Sunday, September 20, 2015

அன்றாடவாழ்க்கையும் வெண்முரசும்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

காண்டீபம் ஆரம்பம் மிக அருமையாக அமைந்திருக்கிறது. சுஜயனை வெகு இலகுவாக என்  மனம் என்னுடன்  தொடர்பு படுத்தி கொண்டது. சுஜயனாக வாழாத குழந்தைகள் வெகு சொற்பமாகவே இருக்கும். நானும் சுஜயனை போல் நெஞ்சில் குத்துண்டு குருதியால் ஆடையை நனைத்ததுண்டு.அவனை விட வயதில் மிக பிந்திய பிறகும்.

நான் முதன் முதல் கலந்து கொண்ட இலக்கிய கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடந்த கூட்டம் தான். நன்றாக இருந்தது. நல்ல நண்பர்களுடன் உரையாடிய மகிழ்ச்சி. கூட்டம் முடிந்ததும் சிறிது நேரம் உரையாடி கொண்டிருந்தோம். அதில் ஒரு கருத்து முன்வைக்க பட்டது. வெண்முரசு கதாபாத்திரங்கள் தத்துவார்த்த தளத்தில் வைத்தே விவாதிக்க பட வேண்டும் என்று, நம் சொந்த வாழ்கையோடு அவற்றை பொருத்தி பார்க்க கூடாது என்று. அப்பொழுது அதை பற்றி சொல்ல எனக்கு எந்த கருதும் இல்லை. பிறகே எனக்கு சந்தேகம்,  வாழ்கையோடு தொடர்பு படுத்தாமல் எப்படி இவற்றை பார்க்க முடியும்  என்று. வாழ்க்கைக்கும் தத்துவத்துக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தால், நூல் அறுந்த காற்றாடி போல் திசை தெரியாமல் செல்லும் என்றே தோன்றுகிறது .விஷ்ணுபுரத்தில் ஒரு வரி வரும் , நாம் காணும் தத்துவங்களை எல்லாம் நாம் நமது சிறிய வாழ்கையை கொண்டே அறிந்து கொள்கிறோம் என்று .என்னுள்ளும் விவாதத்தை துவக்கியதற்கு மிக்க நன்றி .

அருண் ஆனந்த் 
சென்னை  

அன்புள்ள ஆனந்த்

வெண்முரசு கதாபாத்திரங்களை அன்றாட வாழ்க்கையுடனும் உறவுகளுடனும் இணைக்காமல் இருக்கமுடியாது. நாமறிந்த வாழ்க்கை அது. அதிலிருந்தே புரிதல் தொடங்கமுடியும். 

ஆனால் அங்கே நின்றுவிடுவது பிழை. அன்றாட வாழ்க்கையிப்புரிந்துகொள்வதற்காக வெண்முரசு எழுதப்படுவதில்லை என்பதே அதற்கான பதில்.

அங்கிருந்து மேலும் சென்று ஒட்டுமொத்த நோக்கில் தத்துவ நோக்கில் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது

ஜெ