Wednesday, September 30, 2015

வாசிப்பின் பேரின்பம்

 
பொதுவாக வெண்முரசு வரிசை நாவல்களின் மையம், வடிவம் இரண்டும் நாவல் முடியும் தருவாயிலேயே நமக்குத் தெரியத் தரப்படும். நாவல் துவங்கி பல அத்தியாயங்கள் கழித்தே வாசகரின் உள்ளத்தில் நிகழும் தொகுப்பின் விளைவாக அந்த வடிவம் உருவாகி வரும். விதிவிலக்காக காண்டீபம் அதன் ஆறாவது அத்தியாயத்திலேயே அதைத் தந்திருக்கிறது. 


நாவலின் துவக்கத்திலேயே நமக்கு இரு கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டனர். ஒருவன் சுஜயன். பெயரிலேயே அர்ஜுனனின் முக்கால் பெயரைக் கொண்டிருக்கும் குழந்தை இளவரசன். குணங்களும் அர்ஜுனன் போன்றே தான். சதா கனவுலகில் இருக்கிறான். அவன் அறிமுகமாகும் போர்க்களத்தில் யானைகளைக் கவ்விச்செல்லும் பெருங்கழுகளுடன் தான் போர் செய்கிறான். வண்ணக்கடலில் அர்ச்சுனனின் பாதை பறவைகளால் ஆனதாக இருந்ததாக வரும். அவன் ஒரு கழுகின் கண்களை நேருக்கு நேராக சந்திப்பான். பறவையின் கண்களைக் கண்ட முதல் மானுடன் என்று இன்னொரு பறவை சொல்லும். அனைத்துக்கும் மேலாக அர்ச்சுனனைப் போலவே அம்மாவுக்காக ஏங்குகிறான். 


சுஜயனின் பிரச்சனை அவனுக்கு ஒரு நிலையான தளம் இல்லாமை. அவனால் கனவையும், நிஜத்தையும் பிரித்துக் கொள்ளத் தெரியவில்லை. கனவில் வீரனாக இருப்பவன் நிஜத்தில் அச்சமும், ஐயமும் கொண்டவனாக இருக்கிறான்.  அவனை விட இளையவர்கள் எல்லாம் எழுத, ஆயுதமேந்த துவங்கிய பின்னரும் இவன் அப்பாதையில் அடியெடுத்துக் கூட வைக்க இயலாமல் இருக்கிறான். அர்ஜுனனின் சாகசங்களைக் கேட்பதால் இவன் அடையப்போவது என்ன? அடைதல் என்பதே அறிதல் தானே!!!

 மாலினி அம்மை கந்தர்வர்களில் இருந்து ஆரம்பிக்கிறாள். அக்கதைகளின் ஊடாக அவன் அடையும் முதல் அறிதல் என்பது "காற்றும் ஒளியும் ஒரே இடத்தில் இருந்தாலும் காற்றின் மீது ஒளி படவில்லை". மிக நேரடியான வர்ணனை, நேரடியான உண்மை. ஆனால் இவ்வுண்மை அவன் வளர வளர அவனுடனே வளரவும் கூடியது. ஒவ்வோர் பருவத்திலும் ஒவ்வோர் மெய்மையை நல்க வல்லது. அந்த அறிதல் தந்த எழுச்சியால் அவன் உறங்கச் செல்கிறான். நாம் அனைவரும் கந்தர்வர்களையும், அவர்களின் வாயிலாக நமக்கு அறியத் தரப்படும் தத்துவங்களையும் விவாதிக்கையில் குழந்தை அந்த விழியைப் பற்றி, அவ்விழியால் காணபவற்றைப் பற்றி அவற்றிற்கிடையேயான போராட்டத்தைப் பற்றி கேள்வி கேட்கிறது. 


