Saturday, September 5, 2015

வைரம்

நமஸ்காரம் ஜெ அண்ணா,


தங்களது "இந்திர நீலம் " மஹாபாரதத்தில் கிருஷ்ணர் பற்றி சொல்லி இருந்ததை விட பல சாளரங்களை புதிதாக எனக்குள் திறந்தது. ஒரு ஞானமடைந்த யோகியுடன் வாழ்ந்து கொண்டிருப்பதில், எனது அன்றாட வாழ்நாள் அனுபவம் போல் இருந்தது.. தினமும் அதனுள் மூழ்கி அதாகவே வாழ்ந்தேன்.

ஒரு எழுத்து வாசகனை அதனூடே ஆழ்த்தி அதில் வாழும் அனுபவத்தை பெற வைக்க வேண்டும். அதில் உங்களின் சொல்லாடலும், வார்த்தை கோர்வையும் உங்களின் தெய்வங்கள் உங்களுக்கு செய்தது. அதன் மூலம் அவைகளே இச் சமூகத்தில் தர்மத்தையும், தன் இருப்பையும் வெளிப்படுத்திக் கொள்கின்றன.. உங்கள் மூலம் பிரம்மம் மேற்கொள்ளும் இவ்வாட்டம் தங்கள் நல்லூழ்..


ஒரு வைர கல்லில் ஆரம்பித்து நடுவில் யார் கைகளில் தவழ்ந்ததோ அவர்களால் அணிகளாக பார்க்கப்பட்டு ,திரும்ப தெய்வத்தின் (முற் றுணர்ந்தவனின்)முன்னிலையில் வெறும் கல்லாகவே பார்க்கப்பட்டு, எங்களாலும் உணரப்பட்டு வீசப்பட்டது.. இதன் நடுவே அனைத்து கதைகளும் நிகழ்ந்து முடிந்துள்ளன..அது இலக்கிய நயமாகவும், அந்தாதி போலும் இருந்தது.

காங்கோ மகேஷிடம் தாங்கள் பேசிய போது 10 நாட்களில் முடிந்துவிடும் என சொல்லியிருந்தீர்கள்.. நாங்கள் கூட எவ்வாறு முடியும் என விவாதித்தோம். சற்று வித்தியாசமாக முடிந்து இருந்தது.

மொத்தத்தில் தினமும் இந்து ஞான மரபை சற்று பிழிந்து எங்களை மகாபாரதம் மூலம் அவ்வுலகுக்கே அழைத்து சென்றீர், தங்களது வெறும் நாவல் அல்ல, "காவியம்' இது.ஒவ்வாெரு இளைய தலைமுறைக்கும் சென்று சேர்ப்பது நம் பொறுப்புன்னு கருதுகிறேன்.தமிழ் புதுவார்த்தைகளின் சொல்லாடலும் பிரமாதம், தமிழ் மீது புது உன்மத்தமே பிறந்து விட்டது.
அடிக்கடி, அடிக்கடி அலைபேசியில் பேசி அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அவா.. ஆனால் உங்களை போல பல தளங்களில் இயக்கும் மக்களுக்கு தொல்லை தராமல் இருந்தாலே பெரும் புண்ணியமாகும் என நினைப்பவன் நான். ஆனாலும் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை ..



இதற்கு மேலும் எதையோ சொல்ல விழைகிறேன் ஆனால் அதை வார்த்தையால் சொல்ல இயலாது. இத்தனை நேரம் தந்ததற்கு நன்றிகள் பல உரித்தாக்குகிறேன். !
கண்ணீர் கசிவுடன்,
ஸ்வாமி ருமதா