Tuesday, September 15, 2015

களியோகி



இந்திரநீலத்தில் கண்ணன் “களியோகி” என்னும் பதத்தோடு வருகின்றான். இந்த சொல்லே முரண்தான் ஆனால் முழுமுரண்கள் இணையும் முழுசொல். கண்ணனும் முழுமுரண்களில் இணையும் முழுமையானவனாகத்தான் வெண்முரசில் படைக்கப்படுகிறான். 

கண்ணனை இறைவனாக எடுத்துக்கொள்வதா? மீமானிடனாக ஏற்றுக்கொள்வதா? சராசரி மனிதனாக ஏற்றுக்கொள்வதா என்பது அவர் அவர் உளப்பாங்கு. மிருதங்கம் வாசிப்பன் அதை பூஜிக்கிறான். மிருதங்கத்தை நிமிர்த்துப்போட்டு  ஒரு முக்காலிப்போல நினைத்து அமரநினைப்பவனுக்கு அது பூஜைப்பொருள் அல்ல. மிருதங்கத்தை பூஜிப்பவன் அதன் தோலையும், மரத்தையுமா பூஜிக்கிறான். அதன் நாதத்தை பூஜிக்கிறான்.கண்ணனை கடவுளாக நினைப்பவன் அவன் விளையாடலை சொல்லை பூஜிக்கவில்லை, விளையாடல் சொல் மூலம் அவன் சென்று அமர்ந்து வாசகனை சேர்ப்பிக்கும் நிறைநிலையை பூஜிக்கிறான். 

காந்தாரியை கண்டு அவள் மடியில் கால்போட்டு குழல்ஊதி வரும் கண்ணன் ஒரு சராசரி மானிடன் இன்னும் சற்று கூர்மையாக சொல்லவேண்டும் என்றால் சரியான ராஜதந்திரி, ஆனால் அவன் அதற்கு பிறகு அனைவராலும் கைவிடப்பட்ட திருதராஷ்டிரன் கடைசி மனைவி சுப்ரையை கண்டு வணங்கி அவளோடு பேசித்திரும்புகிறான். இத்தனைக்கும் சுப்ரை அவனிடம் ஒருவார்த்தைகூட பேசவில்லை என்பதையும் நாம் கவனிக்கத்தான்வேண்டும். அன்று இரவு அவள் இறந்துப்போகிறாள். ஒரு பூ தன் காம்பில் இருந்து உதிர்வதுபோல இறந்துப்போகிறாள். இவ்வளவு எளிதாக மரணம் மனிதனுக்கு வாய்த்துவிடுமா?  இங்கு கண்ணன் நமக்கு தெரிகிறான், தெரியாத காலன் (யமன்) அங்கு என்ன செய்துக்கொண்டு இருக்கிறான்? அங்கு காலனைப்பற்றி ஒரு கேள்வியும் எழுப்பவேண்டிய அவசியம் இல்லையா? அப்படி அந்த மரணத்தைப்பற்றி, சுப்பரையைப்பற்றி நாம் எளிதாக கடந்துபோவது என்றால் ஏன் அந்த சந்திப்பு வெண்முரசியில் கொண்டாடப்படுகிறது. ஏன் ஒரு எளிய பெண்ணுக்கு அந்த காட்சி கொடையாக கொடுக்க்கப்படுகிறது.  அதுதான் வெண்முரசுக்காட்டு தெய்வீகக்கண்ணன். இதில் ஒன்றுமே இல்லை வெறும் சராசரித்தனம் என்று நினைத்தால் வெறும் சராசரித்தனம்தான், 

