரத்தை மேலும் மேலும் உச்சிக்கு கொண்டு செல்கின்றன..வெண்முரசு வரிசையில் அடுத்து வரும் நாவல், இந்த பண்பை தொடரவும், மேலும் சிறப்பாக அமையவும், என் மனமுவந்த வாழ்த்துக்கள்


அன்புடன்
வெண்ணி