அன்புநிறை ஜெ,
நலமாக இருக்கிறீர்களா? தங்கள் அமெரிக்க பயணம் குறித்து இன்றுதான் வாசித்தேன். விரல் இன்னும் குணமாகாது கட்டுப்போட்டிருப்பது கவலையளித்தது. வலி குறைந்திருக்கிறதா?
இன்றுதானே ராலேயில் நூலகத்தில் சந்திப்பு எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். என் தம்பி பிரசன்னா அங்கிருக்கிறார், இன்றைய நிகழ்ச்சி குறித்து கூறியிருக்கிறேன்.
அடுத்த வெண்முரசு நூல் தொடங்கி விட்டீர்களா?
உண்மையில் போர் உச்சம் பெற்றது முதலே மனது ஓய்ந்து போயிருந்தது. கர்ணன், தொடர்ந்து துரியன் என இரு நாவல்களும் சேர்ந்து கனத்துப் போயிருந்தது மனது.
வெண்முரசு இவ்வாழ்வுக்கு அளித்திருப்பது ஒன்றிரண்டு அல்ல. முன்பு குருகுலத்தில் குரு அவரவர் தன்மைக்கேற்ப ஏதாவது ஒரு நூலை தியான நூலாக அறிவுறுத்துவது வழக்கம் எனக் குறளுறையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதுபோலத்தான் வெண்முரசை இவ்வாழ்வுக்கான எனது தியான நூல் என எண்ணிக்கொள்வேன்.
எத்தனை எத்தனையோ தருணங்கள், அருகிருந்து வாழ்வைப் பார்த்துக் கொண்டிருப்பது போல அன்றைய நாளை, அப்போதைய எனது மன அவசங்களைத் திறப்பதற்கான ஒளியோடு எப்படி எழுதப்படுகிறது என ஆரம்பத்தில் வியந்து போனதுண்டு. எதுவுமே தற்செயலல்ல என ஆழமாக நம்புவதால், இது எப்படியோ வாழ்வின் இத்தருணத்தில் இந்த நூல், குறிப்பாக அந்தந்தப் பகுதி வாசிக்கும் வரம் அமைந்திருக்கிறது என நிறைவு கொள்வேன். (சொல்வளர்காட்டின் மெய்மைதேடும் குருநிலைகளைக் குறித்தும், தரிசனங்கள் குறித்தும் படித்தபோதே முதல்முறையாக உங்களை ஆசிரியரென நேரில் காணும் பேறு பெற்றதும் இதில் அடக்கம்)
அதுவே பேரிலக்கியங்களின் காவியங்களின் ஒளி எனப் புரிந்து கொள்கிறேன். ஒவ்வொருவரைப் பற்றியும் பெயர் வரை அறிந்தது போன்ற கருணையும், அனைவரையும் அனைத்து நிலைகளையும் வேறுபாடற்ற கண்ணோட்டத்தோடு கூடிய இரக்கமற்ற விலக்கமுமாக வரும் கருநிற யாதவனே வெண்முரசு என்று படுகிறது. அடுத்த நூலுக்காகக் காத்திருக்கிறேன்.
மிக்க அன்புடன்,
சுபா