Thursday, September 24, 2015

ஆண்களின் உலகம்



புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்-திருக்குறள்.

நீரை ஊற்றி ஊற்றி உடலைக்கழுவுவதுபோல, எண்ணங்களை ஊற்றி ஊற்றி அகத்தைக்கழுவலாம் என்று மாலினிச்சொல்கிறாள். கழுவுவதற்கு எடுத்துக்கொள்ளும் நீரும் எண்ணமும் தூய்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான் தூய்மையை நாடுபவன் முதற்கடமை.

மானிட உடலும், உள்ளமும் இயற்கையில் புனிதம் நிறைந்தது  அல்ல, அதை செயற்கையால் புனிதப்படுத்தத்தான் இந்த நீராடால் எல்லாம். நீராடிவிடுவதாலேயே புனிதம் அடைந்துவிடுவதில்லை, நீராட நீராட புனிதம்.

ஐயவருக்கு மனைவியாகிவிட்ட பாஞ்சாலிக்கு ஒரு புனிதத்தை புறத்தில் அமைத்துவிட்டு செல்லும் நாரதர் அறிவார் மானிட அகத்தின் ஆடலை. அந்த ஆடல் ஒன்றுடன் ஒன்று சிக்கி சிடுக்காகி நடனத்தை அழித்து ஊழிப்பெரும் அழையாக மட்டும் மாறும் என்றால் வாழ்வு என்ன ஆகும்? புனிதப்படுத்தவேண்டிய நீரே உயிரையும் எடுக்கும் காலனாகிவிடும். அதனால்தான் நடனத்தில் இருக்கும் அலைகளை அதன் அதன் எல்லைக்குள் நீர் ஊற்றென ஆடவைக்கின்றார். ஆண்டுக்கு ஒரு பிறப்பு, ஆண்டுக்கு ஒரு கணவன், ஆண்டுக்கு இறப்பு அதன் எல்லைகளை வகுத்துக்கொள்ளும்போது அதன் ஊழித்தாண்டவத்தின் உக்கிரம் குறைக்கப்படுகிறது.

உடல் இந்த எல்லைக்குள் நிற்கிறது, எல்லை எற்ற மனம் அந்த எல்லைக்குள் நிற்கின்றதா? எல்லை அற்றதை எல்லைக்குள் வைக்கும்போது, எல்லைக்கு எல்லை வகுக்குத்தால் எல்லையற்றதும் எல்லைக்குள் நிற்கிறது. எல்லைக்குள் நின்றாலும் அதன் அசைவுகள் நிற்பதில்லை. பெரும் அணைக்கட்டில் மேல்மட்டத்தில் சலனமற்று நிற்கும் நீர், கீழ்மட்டத்தில் அந்த அணையை தள்ளிக்கொண்டே நிற்கிறது. எத்தனை முறை பிறந்தால் என்ன? எத்தனை முறை இறந்தால் என்ன? எத்தனை முறை மணந்தால் என்ன? எல்லாம் உடலுக்குதான். உள்ளம் அதே வண்ணத்தில் வடிவத்தில் இயங்கி்க்கொண்டே இருக்கிறது. காதல் தோல்வி உள்ளத்தில் அறைந்து அறைந்து அதிர்வுறச்செய்துக்கொண்டேதான் இருக்கிறது. சுபகையும், பாஞ்சாலியும் இந்த இடத்தில் ஒருவரேதான். சுபகை தனது கால்தோல்வியை சொல்லும் இடத்தில் மலையின் காதல்தோல்வியை எண்ணி தனது காதல்தோல்வியை தாண்டுவாள்.

எத்தனை எண்ணங்கள்! ஓரிரவு துயில்நீப்பதென்றால் ஒரு முழுவாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து முடிப்பதென்றல்லவா பொருள்? ஒவ்வொரு கணமாக காலத்தை அறிந்தேன். அப்போது மலைகளை எண்ணி இரக்கம் கொண்டேன். அவை அறியும் காலத்தின் பெருஞ்சுமையை மானுடர் அறிவதில்லை. எவ்வண்ணமேனும் சில ஆண்டுகளை உந்தி உருட்டினால் இறந்து மண்ணில் மறைந்துவிட முடியும். மலைகள் காதல் கொண்டு புறக்கணிக்கப்படுமென்றால் அவை என்ன செய்யும்?”-காண்டீபம்.-2.

சுபகையுடன் ஒப்பிடும்போது மலையென வந்து நிற்குபம் பாஞ்சாலியின் காதல்தோல்விதான் எத்தனை பெரியது. மலை உள்ளும் புறமும் உலர்ந்து கல்லாகி நிற்கும்போதும் அதற்கு வெளியில் எத்தனை எத்தனை உயிர்குலங்களின் வாழ்க்கையின் தாயகமாக இருந்து பசுமை செய்யவேண்டும். மலைமீது பசுமையாகி பூத்து காய்த்து கனிந்து தேன் வடிக்கும் விருட்சங்கள் அறியுமா இந்த மலைக்கு என்று ஒரு பசுமையும் இனிமையும் இல்லையே என்பதை?.

பள்ளியறையில் இருந்து முன்னால் எழுந்துவரும் பாஞ்சாலி அகம் பள்ளியறையின் கதவென்றே நிற்கிறாள். அவள் உடல் மட்டும்தான் தருமனுடன் கிடக்கிறது. போருக்கு சென்ற தலைவன் இரவில் வந்து கதவை தட்டினால் எழுந்துவந்து திறக்க நேரம் ஆகும் என்று கதவாகவே இருந்தால் தலைவி என்று ஒரு கவிஞன் வடிக்கிறான். பாஞ்சாலியின் உடல் கட்டிலி்ல் உள்ளம் கதவில் என்ன ஒரு வெறுமை வாழ்க்கை. உள்ளதை உடலில் வைக்கும் தெய்வம் அதன் சித்திரவதையை புன்னைகையோடு ரசிக்கும் கொடூரக்கலைஞன்.
நிமித்திகர் நூல் ஆராய்ந்து முறைமீறிய குற்றத்திற்கு தண்டனையாக ஓராண்டு அர்ஜுனன் நகர் நீங்க வேண்டும் என்பர்கள், அர்ஜுனனின் ஆண்டை தருமனுக்கே தருகிறார்கள். தருமன் முகம் மலர்கின்றான். பாஞ்சாலி விழி கூர்க்கொள்கிறாள். அர்ஜுனன் அந்த பார்வையில் அஞ்சி அன்றே நகர்நீங்குகிறான்.

பகவான் ராமகிருஷ்ணபரமஹம்சர் சொல்கிறார். “வாழ்க்கை வெறுத்துவிட்டது என்று குடும்பத்தை விட்டு வெளியேறுவான். போய்சேர்ந்த இடத்தில் ஒரு உத்தியோகம் சம்பாதித்துக்கொள்வான், கையில் கொஞ்சம் பணம்வரும், பின்பு மனைவி, அதன்பிறகு பிள்ளை, அதே குடும்பவாழ்க்கை. முதலில் மனதில் துறக்கக்கற்றுக்கெள்”  

ஆண்களுக்கு எந்த தண்டனைக்கொடுத்தாலும் தப்பித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தண்டனை என்பது எல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டும்தான். பெண்கள் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படாமலே இருவழியில் தண்டிக்கப்படுகிறார்கள். ஒருவழியில் உடலால், மறுவழியில் உள்ளத்தாள். இது ஆண்களின் உலகமப்பா.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.