Wednesday, September 2, 2015

சியமந்தகத்தின் ஒளி


    ஒளிவிடும் மணிகளைபற்றி   நாம் நிறைய கதைகளை படித்திருக்கிறோம். ஆனால் உண்மையில் ஒரு கல்லிற்கு ஒளிவிடும் தன்மை இருக்குமா?  ஆனால் மங்கிய வெளிச்சத்தில்கூட மின்னும் விலைஉயர்ந்த கற்களை பார்த்திருக்கிறோம். கற்களிலிருந்து  ஒளி பிரகாசமாக பளிச்சிடுகிறது. அதற்கு காரணம் அது வெளியில் இருக்கும் ஒளியை உள்வாங்கி தனக்குள் பலமுறை பிரதிபலித்து தன் வண்ணத்தை சேர்த்து  சட்டென்று ஒரு கணத்தில் உமிழ்வது. அது வெளியில் உள்ள ஒளியிலிருந்து மாறுபட்டும் திண்மை அதிகமாகவும் இருப்பதால் அந்த ஒளி அந்தக் கல்லிலிருந்தே வெளிப்பட்டதாக உளமயக்கு கொள்கிறோம்.
 

 சியமந்தக மணியும்  அத்தகையதா? அதன் உள்ளிருந்து வரும் ஒளி வெளி ஒளியை வாங்கி உமிழ்வதுதானா?  ஆம் என நினைக்கிறேன். ஆனால் அது தன் ஒளியை அதை பார்ப்பவரின் கண்களில் வெளிப்படும் ஆசை என்ற ஒளியை வாங்கி உமிழ்கிறது.  ஒரு வண்ணதொலைக்காட்சியில் மூன்றே மூன்று வண்ணங்கள் வேவேறு விகிதங்களில் ஒன்றிணைத்து பல்லாயிரம் வண்ணங்களை தோற்றுவிப்பதுபோல் சாத்வீக ராஜச தாமசம் என்ற முக்குணங்கள் பல்வேறு விகிதங்களில் ஒன்றிணைந்து பல்லாயிரம் குணங்களாக மனிதர்களுக்கு அமைகின்றன.  அந்த குணங்களுக்கேற்ப மனிதர்களிடமிருந்து ஆசைகள் வெளிப்படுகின்றன. அந்த ஆசையின் ஒளியை உள்வாங்கியே சியமந்தகம் என்ற அந்த மாயக்கல் ஒளிஉமிழ்கிறது.
 

 காளிந்தி தன் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவளாக இருக்கும் யோகீஸ்வரியாக இருக்கிறாள். அதனால் அவளிடம் ஆசை என்பது இல்லாததால், சியமந்தகக்கல் பெருக்கிக்காட்ட எந்த ஒளியையும் அவளிடமிருந்து பெறமுடியவில்லை. அதனால் அது அவள் கரத்தில் ஒளியிழந்து வெறும் குழாங்கல்லாக சிறுத்துவிடுகிறது. என்ன அற்புதமான நிகழ்வு. படித்து முடிக்கையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உறைந்துவிட்டேன். இவற்றை எழுதும் ஒருவர் எத்தகைய உச்சநிலையில் இருப்பார் என நினைத்துப்பார்க்கிறேன். கண்ணன் வெண்முரசில் அவதரித்தெழுந்து நமக்கெல்லாம் அருள்புரிந்துவருகிறான் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.

தண்டபாணி துரைவேல்