Monday, December 7, 2020

ஒரு கணம்

 


அன்புள்ள ஜெ 

வணக்கம் 

அப்பா உடன் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துக்கொண்டு சிதம்பரம் வந்தேன்.  அப்பா என்னை இறக்கிவிட்ட இடம் கீழரதவீதியும், தெற்கு ரதவீதியும் சந்திக்கும் இடம். அப்பா “இதுதான் சிதம்பரம் நடராஜர் தேருலா வரும் ரதவீதி”  என்றார்கள். தெற்கு வீதியில் நின்று மேற்கேப்பார்க்கிறேன். இதுதான் சிதம்பரமா? காலுக்கு கீழே புழுதிமண், தலைக்குமேலே வெளுத்தவானம். சில பாத்திரக்கடைகள், வீடுகள். நடந்தும், வாகனத்திலும் சிலமனிதர்கள், வீதிகள் சந்திக்கும் மூலையில் ஒரு அரசமரம். தூரத்தில் நடராஜர் கோவில் தெற்கு கோபுரம்.  

இவ்வளவுதான் சிதம்பரமா? அரசமரத்திற்குகீழே ஒரு கல்மண்டபம். காவல் மண்டபமாக இருக்கலாம். காவல் அற்றுக்கிடந்தது. முத்துக்குடை முத்துசிவிகை தங்கத்தாளம் அடியார் குழாத்துடன் சின்னஞ்சிறுபாலகன் திருஞானசம்பந்தர் சின்னஞ்சிறுபாதம் சிவக்க நடந்தசிதம்பரம் இதுதானா? ஐயன்  நடராஜபெருமான்  வாமபாகத்தாளோடும் வளரிரு குழந்தையோடும் சண்டிகேசுவரர் சேவையோடும் வலம் வருவதற்கு  திருநாவுக்கரசபெருமான் உருண்டு தன்மேனியையே பாயாக விரித்தவீதி இதுதானே சிதம்பரத்திற்கு போகனும் சிதம்பரத்திற்கு போகனும் என்று சிதம்பரம்போவதையே தன்வாழ்நாளின் குறிக்கோளாக கொண்டு பக்தி என்னும் தகுதியால் தன்னையே ஓமகுண்டமாக்கிய நந்தனார் நடந்தவீதி இதுதானா? 

பாண்டிய மன்னனின் பெரும் அமைச்சனாக இருந்ததுபோதும்    பரமனை பாடுவதே போதும் என்று மாணிக்கவாசகர் மணிவாசகம்பாடி நடந்தவீதி இதுதானா? ஈசனுக்கு வானுயர  கோயில்  கட்டி பூமாலை சூட்டி புகழ்ந்தது போதாது என்று திருமுறைமாலை சூட்ட ராஜராஜசோழன் நால்வரோடும் நாடந்துவந்த வீதி இதுதானா? பெரியபுராணம்  பாடியதற்காக சேக்கிழார் பெருமானை அனபாய சோழன் யானைமேல் உட்காரவைத்து கவறிவீசி உலாவர வைத்தது இந்த சிதம்பரவீதியில்தானா? ஆணா? பெண்ணா? நீயா? நானா? என்று அன்னை காளி மாநடம்புரியும் தில்லை இதுதானா? புலியும் பாம்பும்  தேடியும் நாடியும் ஆடியும் பாடியும் திருநடம் கண்ட சிதம்பரம் இதுதானா? 

வைகுண்டம் விட்டு வந்த கோவிந்தன் ஆடல்கண்டு ஆனந்தசயனம் கொள்ளும் சிதம்பரம் இதுதானா? கையில் மாட்டிய ரப்பர் பாண்டை இழுத்து இழுத்து அடிக்கும்போது கைநரம்பு தெறிக்குமே அதுபோல் உள்ளுக்குள் ஒரு தெறிப்பு. அது சிதம்பரம்  இது சிதம்பரம்,  அப்படிப்பட்டது சிதம்பரம்  இப்படிப்பட்டது சிதம்பரம் என்று கதை கதையாக  உள்ளுக்குள் மாட்டப்பட்ட ரப்பர் பாண்டுகள் இழுத்து இழுத்து உள்ளத்தில் அடிக்கிறது. சிலமணித்துளிகள் காலசக்கரத்தில் சுழன்று நின்றபோது. இதுதான் சிதம்பரம், இவ்வளவுதான் சிதம்பரம் என்று தெளிவு வந்தது. காலுக்குகீழே புழுதி, தலைக்குமேலே வானம். சில கடைகள் சில வீடுகள் சிலமரங்கள் சில மனிதர்கள். அவ்வளவுதான் சிதம்பரம். எனக்கு சிதம்பரம், சிலருக்கு கங்கைகொண்ட சோழபுரம். சிலருக்கு காஞ்சி, சிலருக்கு மாமதுரை, சிலருக்கு புகார். சிலருக்கு விஜயபுரி. சிலருக்கு காசி. ஆதனுக்கு அஸ்தினாபுரி. கதைகளாக வரும் ஊர், கற்பனையாக வளர்கிறது. 

