Monday, December 7, 2020

களிற்றியானை நிரை-07

 


ஓம் முருகன் துணை

 

அன்புள்ள ஜெ வணக்கம்

 

களிற்றியானை நிரை-07 வாசித்து அதன் அனுபவத்தை எழுத்தாக்க காத்திருக்கிறேன்.   வாசிப்பு அனுபவத்தை எழுத்தில் கொண்டுவர ஒரு மலர்தல் தருணம் தேவைப்படுகிறது. அடுத்து அடுத்து என்று உங்கள் சொற்களின்வழியாக உணர்வுகளின் வழியாக காட்சிகள் வழியாக மனம் இழுத்து செல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நதியலை அடித்துச்செல்லும் வேகத்தில் உள்ளத்தின் உணர்ச்சியில் லயிப்பதா? கரையில் தோன்றி பின்னோக்கி நகர்ந்து  கடந்துபோகும் மரங்களின் மலர்களின் வண்ணத்தில் காட்சிகளின் எண்ணத்தில் லயிப்பதா? மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை பெரிய இலக்கியத்தைப்படிக்கிறேன் என்ற ஆனந்தம். 

 

ஒரு சொல்லை கதையாக்கிவிடுகின்றீர்கள். ஒரு சொல்லை உணர்ச்சி கடலாக்கிவிடுகின்றீர்கள். ஒரு சொல்லை காட்சியாக்கிவிடுகின்றீர்கள். வெளிவரமுடியவில்லை, வெளியே வந்தால் அதன் அடர்த்தி அழுத்தி அமர்த்துகிறது.

 

கர்ணன் பெயர்கூட தெரியாத ஒரு நாகன் இருக்கிறான். கவசகுண்டலமின்றி பெரும்போர் களத்தில் நிற்கும் கர்ணன் கதை நடக்கும் இடத்தில் தியானத்தில் ஆழ்ந்து முகமலர்வில் ஒருவன் இருக்கின்றான். எத்தனை பெரிய உண்மையும், தூரங்களை கடந்த எல்லையும்.  இந்த இருபெரும் எல்லைகளை கண்டும் தனக்கென்று ஒரு இடத்தில் வழிபோக்கன்கள் இருக்கிறார்கள். வந்துகொண்டும் போய்கொண்டும் இருக்கிறார்கள். 

 

வழிபோக்கன்களுக்கானதுதான் கதையும் காவியமும், அதற்குள் அவர்கள் இருக்கிறார்கள். அதற்குள் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களை கடந்து கதையும் காவியமும்இருக்கிறது. அவர்களும் அதை கடந்தும் தொடர்ந்தும்  வாழ்கிறார்கள்.   வழிபோக்கன்கள்தான் இந்த பூமிக்கு வந்துவந்துபோகும் வாழ்வியலியலாளர்கள்.   எத்தனை அற்புதமான வாழ்க்கையின் யாதார்த்த உண்மை.  யதார்த்தமான உண்மை என்றாலும் எத்தனை உயரமான தாழ்வான மானிட எண்ணங்கள்  தனக்குள் முட்டிக்கொள்ளும் இடத்தை காவியம் மையத்தில் நின்று தொட்டுக் காட்டுகின்றது.  இந்த எண்ண தூரங்களை கடக்காமல் வாழ்க்கையை புரிந்துக்கொண்டுவிடமுடியாது. அந்த அந்த எண்ணங்களுக்கு தகுந்தபடி வாழ்க்கை அங்கே அங்கே நின்றுவிடுகிறது. எண்ணங்களை எட்டிப்பிடித்தவன் வாழ்க்கையை பிடித்தவன்தான். 

 

 

ஆறாம்வகுப்பு படிக்கும்போதுதான் முதன் முதலில் தீமிதி விழாவை அருகில் நின்றுப்பார்த்தேன். 


கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ள  சின்னவளையம் என்ற ஊரில் அருள்பாளிக்கும் அன்னை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா.  முப்பதுநாள் பாரதம் படித்து தீமிதி  திருவிழா வைப்பார்கள். கூட்டத்தோடு கூட்டம் முட்டிமோதி பூக்குழி அருகில் சென்று நின்றேன்.

 

தொலைவில் இருக்கும்போது மலர்செண்டுபோல் வா வா என்று அழைத்த பூந்தீ அருகில் சென்றதும் நில் நில்  என்று செந்தீயாக அடித்து வெளுத்து வேகவைத்தது. உள்ளுக்குள் சுடர்பரவி அங்குலம் அங்குலமாக உறிஞ்சியது. இரு இரு இன்னும் கொஞ்சம் இரு என்று உள்ளேறி முத்தமிட்டது. 