பொன்னி நெல் விதைத்தவயலில் டிகே9 முளைத்தால் அது களை என்று பிடுங்கப்படும். டிகே9 விதைத்த வயலில் பொன்னி நெல் முளைத்தால் அது களை என்று பிடுங்கப்படும். பாய்கோரை விளையும் நிலத்தில் நெல் முளைத்தால் களை. நெல்விளைத்த வயலில் கோரைமுளைத்தால் களை. கோரைக்கும் நெல்லுக்கும் உயிரில் வித்தியாசம் இல்லை, உடலில், சூழ்நிலையை பாதிக்கும் விதத்தில் மாற்றம் உள்ளது. பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டு பஞ்சபூதங்களை ஒட்டி வாழும் வாழ்க்கையில் பஞ்சபூதங்களை உலக இயக்கத்திற்கு எதிராக திருப்பும் செயல் அனைத்தும் அறம்மீறல்தான். கம்சன் தான் வாழவேண்டும் என்பதற்காக கண்ணனை கொல்லவேண்டும் என்று சூழ்நிலையை பாதிக்கிறான். பஞ்சபூதங்கைளை ஆட்டிப்படைகிறான். அதன் மூலம் உயிர்கள் அனைத்தும் அல்லல் படுகின்றன. கண்ணன் சூழ்நிலையை காக்கும் பொருட்டு கம்சன் ஒருவனை அழித்து உயிர்கள், சூழ்நிலை, பஞ்சபூதம் அனைத்தையும் நலம்பெற வைக்கிறான் அல்லது அதன் அதன் இருப்பில் வைக்கிறான். 

தான் ஒருவனுக்காக(கம்சன்) மற்றவைகளை இருப்பை அழிப்பவனும், தன்னை பலியிட்டாவது (கண்ணன்) மற்றவைகளின் இருப்பை நிலைநிறுத்தவேண்டும் என்று நினைப்பவனும்   ஒரு வடிவமா? அதிகார போர் மட்டும் நடத்துகின்றவானா? கண்ணன் பிழைத்துக்கொண்டான் அதனால் அவனை கடவுள் என்கிறோம். கம்சனோடு நடந்த மல்யுத்தத்தில் கண்ணன் இறந்து இருந்தால் அவன் தியகம் அர்த்தம் அற்றதா? கம்சனும் கண்ணனும் ஒரே தட்டில் வைத்தால் மானிட உண்ணதங்களில் ஒன்றான தியாகம் என்பதற்கு என்ன  பொருள்?, கோகுலத்தில் குழல் ஊதக்கொண்டு இருந்த கண்ணன் கம்சனை கொல்வேன் என்று மார்த்தட்டிக்கொண்டுகிளம்பி இருந்தால் அது ஒரு தீவிரவாதம். நான் கம்சனைக்கொல்வேன் என்று சொல்கிறான் ஆனால் தான் முன்னால் சென்று அந்த யுத்தத்தை கண்ணன் செய்யவில்லை என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.  கம்சன் தங்கையின் மகன் என்று அழைத்து யுத்தத்தில் நிறுத்துகிறான். கம்சனின் தீவிரவாதத்திற்கும், கண்ணனின் பொருமைக்கும் ஒரே அர்த்தம்தான் நம்மால் கொடுக்கமுடியுமா?  அகிம்சைக்கு பொறுமைக்கு இங்கு ஒரு அர்த்தமும் ஞாயமும் இல்லையா? 

கம்சன் ஆட்சி செய்யும் மதுராபுரி யாதவர்கள் குலவழக்கப்படி தேவகிக்கும் தேவகியின் வாரிசான கண்ணனுக்கும் உரியது அதை அரசியல் அறத்தைமீறி கைக்கொண்ட கம்சன் அதற்காக செய்த கொலைகள் எத்தனை? வெண்முரசு அதை எத்தனை இரத்தம் சிந்தி எழுதி செல்கிறது. இத்தனைக்கும் பின்பும் கண்ணன் கம்சனைப்பார்க்க மருமகனாகத்தானே செல்கின்றானன். முருகனை சிவனென்று யுத்தத்தில் உணரும் சூரப்பதுமன்போல  அந்த கண்ணனாகிய  மருகனை கம்சன் கண்டுக்கொள்வது யுத்தத்தில்தானே. கம்சனின் மருகன்மீது பெருகும் அன்பை அந்த யுத்தத்திலும் வெண்முரசுக்காட்ட தயங்கவில்லை. ஒரு மிருகம் மானிடத்தாய் ஆகும் கணம் அது. 