அந்த கதைகளின் வழியாக நாம் அதற்குள் பல்லாயிரம் முறை சென்று கற்பனையாக வாழ்ந்துவிடுகிறோம்.  கதைவேறு, கற்பனை வேறு, கதை நம்மை உள்ளுக்கு இழுக்கிறது. கற்பனை நம்மை உலகவெளியில் பறக்கவைக்கிறது.  இவை இரண்டிற்கும் அப்பாலோ அல்லது இப்பாலோ நிற்கும் நிஜம்வேறு. அதுதான் யதார்த்தம். நம் ஐம்புலன்களுக்கு உரியது. அதை அறிந்து அனுபமாக்கும்போது முழு தயிர்கலையத்தையும் கடைந்து துளி வெண்ணைய் எடுப்பதுபோல நிறைவை அளிக்கவில்லை. அந்த நிறைவின்மை ஏமாற்றத்தை தருகின்றது. அந்த நிறைவின்மையை தாங்கிக்கொள்ளமுடியுமா? என்ற கேள்விக்கு விடைதேடித்தான்  ஆதன் அஸ்தினாபுரி வந்தும் அதன் உள்ளே செல்லாமல் தவிக்கிறான்.  ஒரு சிறு மனப்போராட்டம்தான். அதைத்தாங்கிக்கொள்ள மனிதன் எத்தனை ஊசலாட்டம் ஆடவேண்டி உள்ளது என்பதை களிற்றியானை நிரை-08 அழகாக விளக்குகின்றது. 

ஆதன் போன்று, அழிசிப்போன்றவர்களுக்கு எந்த கதையும் கற்பனையும் வாழ்க்கையில் இல்லை. அதனால் குறிக்கோளும் தேடலும் இல்லை. குறிக்கோளும் தேடலும் வருவதால் ஏற்படும் அறிவுமுனைப்பு இல்லை.  அவர்கள் அந்த அந்த காலத்தில் அந்த அந்த சந்தர்ப்பங்களுக்கு தகுந்தபடி கிடைப்பதை கொண்டு வாழ்ந்துவிடுவார்கள்.  அவர்கள் சிறுவாழ்க்கைக்குள்  கிடைக்கும் சுகத்தையே பெரும் சுகமாக ஏற்றுகொள்ள தெளிவாக இருக்கிறார்கள். ஆதன்போன்றவர்கள்தான் சிக்கித்தவிக்கிறார்கள். எதிர்காலம் என்ன? என்ற பெரும்கேள்வி அவர்களை சுமையாக கூனவைக்கிறது. 

அனல்நதியாக எதிர்நின்று அக்கினி பிரவேசம் செய்ய சொல்கிறது. அதற்காக அவர்கள் அழிசி போன்று சிறுவாழ்க்கைக்குள் சிக்கிவிட மாட்டார்கள். அக்கினி பிரவேசம் செய்தே தன்னை நிறுவிப்பார்கள். கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது அழிசிகளுக்காக அல்ல ஆதன்போன்றவர்களுக்காகத்தான் வள்ளுவர் இந்த குறளை சொல்கிறார். “நான் எட்டாவது பாஸ்ண்ணே, நீங்கள் எஸ் எஸ் எல் சி பெயிலுண்ணே” என்று காமடிச்செய்யும் உலகம் இது. அஸ்தினபுரிவரை வந்துநகர் நுழையாமல் தவிக்கும் ஆதன் மனநிலையை அந்த காமெடியன்களுக்கு முன்நிற்கும் நிலை. களிற்றியானை நிரை-08 ஆதன் மனநிலையை அற்புதமாக படம்பிடித்து காட்டுகிறது. 