எப்படி இந்த அனல் கங்கு தீயில் நடக்கிறார்கள்?  


அன்னையின் அருள்தான் என்று குண்டத்திற்கு முன்னால் நிற்கும் அன்னை திரௌபதியைப்பார்த்தேன். பூவாடை பொன்மேனி, தூரத்தை அருகழைக்கும் பார்வை. மின்னும் கன்னத்தில் செந்தழல்மேவி முகம் உருகி வழிந்துவிடுமோ என்று ஏங்கவைக்கும் குழைவு.  செந்தீ சுடர் மின்ன மின்ன ஏறி அன்னை கன்னத்தை எச்சில் படுத்துகிறது. தீ முத்தமிடும்போதும் கன்னம் ஈரம்படுமோ?   அந்த எரிதழளுக்குள் அன்னை மந்தகாசம் புரிகிறாள். 


வீட்டிற்கு வந்து ஆயாவிடம் அன்னை திரௌபதி முகத்தில் தீ எரியும் வலியும், வலிமறந்த புன்னகையும் இருக்கிறது என்றேன். 

 

ஆயா “ஆத்தா, தீயை தன் மடியிலதானே ஏந்துறா, அதான் அவள் பிள்ளைகளுக்கு சுடுவதில்லை, எல்லா சூட்டையும் அவளே வாங்கிக்கொள்கிறாள். அதான் அந்த வலியும் சிரிப்பும்” என்று சிரித்தது. 

 

அன்னை மடியில் தீமிதிக்கும் கால்கூச்சம் எனக்கு.

 

திரௌபதி அம்மன்கோயிலில் முப்பது நாள் பாரதம் படிக்கும்போது, தனது தள்ளாத வயதிலும் நான்கு மயில்  தூரம் நடந்துபோய் ஆயாள் பாரதம் கேட்டது  உண்டு. அந்த ஆயாள் பெற்ற பிள்ளையை, எனது தந்தையை, எனது தாயுடன் எத்தனையோ ஊர்களில் இறைவனும் இறைவியும் குடுத்தனம் நடத்த வைத்தார்கள்.

 

காட்டுமன்னார்கோவில் வீரநாராயணபெருமாள் கோயில் தெப்பக்குளக்கரையில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பாரதம் படிப்பதை அப்ப அருகில் உள்ள வீட்டில் வாழ்ந்து கேட்டார்கள். தன்னை நாடிநாடி வந்து பாரதம் கேட்ட தாயின் பிள்ளைக்கு முதுமையில் தாயே நாடிவந்து பாரதம் சொன்னதுபோல் இருந்தது.

 

முப்பது நாள் மட்டுமல்ல முன்னூறுநாள் பாரதம் படித்தாலும் கேட்காத மக்களும் உண்டு.  

 

//ஆனால் ஒருமுறைகூட இக்கதைகளை செவிகொள்ளாதவர்கள் இந்நிலத்தில் பல கோடி. அவர்களின் மொழிகளில் இக்கதைகள் இன்னும் எத்தனை யுகங்களுக்குப் பின் சென்று சேரும் என்று தெரியவில்லை. இன்று அவர்களுக்கும் நமக்கும் இடையே இருப்பவை சில சொற்கள். சில ஆணைகள், சில உசாவல்கள், சில மறுமொழிகள். நாணயங்கள்போல அவை புழங்குகின்றன//   

 

கிருபானந்தவாரியார் சுவாமிகள் ஒரு கதை சொல்வார்.  வயல் வேலை செய்யும்  பாட்டி தினமும் ராமாயணம் கேட்க போகும்  அதைப்பார்த்த பண்ணையார் மகன் “ பாட்டி, நேற்று என்ன ராமாயணம் கேட்டாய்” 

 

பாட்டிக்கு என்னவென்று சொல்லத்தெரியாது. மறுநாளும் பாட்டி ராமாயணம் பார்க்கபோனது. அதே ஆள்  “பாட்டி, நேற்று என்ன ராமாயணம் கேட்டாய்” 

 

பாட்டிக்கு சொல்லத்தெரியவில்லை. இளைஞன் “உனக்குதான் ஒன்றும் தெரியலையே, நீ எல்லாம் எதுக்கு தூக்கத்தை தொலைத்து ராமாயணம் கேட்க போகிறாய்” என்று சிரிக்கிறான். 