சாகசங்களின் ஊடே வருபவை தத்துவங்கள், யோக சாதைனகள். ஒரு வகையில் அவை தெளிவாகவே அக்கதைகளில் நமக்கு அறியத்தரப்படுகின்றன.  நமது புராணங்களில் வரும் குழந்தைக் கதைகள் அனைத்துமே எவ்வளவுக்கெவ்வளவு குழந்தைத் தன்மையைக் கொண்டிருக்கின்றனவோ அதே அளவுக்கு சிக்கலான அனுபவங்களை, உணர்வுகளை, தத்துவங்களை மறைபொருளாக குறிப்பவையாகவும் அமைந்திருக்கின்றன. அதேத் தன்மையை மீளுருவாக்கம் செய்வதாகவே சுஜயனுக்குச் சொல்லப்படும் கதைகள் அமைகின்றன, அமையப்போகின்றன. இதில் வாசகர்களாக நாம் செய்யக்கூடுவது ஒரு குழந்தையாக மாறி அக்கதைகளை அனுபவிப்பதும், அதன் பிறகு அதில் நமக்குத் தோன்றும் கேள்விகளைக் கேட்பதும், அவற்றுக்கான பதில்களை விவாதித்து அறிவதுமே! 


இரண்டாவது கதாபாத்திரம் சுபகை. நல்ல அழகி என்று பொருள். இங்கே பருமனான உடல் வாகு கொண்ட ஒருத்தி அப்பெயரைத் தாங்கி இருக்கிறாள். இளமையில் சிறிய உதடுகளும், சிரிக்கையில் தெரியும் தெற்றுப்பல்லும், அப்பற்களைப் போன்ற கூர்மையுடன் சிரிக்கும் கண்களும் கொண்டவளாக இருந்திருக்கலாம் என்பதை காண்டீபத்தில் இருந்து ஊகிக்க இயல்கிறது. கண்டவுடன் கவர்ந்திழுக்கும் இவற்றாலேயே பார்த்தன் அவளைக் கூடியிருக்கிறான். அவளை எயினி என்று செல்லப்பெயரிட்டு அழைத்திருக்கிறான். அவ்வொரு இரவு வாழ்வே போதும் என்று நிறைந்து விட்டதாக அவள் கூறுகிறாள். தன் எஞ்சிய வாழ்வை ஒரு நீராட்டிச் செவிலியாக, அந்தப்புரத்தில் கழித்துக் கொண்டிருக்கிறாள். அவளளவில் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மாலினி அவளுக்கும் கதை சொல்கிறாள். ஏன்? அக்கதைகளூடாக அவள் அடையப் போவது தான் என்ன?


உண்மையில் சுஜயனை விட மனதளவில் சோர்வும், தனிமையும் கொண்டு நிலையில்லாமல் அலைபாய்பவள் சுபகை தான். அவளைப் பொறுத்த வரை அவளது வாழ்வு அந்த ஒரு இரவுடன் முடிந்து விட்டது. அவளது காலம் அங்கேயே நின்று விட்டது. அதன் பிறகு அவள் வயதாகவே இல்லை. அவள் மனது அந்த இளமையிலேயே உறைந்து விட்டது, கடல் திரைப்படத்தின் பியாட்ரிஸ் போல. எனவே அவள் மனத்தால் முதிரவில்லை. முதிரா மனம் போல் மிகவும் அனுபவம் கொண்ட, முதிர்ச்சியுடன் செயல்படுவதாக நடிக்கும் மனம் வேறு எதுவும் இல்லை. முதிர்ச்சியை வெளிப்படுத்த இயலாத போது அது மகிழ்ச்சியாக, நகையாடுவதாக நடிக்கும். அது ஒரு முகத்திரை. ஆனால் உண்மையை அறிந்த உள்ளம் தனிமையில், சோர்வில், தன்னிரக்கத்தில் வாடும். வாழ்வு என்பதில் பிடிப்பில்லாமல் இருக்கும். இத்தகைய மனம் உடையவர்களின், அதை வெளிபடுத்த இயலாதவர்களின் உடல் அந்த எண்ணங்களாலேயே வண்ணமாகும்(பருமனாகும்). வாழப் பிடிக்கவில்லை என்பதாலேயே அப்பருமனை அவர்கள் கண்டுகொள்வதில்லை. நகைச்சுவையுணர்வு என்ற முகத்திரை அணிந்திருப்பதால் தன்னைத்தானே பகடி செய்து மற்றவரின் கேலிகளில் இருந்து தப்புவார்கள். இங்கே சுபகை அந்த நிலையில் தான் இருக்கிறாள். 