கண்ணன் இங்கு வெறும் கடவுள் என்றோ, வெறும் மீமனிதன் என்றோ இல்லையே. நான் என்னும் அகங்காரத்திற்கும் அன்பென்னும் அகிம்சைக்கும் இடையில் விழும்போராகத்தானே வெண்முரசு காட்டுகிறது. கம்சனை கண்ணன் கொன்றுவிட்டதால் அவன் அன்பில்லாதவன் என்று எப்படி நினைப்பது. அது கண்ணன் தேர்ந்து எடுத்த வழியில்லை. நாம் கண்ணனை கம்சனோடு நிறுத்தி கண்ணன்மீது குற்றம் சாட்ட, கம்சன் தேர்த்தெடுத்து வீசிய காலபாசத்தை கண்ணன் திருப்பி கம்சன்மீது ஏவுகிறான். இது எப்படி அதிகார வர்க்கப்போராகும். 

வெண்முரசு கம்சனின் அறம்மீறும் செயலையும், கண்ணனின் அறத்தையும் சரியாகத்தான் பதிவு செய்கிறது. இதை எப்படி முரண் என்று எடுத்துக்கொள்வது. அந்த முரணின் அப்பால் உள்ள உண்மையின் ஒளியை தரிசித்தால் அது வெறும் பக்தி. ஜால்ரா, சப்பளாகட்டை, பச்சைத்தனம் என்று சில சொற்களில் எதிரியின் முகத்தில் அடித்துவிடலாம். அடிப்பட்டவனும் அவன் கண்ட ஒளியை கைக்கொண்டு வரமுடியாமல் கண்ணீர் மட்டும் விடவேண்டும்.. 

முரண்களை பேசுபவர்கள் அனைவரும் ஞானிகள். பத்தியை பேசுபவன் முட்டாள். பத்தியை முன் வைப்பவன்போல முரண்களைப்பற்றி பேசுபவன் யார்?  ஞானிகள் முரண்களை முன்வைக்கிறார்கள். அவர்கள் காட்டும் மையம் எங்கு வந்து நிற்கிறது?. பக்தன் மையத்தில் இருந்து தொடங்கி முரண்களில் ஊஞ்சல் ஆடுகிறான். ஞானிகள் அடையும் அசைவின்மையை, பக்தன் ஆடும்போதே அடைந்துக்கொண்டுதான் இருக்றான். இன்னும் அழுத்தமாக சொல்லவேண்டும் என்றால் ஞானிகள் ஒருமுறை நிற்கும் மையத்தில் பக்தன் பலநூறுமுறை சென்று நிற்கிறான். கண்ணனின் தந்தை நந்தகோபன் அடையும் சகடதரிசனத்தை, கண்ணனோடு வட்டத்தில் ஆடும் கோபியர்கள் அடைகிறார்கள். நந்தகோபனைப்பற்றி சொல்லும் வெண்முரசு கோபியர்களையும் சொல்லிச்செல்கிறது. 