 

பாட்டி அருகில் கிடந்த சாணியள்ளும் தட்டுக்கூடையை காட்டி அதில் தண்ணீர் மொண்டு வரசொல்லியது. அதில் எப்படி தண்ணீா அள்ளுவது என்று இளைஞனுக்கு கோபம். பாட்டி கோபப்படாமல் சிரிக்காமல்  “முடிந்த அளவு  தண்ணீர் கொண்டுவா, முயற்சி செய்” என்றது. 

 

இளைஞன் தண்ணீரை அள்ளி அள்ளிப்பார்த்தான். தண்ணீர் சொட்டுக்கூடநிற்க வில்லை. வெறுத்துபோன இளைஞன் தட்டுக்கூடையை தூக்கி எறிந்தான். 

 

பாட்டி இளைஞனிடம் தட்டுக்கூடையை சுட்டிக்காட்டி, “அதுல தண்ணீ மொல்ல முடியாது, ஆனா  அதுல உள்ள அழுக்கு எல்லாம் போயிட்டுது பாத்தியா“ என்றது. 

 

ஏன் இ்நத தொல்கதைகளை கேட்கவேண்டும் என்றால்? அது நம்மை கழுவி விடுகிறது. அந்த கழுவுதல் தூய்மை மட்டும் செய்யவில்லை, களைப்பையும் போக்கிவிடுகிறது. அந்த கழுவுதல் வேண்டாத மக்களை அந்த தொல்கதை நதி, சொல்நதி கண்டுக்கொள்ளாமலே போய்கொண்டே இருக்கிறது. 

 

மூத்த அண்ணனுக்கும் கடைசி தம்பிக்கும் சொத்து தகறாறு, ஐந்துசெண்ட் அண்ணனுக்கு அதிகமாக கொடுத்ததால் வந்த தகறாறு. விலக்கபோன இரண்டாவது தம்பி இருவருக்கும் எதிரியாகி, நமக்கு எதற்கு வம்பென்று போனபின்பு. குடும்பசண்டையாகி, உறவுசண்டையாகி, ஊர்  பஞ்சாயத்தானது.  இதில் எதிலுமே கலந்துக்கொள்ளாமல், இங்கிருந்தும் எங்கோ இருப்பதுபோல்  இருந்த கல்யாணம் செய்யாத முதல்தம்பி சிரிக்காமல் சொன்னான், ஆனால் ஊருக்கும் உறவுக்கும் சிரித்துக்கொண்டு சொன்னதுபோல்தான் இருந்திருக்கும் “அந்த ஐந்து செண்டை என்னிடம் கொடுங்கள் நான் விற்று தேவஊழியம் செய்யபோறேன்” என்றான்.

 

பழுத்த இரும்பில் நீர் விழுந்தால் சுர்ர்ர்ர்..ங்கும். ஆனால் பழுத்த இரும்பில் தீயே விழுந்தால்? ஊர் சண்டை ஒரு பழுத்த இரும்பு, அதில் கண்ணீர்விழுந்தால் ஊர் சுர்ர்ர்..என்று பொங்கி பூரிக்கும்.  அங்கு தீ விழுந்தது. ஊர் மட்டும் இல்லை அண்ணன் தம்பிக்கூட அந்த ஐந்துசெண்டைப்பற்றி அப்புறம் பேசவில்லை .

 

//கர்ணன் களத்தில் கவசங்களும் குண்டலங்களுமின்றி நின்றிருக்கும் கொடுந்துயரக் காட்சியை சூதன் சொல்லிக்கொண்டிருந்தபோது மிக அப்பால் மரத்தடியில் இலைப்பரப்பில் அமர்ந்து ஊழ்கத்திலிருந்தான். அரைக்கணம் திரும்பி அவன் விழிகளை பார்த்தேன். அதிலிருந்த மலர்வு என்னை திகைக்கச் செய்தது. அது தன்னுள் தான் நிறைந்தவனின் உளமறியும் உவகையின் வெளிப்பாடு.//


குலதெய்வம் பெயர் அறியாத குடும்பஸ்தன்போல, குடும்பத்தை விட்டு குலதெய்வம்கோயிலிலேயே சன்னியாசியாக இருப்பர்கள்போல கர்ணன் பெயர்  அறியாத நாகனும் இங்குதான் இருக்கிறார்கள். போர்களத்தில் ஊழகத்தில் உட்காரும் முனிவர்களும் இங்குதான் இருக்கிறார்கள். 

 

களிற்றியானை நிரை-07 அறியாதவரா? அறிந்தவரா? என்கிறது.

 

அன்பும் நன்றியும்

ராமராஜன் மாணிக்கவேல்.