Saturday, September 5, 2015

விழியின் ஆழி









ஜெ,

சென்ற வாரம்  ஆழியின் விழி அத்தியாயம் ஓன்று படித்து முடித்தவுடன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல்  அனுப்பினேன். வழக்கம் போல காலையில் வெண்முரசை துவங்கி இருந்தேன்,  அத்தியாம் என்ன செய்தது என்பதை விளக்கத் தெரியவில்லை. உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய பின்பு பத்து முறைக்கும் மேலாக அந்த அத்தியாயத்தையே படித்துக் கொண்டிருந்தேன். மதியம் வரை. பின்பு தலை வலிக்கும் அளவுக்கு அதிலிருந்து மீளவே முடியவில்லை. வேறு எதையும் படிக்கவும் பிடிக்கவில்லை.

உங்கள் எடிட்டிங் சென்ஸ் எப்பொழுதும் அபாரமான துல்லியம் கொண்டது.உச்சமான இடங்கள் வரும்பொழுது எத்தனை ஷாட் எத்தனை பிரேம் கத்தரிக்க வேண்டுமோ அத்தனை முன்பாகவே கத்தரித்து விடுவீர்கள். எனவே ஒவ்வொரு உச்சமும் சரியாக துவங்கி சரியாகவே சென்று முடியும். அந்த அத்தியாயத்தில் அங்கேயே அந்த உச்சம் பற்றிக் கொண்டது. எனவே மறு நாள் எப்படி இருக்குமென்று ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. எனவே அதற்குப் பிறகு அத்தியாயங்களை படிக்கவே இல்லை. அது வரை இந்த நூலை மையக் கதாபாத்திரத்தின் அச்சை விவரிப்பது என்றே கொண்டிருந்தேன்.

அனாகதத்தில் நிகழும் தடுமாற்றம் என்று அதை  உணர்ந்த பொழுது கள்ளின் களியாட்டம் என்று உணர்ந்த பொழுது அந்த மின்னஞ்சலில் கள்ளே வேறு பொருளில் வருகிறது என்று எழுதி இருந்தேன். அது எங்கோ கிருஷ்ண மதுரம் என்று வந்து அறைந்தது. அப்படியெனில் அது வெள்ளித் தட்டில் வைக்கப்படும் என உள்ளுணர்வில் அதை உணர்ந்தேன், பாற்கடல் போல.

இப்பொழுது அதை ஒரு யோசனை போல, வாசிப்பு போல சொல்கிறேன், ஆனால் அது ஒரு அலை போல என வந்து அறைந்தது. ஆழ்படிமமென்று சொல்லலாமா எனத் தெரியவில்லை. அதற்கு பிறகு ( முதல் அத்தியாயத்திற்குப் பிறகு ) நான் படிக்கவே இல்லை இன்று மதியம் வரை.எதையோ அஞ்சி தவிர்த்துக் கொண்டிருந்தேன் போல,  ஒரு வகையில் அது ஒரு தரிசனம்தான், அதைத்தான் முந்தைய மின்னஞ்சலில்  குறிப்பிட விழைந்தேன் அது தவறாக வந்து விழுந்து விட்டது. கிருஷ்ணன் உங்களுக்கு காட்சி தருகிறான், உங்கள் தோள்களில் அமர்ந்து இருப்பதால் வெண்முரசு வழியாக நாங்களும் அதைக் காணுகிறோம் என.  

இன்று "மலையுச்சியில்" படித்தபின்பு அந்த அதிர்ச்சி அதிகமானது. உண்மையில் பாற்கடலில்தான் முடிந்திருகிறது போல என.இடைப்பட்ட காலத்தில்  காய்ச்சல் கண்டு விழுந்திருக்கின்றேன். இப்பொழுதுதான் மீதி அத்தியாயங்களையும் படித்து முடித்தேன். 

