Sunday, September 6, 2015

உடல் யானை போல உள்ளம் அதே !


பார்க்க முரட்டுத்தனம் போல தெரிபவர் உள்ளம் சிறு மகவென அமைந்திருப்பது அந்த பரம்பொருள் திருவிளையாடற் போலும்.
நம் சமகாலத்திலும் பலராம பலமும் பாலகர் உளமும் கொண்டவர்களை ஏராளம் கண்டிருப்போம். வெண்முரசு கதாபாத்திரங்கள் அத்தகைய இயல்போடு இருப்பது மிக மகிழ்ச்சி தரிசனம்!
பலராமனின் பெண்மை என அமைந்த சுபத்திரை உள்ளம் சிறு குழவியாய் பேரழகு கொள்கிறது.

அவள் சொல்லும் செயலும் அகம் குளிர்பவை.

"இளமையில் ஒரு முறை தன் முதற் தமையனின் தேரிலேறி துவாரகைக்கு வந்தாள். அன்று பேருருக் கொண்டு தலைமேல் எழுந்த தோரணவாயிலை முகில்குவை ஒன்று சரிந்து மண்ணில் இறங்கிய வளைவென எண்ணினாள். “அந்த முகில் ஏன் வளைந்திருக்கிறது?” என்று தமையனிடம் கேட்டாள். “அது முகில் அல்ல, வாயில்” என்று அவர் சொன்னார். “அவ்வாயில் வழியாக நம் நிழல்கள் மட்டுமே உள்ளே செல்லக்கூடுமா?” என்றாள். அவள் என்ன கேட்கிறாள் என பலராமர் வியந்து நோக்கினார்.

வெண்பளிங்குப் பெருமாளிகைகள் சூழ்ந்த நகரம் அவளை அச்சுறுத்தியது. தமையனின் கைகளை பற்றிக்கொண்டு விழிகளால் ஒவ்வொரு மாளிகைத் தூணையும் தொட்டுத் தொட்டு வந்தாள். வானிலிருந்து முகில் நிரைகள் புரிசுழல் பாதையில் இறங்கிப் படிந்தவை போலிருந்தன அம்மாளிகைகள். “மூத்தவரே இவை விண்ணிலிருந்து இழிந்தவையா?” என்றாள். “இல்லை, இவை மானுடரால் கட்டப்பட்டவை. யவனரும் சோனகரும் பீதரும் கலிங்கரும் தென்னவரும் இணைந்து எழுப்பியவை” என்று சொல்லி அவள் இடையை ஒற்றைக் கையால் வளைத்து சுழற்றித் தூக்கித் தன் தோளில் அமர்த்திக்கொண்டார் பலராமர். மலைத்த விழிகளுடன் ஒளிரும் அவற்றின் சுவர்களையும் மாடக்குவைகளையும் நோக்கி வந்த சுபத்திரை “இவை இமயத்து உப்புக்கற்களால் கட்டப்பட்டவையா?” என்றாள். “இல்லை. யவன நாட்டு வெண்பளிங்கால் ஆனவை. வேண்டுமென்றால் அருகே சென்று நோக்கு” என்றார் பலராமர்.


“இம்மாளிகைகள் ஏன் நகைக்கின்றன?” என்றாள். திரும்பி நோக்கி வெடித்துச் சிரித்து “ஆம் அந்தத் தூண்களெல்லாம் பல்வரிசை போலிருக்கின்றன” என்றார் பலராமர். “மூத்தவரே, இவை மழை பெய்தால் உருகிச்செல்லுமா?” என்றாள். “மழை பெய்தாலா?” என்று கேட்டபின் சிரித்து “உருகுவதில்லை தங்கையே. இவை உறுதியான கற்கள்” என்றார். தலையசைத்து “இல்லை, இவை உருகி வழிந்தோடிவிடும். நான் நன்கறிவேன்” என்றாள் சுபத்திரை. “எப்படி தெரியும்?” என்றார் பலராமர். “அறிவேன். அரண்மனைக்குச் சென்றபின் இளையவரிடம் கேட்கிறேன்” என்றாள் சுபத்திரை. “கண்மூடினால் இவை நெரிந்து விரிசலிடும் ஒலியைக்கூட கேட்க முடிகிறது மூத்தவரே.”
அரண்மனை வாயிலில் அவளை எதிர்கொண்டு அள்ளி தன் நெஞ்சோடணைத்து தூக்கிக்கொண்ட இளைய யாதவர் “ஏன் என் இளவரசியின் விழிகளில் அச்சம் எஞ்சியிருக்கிறது?” என்றார். “எதிர்வரும் மதகளிற்றை அஞ்சாதவள் இந்நகரை அஞ்சுகிறாள். இது மழையில் உருகிவிடுமாம்” என்றார் பலராமர். “உருகிவிடுமா மூத்தவரே?” என்றாள் சுபத்திரை. குனிந்து புன்னகையுடன் “ஆம் தங்கையே. ஒருநாள் இவை முற்றாக உருகி மறையும். ஒரு சிறுதடம் கூட இங்கு எஞ்சாது” என்றார் நீலன். “அவ்வண்ணமெனில் இவை உப்பால் ஆனவை அல்லவா?” என்றாள் அவள். “ஆம், இவையும் ஒருவகை உப்பே” என்றார் யாதவர்."
எங்கு நோக்கினும் நீலம்!


கடலை முதலில் திளைக்கும் அந்த தருணம் அற்புதமாய் விரியும் இயற்கை தரிசனம்.


"விழி திருப்பி கீழே அலையடித்த பெருங்கடலை நோக்கினாள். “அன்னையே, இக்கடல் காளிந்தியை விட பெரிதா?” என்றாள். செவிலி புன்னகை செய்து “காளிந்தி சென்றணையும் பெருவெளி இதுதான். அதைப்போன்ற ஒரு நூறு பெரு ஆறுகள் சென்று நிறைந்தாலும் ஒரு துளியும் கூடாது தேங்கிய நீர்ப்பரப்பு” என்றாள்.

நீலத்தொடுவானை நோக்கி விம்மி நின்றபின் “இந்நீர் அருந்துவதற்குரியதா?” என்றாள். “இல்லை என் கண்ணே, வெறும் உப்புவெளி இது” என்றாள் செவிலி. “அந்த உப்பு அலையில் திரண்டு கரையென வந்ததா இந்நகர்?” என்றாள். “இது உப்பென்று எவர் சொன்னார்கள்? இது தூயவெண்பளிங்கில் எழுந்த மாநகர் அல்லவா?” என்றாள் செவிலி. “இளையவர் சொன்னார்” என்றாள் சுபத்திரை. பின்பு நீர்வெளியை நோக்கி நெஞ்சு மறந்து நின்றாள். தொலைவில் நின்ற சூரிய வட்டம் ஒரு பொன்மத்தெனத் தோன்றியது. அது சுழன்று சுழன்று கடைய அலைகள் விளிம்பை நக்கிச் சென்றன. "

நன்றி! ஜெ
நிறைக இறையருள்!
@தினேஷ்குமார்.