ஒவ்வொரு தேடலுக்கு முன்னும் நாமும் அப்படிதான் நிற்கிறோம். கானமுயல் எய்தஅம்பு ஏந்துவதா? யானைக்கு குறிவைக்கும் வேல் ஏந்துவதா? என்று நிற்கிறோம். முயல் எய்தால் வயிற்றுப்பசி போகும். யானையை வென்றால்தான் அரசனாக முடியும். அஸ்தினபுரி நகரை விளக்கும்போதே அசுரநகர்களைவிளக்கும் வன்மையில் கதை அதன் எதிர் துருவத்தை நெருங்கி  நுணுங்கி காட்சிப்படுத்துகின்றது. மூதாதையர்கள் தேவைக்குமேல் எதையும் உருவாக்கிக்கொள்ளவில்லை. அசுரர்கள் தங்கள் ஆணவத்திற்கு உரியதை உருவாக்கிக்கொண்டார்கள் என்பதை கதை தெளிவுப்படுத்தும் இடத்தில் மனம் அசைவற்று நின்று எழுகிறது. வாழ்க்கை என்பதே எண்ணங்களின் பருவடிவம். 

அதில் எதைகலக்குகின்றோம் என்பதில் அதன் வண்ணமும் சுவையும் எழுகின்றது. எண்ணங்களே வாழ்க்கையாக மாறுகிறது என்பதை உணர்ந்து அதில் அன்பு அருள் காதல் கருணை ஒழுக்கம் பண்பாடு பக்தி ஞானம் கலக்கும்போது உலகை அது தெய்வீகசோலையாக செய்கிறது. ஆனந்தஜோதி எழுந்து புவியை விடியவைக்கிறது. நல்லுயிர் தோன்றி புவியை கோகுலமாக்குகிறது.  புவியின் ஆயுள் ரேகையை நீளவைக்கிறது.  அதற்குமாறாக எண்ணங்களாக மாறும் வாழ்க்கையில் ஆணவம் கலக்கும்போது அந்த ஆணவக்கோட்டைகள் பூமியில் இருந்து தனது வேர்களை பிய்த்துக்கொண்டு   வானுக்கு எழுந்து வானை அடையமுடியாமல் விழுந்து நொறுங்கி பூமியில் இருந்த சுவடே   தெரியாமல் அழி்ந்துவிடுகிறது. அஸ்தினபுரி அரக்கர் நகர் அல்ல, மானிடநகர்  அது உணவுக்கலம்போல ஒழிந்து விண்ணோக்கி வாய் திறந்து இருக்கிறது. 

அற்புதம். ஆனந்தம். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தெருவும் ஒரு உருப்பாக இருக்கிறது அதில் சில தெருக்கள் முகமாக இருக்கிறது அதனால் அது அதன் அடையாளமாக ஆகிறது.  சில தெருக்கள் இதயமாக இருக்கிறது அதனால் அதன் ஆயுள் வளர்கிறது. பாண்டிச்சேரி நேருவீதியில் நின்றுக்கொண்டு இருந்தபோது பண்டிகை ஆடை எடுக்க அலைந்துக்கொண்டு இருந்த மக்களைப்பார்த்த பரவசத்தில் அருகில் இருந்த சித்தப்பாவிடம் “எல்லோரும் ஏதோ நேரத்தில் நிர்வாணமாக இருப்பவர்கள்தான்” என்றேன்.  சித்தப்பா ஒரு கணம் மௌனமாக என்னைப்பார்த்துவிட்டு வெடித்து சிரித்தார்கள். அது ரகசியம் அல்ல. ரகசியம்போல இருக்கும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சித்தப்பா நண்பன்போல உள்ளம் ஒன்றி என்னை வைத்திருந்தார்கள் என்பதால்தான் அது வெளிப்பட்டது. 

களிற்றியானை நிரை-08 தன்னில் ஆழ்ந்து கதை மாந்தர்களை தன்னில் லயிக்கவிட்டதால் உண்மையை நேர்த்தியாக வெளியிடுகிறது. //ஆரியவர்த்தத்தின் குளம் நோக்கி ஓடைகள் எனப் பாயும் விந்து” என்றான் ஆதன். அக்கோணத்தில் முதியவர் எண்ணியிருக்கவில்லை. திகைப்புடன் ஆதனை பார்த்த பின் வாய்விட்டு நகைத்து “நன்று! நீங்கள் உங்கள் மைந்தர் பிறக்கும் நிலம் நோக்கி செல்கிறீர்கள்” என்ற பின் சூழ நோக்கி “எத்தனை ஆயிரம் பல்லாயிரம் பிறவா உயிர்கள். அவைதான் இவ்வுடல்களை ஊர்தியாகக் கொண்டு அங்கே சென்றுகொண்டிருக்கின்றன. தங்கள் இலக்கை நாடி பொறுமையிழந்து கொண்டிருக்கின்றன. பிரம்மத்தின் ஆணை” என்றார்.//-களிற்றியானை நிரை-08 மனம் ஒரு கணம்  மௌனத்தில் விளையாடும் மனசாட்சியானது.

 

அன்பும் நன்றியும்

ராமராஜன் மாணிக்கவேல்