முஷ்ணை அவளைப் பற்றி மாலினியிடம் சொல்லும் போது அவள் நிறைவாக உணர்வதால் பருமனாக இருக்கிறாள் என்கிறாள். மாலினி அதற்கு எத்தனை குழந்தைகள் உனக்கு என்கிறாள். மிகச்சரியான கேள்வி. மாலினி திருமணமே செய்யாமல் பார்த்தனுக்காகவே, அவனின் அன்னையாக மட்டுமே இருப்பதற்காக வாழ்கிறாள். அவள் தன் வாழ்வில் நிறைவாக இருக்கிறாள். அந்த நிறைவே அவளிடம் அழகாக பொலிகிறது. பெண் என்பவளின் நிறைவு மக்களைப் பெற்று நிறைவதே என்ற அடிப்படையிலேயே அவள் அக்கேள்வியைக் கேட்கிறாள். ஆனால் சுபகை போலி நிறைவை அல்லவா கொண்டிருக்கிறாள். அந்த ஒரு கேள்வியிலேயே மாலினி சுபகையின் பிரச்சனையைப் புரிந்து கொள்கிறாள். ஆகவே அவளுக்கும் பார்த்தன் கடந்து சென்ற பெண்களைப் பற்றியும், அவர்களின் உணர்வுகள், ஊடல்கள், கூடல்கள் பற்றியும் கதைகளாகக் கூறுகிறாள். இக்கதைகளில் இருந்து உறவைப் பற்றிய ஓர் அறிதலை, ஆண் என்றும் பெண் என்றும் ஆகி ஆடும் நிகழ்த்துக் கலையில் அவரவர் பாத்திரங்களின் தேவையையும், முழுமையையும் உணர்ந்து கொள்தலை அவள் அடைய வேண்டும். அவ்வடைதலூடாக அவள் மறுபிறப்பெடுக்க வேண்டும். மெய்யாகவே முதிர வேண்டும். வாசகர்களாகிய நமக்கு இப்பகுதியில் வரும் கதைகள் தான் உண்மையான சவாலை வைக்கின்றன. இக்கதைகளில் வரும் பெண்களின் இரு நிலை உணர்வுகளை சமநிலையோடு புரிந்து கொள்ள முயல்கையில் சுபகை மீள்வாள். அப்புரிதலை நாமும் அடைவது தான் நம் வாசிப்புக்கு வைக்கப்படும் சவால். 
ஆக நாவல் இரண்டு திரிகளாக செல்கிறது. இரண்டு திரிகளிலும் அர்ஜுனனை நாயகனாகக் கொண்ட கதைகள் மட்டுமே. ஒரு திரி சுஜயனுக்காக. 

மற்றொன்று சுபகைக்காக. ஒரு திரியில் மிகு கற்பனையும், அதிசய நிலப்பரப்புகளும் கொண்ட குழந்தைக் கதைகள். மற்றொன்றில் பெண்களும், அவர்களின் உணர்வுகளும், காமமும், காதலும், அடைதலும், விலகலும், நிறைவும், குறைவும் மட்டுமேயான ஆண், பெண் உணர்வு சிக்கல்களைப் பேசும் கதைகள். ஒன்றில் சாகசம், மற்றொன்றில் சரசம். இரண்டிலுமே அவற்றைச் செய்பவன் அர்ச்சுனன். அக்கதைகள் அனைத்தும் அவ்வளவு மட்டும் தானா? சாகசம் என்பது புறத்தே நடப்பது, அதைச் செய்வதின் வழியாக அகத்தில் அமைதி, உவகை, நிறைவு எனப் பல உணர்வுகள் வழியாக அறிதலைத் தருவது. சரசம் என்பது அகத்தில் துவங்கி, அதன் எச்சங்கள் தரும் எண்ணங்கள் புறத்தேயும் விளைவுகளைத் தருவது.  இரண்டின் வழியாகவும் இதுவரை நாமறியாத அர்ச்சுனனைத் தெரிந்து கொள்வது வாசகரின் மனதுள்ளே செல்லும் மூன்றாவது திரி. இம்மூன்று திரிகளில் இருந்தும் ஒவ்வொருவரும் தனக்கான காண்டீபத்தை உருவாக்கித் தொகுத்துக் கொள்வது என்பதே இந்நாவலுக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை. 


அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்