துவாரகையின் அப்பகுதி முழுக்க யானைக் கூட்டங்களென, எருமை மந்தைகளென, பன்றி நிரைகளென கரிய பாறைகள் பெருகிக்கிடந்தன. இந்த வார்த்தைகளுக்கிடையே கிடக்கிறது நான் கண்டது. கரியது, அந்தரங்கமானது, என்னாலும் அதை தெளிவாக இதுதான் என சொல்லி விட முடியாத ஒரு இமேஜ் ஆக மட்டுமே உணர முடிகிறது, ஆனாலும் கடத்தப் படக் கூடியது போல, இல்லையெனில் இதனை துல்லியமாக நீங்கள் எழுதி எனக்கு அது நிகழ்ந்திருக்காது. அல்லது எனக்கு நிகழ்ந்ததை உங்கள் எழுத்தில் கண்டிருக்க முடியாது. இப்பொழுதும் ஒரு தயக்கம் இருக்கிறது, ஏதோ பக்தி பரவசம் போல என் அனுபவம் புரிந்து கொள்ளப்படுமோ என.

இப்பொழுதும்அந்த அனுபவத்தை எப்படி எழுதினாலும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க முடியமா எனத் தெரியவில்லை. ஆனால் இதை உணர்ந்தேதான் நீங்கள் எழுதி இருகிறீர்கள் எனும் பொழுது அதை புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்தகடிதம். என்னுடைய அந்தரங்கமான அனுபவத்தை நீங்கள் எழுதி விட்டீர்களோ என ஒரு கணம் தோன்றியது, அவரவர் கை நீரில் உங்களுடைய நதியென்றும் என்னுடைய நதியென்றும் ஓன்று உண்டா என மறு கணம் தோன்றுகிறது.   

அச்சுறுத்துவது என்றாலும் வழிமயக்குவதென்றாலும் அறிவு பிறிதொன்று இல்லாத பாதை. அதனால்தான் ஒருவரின் அனுபவம் இன்னொருவருக்கு புரிந்து விடுகிறது போல அதுதான் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்ப ஒரே காரணம்.இதை எழுதி முடித்த பின்பு எல்லாம் பொருள் மயக்கமோ எனவும் தோன்றுகிறது.

சென்ற வருடம் பாதாமியில் இருந்த பொழுது, நடனம் புரியும் சிவனின் சிலைக்குப் பின் சூரியன் அஸ்தமிக்கும் கணத்தில் இதே போன்ற ஒரு அனுபவம் நிகழ்ந்தது.  அந்த புகைப்படத்தை இங்கே உங்களுக்கு அனுப்புகிறேன் ஒரு வேளை அது சொல்லக்கூடும். 

இப்பொழுதும் கூட இந்த மினஞ்சலை அழித்து விட வேண்டும் என ஏனோ தோன்றுகிறது. எனவே கண்ணை மூடிக் கொண்டு அனுப்பி வைத்து விடுகிறேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும் ஜெ. 

*
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மலையுச்சியில் இருந்து குதிக்கும் உவமை எழுத்தை விளையாட்டாக கொள்பவர்களுக்கு உரியது. நீங்கள் ஒவ்வொரு  விளிம்புக்கு வரும்பொழுதும் இன்னும் இன்னும் மேலே பறக்கின்றீர்கள். அதைச் சாத்தியமாக்கும் வெண்சிறகுகள் உங்களுக்கு இருக்கின்றன. நீங்கள் குதித்தாலும் நடந்தாலும் இன்னும் இன்னும் மேலேதான் போக முடியும். அது சிறகுகளின், அதைத் தந்த தெய்வங்களின் விதி. எனவே நாகர்கோவில் நெடுஞ்சாலையிலிருந்து ஈரோடு போகும் வழியில் என்று அடுத்த நூலை எழுதத் துவங்கினாலும் அது சரியாகவே சென்று சேர முடியும். 

 ஏ.வி,மணிகண்டன்
*