 மித்திரவிந்தையை மணம்முடிக்க செல்லும் கண்ணன் தனது தங்கை சுபத்திரையை அழைத்துச்செல்கிறான். அன்றைய அந்த சூழ்நிலையில் அது ஒரு புதுமை. ஏன் அப்படிச் சொல்கிறேன்? மித்திரவிந்தைக்கு கண்ணன் பெயர்கூட தெரியாது என்பது இருக்கட்டும், அவளுக்கு நீலம் என்ற வண்ணமே தெரியாது, மயில் தெரியாது என்பது வெறும் சொற்களா? பெண் எந்த அளவுக்கு அழித்திவைக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை காட்டுகிறது. கண்ணன் பெயர் தெரியாது என்பதன் மூலம் அவளுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை, மயில் தெரியாது என்பதில் இருந்து காட்சி சுதந்திரம் இல்லை. இதுபோல் அவளுக்கு எந்த சுதந்திரமும் இல்லை. உதிரத்தை உண்டு உதிரத்தில் வளரும் எறும்புபோல அங்கு அவள் உதிரம்வடியும் ஒரு உறுப்பாக மட்டும் நினைக்கவைக்கப்பட்டு உள்ளாள் அந்த அடிமை தனத்தை கண்ணன் சுபத்திரை என்னும் சுதந்திரபெண்கொண்டு, ஆடவருக்கு சமமான பெண்கொண்டு உடைக்கிறான். இதைவிட பெண் அடிமைத்தனத்தை சாடும் வழி என்ன?  கண்ணன் காட்டும் பெண்மையின் வடிவம் சுபத்திரை. இதை கடவுளோடு வைக்கலாமா? மீமானிடத்தனத்தில் வைக்கலாமா? களிமகன் நினையில் வைக்கலாமா? யோகியர் நிலையில் வைக்கலாமா? சுயநலக்காரன் இடத்தில் வைக்கலாம். கண்ணன் இங்கு சுயநலக்காரனாக இருக்கட்டும். காலம் காலமாக பெண்களை போகப்பொருளாக நினைக்கும் ஆண்டவர்க்கத்தின் ஆடவர் உலகில் இங்கு கண்ணன் ஒரு சுயநலக்காரன் ஆனால் இதை மித்திரவிந்தை, சுபத்திரை இடத்தில் இருந்து அவர்களின் கண்களால் நாம் கண்ணனைப்பாாத்தால் அந்தப்பார்வையில் கண்ணன் யார்? பெண்டீர் சமூகத்தை அகத்திலும் புறத்திலும் தூக்கி நிறுத்துகிறான். சியமந்தக மணியை கண்ணன் இறுதியில் சுபத்திரை இடம் தருகிறான் அதை அவள் கடலில் எறிகிறாள். ஏன் அப்படிச்செய்தால்? அண்ணனாகிய கண்ணன் தனக்கு உடலாலும் உள்ளத்தாலும் பெரும் நிறைவை அளித்துவிட்டான் என்று சொல்லாமல் சொல்கிறாள். கண்ணனைப்போல தங்கையின் வீரத்தை வெளிப்படுத்தும் எத்தனை அண்ணன்கள் நம்மிடம் உண்டு?.  தான் பிஎஸ்சியில் அரியர்ஸ் வைத்திருக்கிறான் என்பதற்காக நன்றாகப் படித்து காலேஜியில் முதல் இடம் பிடிக்கும் தங்கையை மதத்தின் பெயர் சொல்லி படிக்கவிடாமல் செய்யும் அணணனைப்பற்றி நண்பர் ஒருவர் நித்தம் வந்து வேதனைப்படுவதை நினைத்துப் பார்க்கிறேன் இந்த இடத்தில். கண்ணனை அந்த இடத்தில் என்ன சொல்லி இருக்கம் ஆண்வர்க்கம். பொம்பளை முந்தானையில் மறைந்துவந்தவன் என்று சொல்லி இருக்கும்.  

திருஷ்டத்யுமனன் கிருஷ்ணகிரியில் இருக்கும் கண்ணனை காண செல்லும்போது பாறையின்மீது கடல் அலைமோதுகின்றது என்பதை காண்கின்றான். இது இயற்கை. இந்த இயற்கை திருஷ்டத்யுமனுக்கு என்னவாக தெரிகிறது என்பதை வெண்முரசு அடுக்கிக்கொண்டே செல்கிறது. இயற்கையை இயற்கையாகவே கண்டு கொண்டு இருந்தால் ஏன் கலைகள்? இயற்கையின் கோலங்கள் என்ன என்பதை வெண்முரசு விளக்கும்போது கண்ணன் கடவுளாக, மீமானிடனாக வந்துநிற்கிறான். இதில் கண்ணனும் வாசகனும் கொள்ளும் தொடர்புதான் அந்த நிலையை உணரவைக்கிறது.கண்ணன் அதை செய்யவில்லை. அந்த தொடர்பை விளக்கவே நாம் முயற்சி செய்யவேண்டும். 

கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்ற மார்க்கத்தில் ஞானத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஞானம் அடையும் வழியாகவும் அடையப்படும் பொருளாகவும் இருக்கிறது என்பதுதான் அது. உதாரணமாக படிக்கட்டு மாடிக்கு அழைத்துச்செல்கிறது. அந்த மாடியின்மீது இன்னொரு மாடிக்கட்டிவிட்டால் மேல்மாடிக்கு கீழ்மாடியும் ஒருபடிதான். இந்த முடிவற்ற ஞானம் எங்கு சென்று நிற்கும். அதனால்தான் பெரும் ஞானத்தையும் வைத்துக்கொண்டு ஒன்றும் ஆவபோவதில்லை என்பதை அறிகின்றவர்கள் லீலைக்கு வந்துவிடுகிறார்கள். பெரும் ஞானியான இறைவனும் இந்த லீலையில் லயிப்பது அதனால்தான். லீலையிலும் பலவகை உண்டு என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் சொல்கிறார். இறைலீலை, தேவலீலை, மானிடலீலை என்று. கண்ணன் யோகியாகவும், களியனாகவும் வெண்முரசில் இந்த லீலைகளில்தான் வந்து நிற்கின்றான். கண்ணனை களியோகியாகப்பார்த்தால்தான் வெண்முரசு கண்ணன் முழுவடிவம் தெரியும். 

சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் ஒருவன் வலதுகைப்பக்கமே பார்த்துக்கொண்டு செல்கிறான் என்றால் அது அவனுக்கு போதுமானதாக இருக்கிறது என்றுதான் பொருள். இடதுகைப்பக்கமாக பார்ப்பவன்தான் என்னப்பார்த்தேன் என்று சொல்லவேண்டும், அப்படியும் சிலர் இருக்கத்தானே செய்வார்கள். இரண்டுப்பக்கமும் பார்க்கிறேன் என்று எதையும் பார்க்கமல்போனால் என்ன செய்வது. வெண்முரசு ஒரு வைரமணி சித்திரராஜவீதி, அதில் யாரும் முழுதும் அள்ளிவிடமுடியாது. அப்படி முழுதும் அள்ளியவர்கள் இருந்தால் அவர்கள் மீமானிடர்கள்தான் அல்லது ஞானக்கொடைப்பெற்றவர்கள்.  

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகு சுவையொளி ஊறுஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாருந் தவம் உடையார் படையாத தனம் இல்லையே-அபிராமி அந்தாதி.

இந்தப்பாடலில் அன்னைசிவகாமசுந்தரிப்பாதத்தை அடைந்தால் எல்லா செல்வமும் கிடைக்கும் என்று பக்தி சொல்கிறது. அந்த பக்தி அன்னை சிவகாமசுந்தரி திருவடியை காட்டுவதன் மூலம் நிலம்,நீர்,காற்று, தீ, ஆயகம் அனைத்தையும் ஒன்றாக சேர்க்கும் சக்திலீலையைப்பற்றிப்பேசுகிறது. இந்த செயல்படும் சக்தி , மோனத்தில் ஆடும் நடராஜசிவத்தை காட்டுகிறது. இங்கு அன்னை சிவகாமசுந்தரி மட்டும்தான் தெரிகின்றாள், அப்பன் நடராஜன் தெரிவதில்லை. அங்கு நடராஜன் இல்லாமலா இருக்கிறான்.   பக்தி முரண்ப்பற்றி பேசவில்லை, ’ஞானத்தை காட்டுவில்லை என்று நினைத்துக்கொள்வதன் மூலம் நாம்பக்தியை இழக்கவில்லை. ஞானத்தையே இழக்கிறோம்.  வெண்முரசு கண்ணனை மற்றவர்கள் பார்வை வழியாக நாம் பார்க்கும்போது நாம் பார்வை இன்னும் விரிவடையவே செய்யும் அது பக்தியாக இல்லாமல்  போகட்டும் நிச்சயம் ஞானமாக இருக்கும். 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.