Friday, September 4, 2015

சுருள்பாதை

இனிய ஜெயம்,

நேற்று இரவு நாவல் வாசித்தேன்.  இரவு மையம் கொள்ளும் சில உளவியல் புள்ளிகளும்  இந்திரநீலம் மையம் கொள்ளும் புள்ளியும்  அதற்க்கு இடையே எத்தனை இசைவு?

உயிர்கள் உறங்குகையில் விழித்திருப்பவன் யோகி. இந்த சொற்றொடர் கிளர்த்திய படைப்பே இரவு.   நாவலின் இறுதி அத்யாத்தில் மேனன் சரவணன் வசம்  சரவணனின் ஆழ்மனம்  கமலாவுக்கும் நீலிமாவுக்கும் இடையே நிகழ்த்தும் இணைப்பை சுட்டுகிறார்.

இங்கே சாத்யகி வசம் கிருஷ்ணர்  ''நானாக நீ நடித்ததையும் அறிவேன்'' என்கிறார்.  

இரவில் இறுதி அத்யாத்தில் சரவணன் '' நான் வெறும் சாலையில் கால்கள் ஊன்றி நடக்க விரும்ப வில்லை. இழுத்துக்கட்டிய கம்பி மேல் ஒவ்வொரு கணமும் பிரக்ஞ்சயால் அடி எடுத்து வைத்து நடக்க விரும்புகிறேன்'' என்கிறான்.

இங்கே த்ரிஸ்ட்யுத்தும்னன் செய்வதும் அதேதான்.  சரவணனும் இவனும் தேர்ந்தெடுப்பது யோகியின் பாதையைத்தான்.

அஞ்சித் திரும்புபவனை உலகியலான் என்கிறோம். என்கிறான் நீலன். மேனன் உலகியிலான்.

கடக்கத் துணிபவனே யோகி.

சரவணனும், த்ரிஷ்ட்யுத்தும்ணனும்  யோகிகள்.

சுருக்கமாக இரவு வீசப்பட்ட கல். இந்திரநீலத் தருணங்கள் கூர்மைப்படுத்தி வீசப்பட்ட கல்.

நாவலை தொடர்ந்து வாசிக்கையில் ஏதேதோ சம்பந்தமே அற்ற கற்பனைகள். நான் மனதுக்குள் எழுதிக் கொண்டிருக்கும் இந்திர நீலத்தில், திருமகள்கள் அனைவரும் கூடி நீலனுக்கு சியமந்தகத்தை அணிவிக்கிறார்கள். மரபார்ந்த நீலனுக்கு மயிர்ப்பீலி. வென்முரசின் நீலனுக்கு உபரியாகவும் உச்சமாகவும் மார்பின் மையத்தில் சியமந்தகம். சிசுபாலன் சிரம் இற்று விழுமுன் அவன் காண்பது வைரத்தின் புன்னகை மேல் நீலனின் புன்னகை. இப்படி ஏதேதோ.
சிவாத்மா வசம் விசனத்துடன் சொன்னேன். இப்டி அத வெறும் கல்லா மாத்தி ஜெயம் அத கடலுக்குள் எரிஞ்சுட்டாரே ?
சிவாத்மா ''கவலைப்படாதீங்க வெண் முரசு முடியும்போது பெரிய பிரளயம் வரும். பாறையில் அமைந்திருக்கும் கிருஷ்ணனின் மாளிகை காணாமல் போகும். அந்த இடத்தில் இந்தக் கல் மட்டும் அமர்ந்திருக்கும். மீண்டும் வைரமாக ஒளி சிதறவிட்டபடி. ஜெயம் எழுதிக்கிடுதானே இருக்கார்  அப்டி கூட ஆகலாம்.'' என்று ஆறுதல் சொன்னார். 

நண்பர்கள் இருவரும் துவாரகைக்குள் முதன்முதலாக நுழையும்போது ,அவர்கள் குதிரைகளில்  சுருள் பாதையின் சிகரம் நோக்கி உயரும் சித்திரம் காட்சிகளால் ஆன ஆரோகணம். மலைக்கழுகு விரித்த சிறகுளில் இலங்கும் உயர்வு.

நண்பர்கள் துவாரகை நீங்குகையில் வரும் சித்திரங்கள் அவரோகணம். உறங்கத் துவங்கும் குழந்தையின் கீழிறங்கி சரியும் இமைகளின் இறக்கம். 

கடலூர் சீனு