Friday, August 22, 2014

ராதை

அன்புள்ள ஜெமோ,

என் 'கர்ணனின் கண்ணீர்' கடிதத்துக்கு தங்களின் பதில் கண்ட போது குந்தியின் மகிழ்ச்சியை அடைந்தேன். என்னையறியாமலேயே வெண்முரசின் பல வரிகள் என்னில் தங்கிவிட்டன. உண்மையில் உங்கள் வாசகர்களுக்கென ஓர் படிம வெளியை உருவாக்கியளித்திருக்கிறீர்கள். தற்போதெல்லாம் உரையாடல்களில் என்னையறியாமலேயே பல புது வார்த்தைகள்  வருகின்றன.

மதுரா சென்றதன் பலன் நீலத்தில் நன்றாகத் தெரிகிறது. கண்ணனின் கதையை எங்கிருந்து துவங்கப் போகிறீர்கள் என்று ஒரு குறுகுறுப்புடன் தான் இருந்தேன். ஏற்கனவே மழைப்பாடலில் அதற்கான எல்லா மூகாந்திரங்களையும் கொடுத்திருந்தீர்கள். எனவே மிக எளிதாக விட்ட இடத்திலிருந்து தான் துவங்குவீர்கள் என நினைத்தேன். ஆனால் ராதையில் துவங்குவீர்கள் என கனவிலும் எண்ணவில்லை. படிக்க ஆரம்பித்த பின்பு நீங்கள் ஆரம்பித்த இடம் தான் சரியானது.கண்ணனை ராதையைப் போல் உள்ளும் புறமும் அறிந்தவர் யார்?

மேலும் வெண்முரசு எங்கிலும் பெண்கள் ஆடும் ஆட்டத்தின் பகடையாகத் தானே ஆண்கள் வருகிறார்கள். கண்ணன் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா என்ன? ராதையில் தென்றலின் மூலம் தெய்வங்கள் நிகழ்த்தும் மாயம் கவித்துவத்தின் உச்சம். அடைவதை விட அளிப்பதில் தான் நிறைவு என்பதை பெண்களால் மட்டுமே முழுமையாக உணர முடியும். அவ்வாறு ராதை கண்ணனுக்கு தோழியாய், காதலியாய், காமுகியாய் எதை அளித்தாள், எவ்வாறு அமரத்துவம் பெற்றாள் என்பதை பிறந்தநாளன்று நான் தரப் போகும் விளையாட்டுப் பொருளை ஆவலோடு எதிர்நோக்கும் என் மகனைப் போல காத்திருக்கிறேன். மேலும் உங்கள் எழுத்தில் காதலைப் பருகிய தருணங்கள் மிகக் குறைவு. வெண்முரசில் வந்த தருணங்களும் ஒருவித பண்பட்ட அலலது வெகு உக்கிரமான தருணங்களே. வாலிபத்தின் துவக்க காலத்தில் கண்ணில் துவங்கி கருத்தில் நிறைந்து உடலில் கலக்கும் அந்த மாயத்தை அதன் முழு வீச்சோடு ராதையிடமும் கண்ணனிடமும் பார்ப்பேன் என்று நினைக்கிறேன்.

ஆமாம்.... ராதை என்ன கண்ணனை விட 9 வயது மூத்தவளா என்ன? உண்மையில் எனக்கு ராதையைப் பற்றி, அவளுக்கும் கண்ணனுக்குமான உறவைப் பற்றி எதுவுமே தெரியாது. நம் தமிழ் பொது வெளியில் ராதாவைப் பற்றி அவள் கண்ணனின் காதலி என்பதற்கு மேலே வேறொன்றையும் நான் படித்ததில்லை. என் வட நாட்டு நண்பர்கள் ராதாவை பக்தியோடு பேசும் போதெல்லாம் ஒருவியப்பு எப்போதுமே எனக்கு வரும். பல சமயம் அவர்கள் 'ராதேகிருஷ்ணா' என்று தான் சொல்வார்கள். நான் பழகிய என் தமிழ் நண்பர்களும் சரி, என் ஊர்ப் பெரியவர்களும் சரி ராதையைப் பற்றி ஏதும் பேசியதில்லை. ராதை ஏன் இங்கு மறக்கப்பட்டாள்? அல்லது இது எனது அறியாமையின் வெளிப்பாடா?  ராதா கிருஷ்ண லீலைகளுக்கும் அதன் நேரடியான உள்ளடக்கத்திற்கும் நம் தமிழ் சமூகத்தின் ஒழுக்க மதிப்பீடுகளுக்கும் இதற்கும் தொடர்பு உணடா?

- அருணாச்சலம், ஐந்தோவன், நெதர்லாந்து


அன்புள்ள அருணாச்சலம்

ராதை மகாபாரதத்திலோ பாகவதத்திலோ இல்லாத ஒரு கதாபாத்திரம். யாதவர்குடிகளின் கதைகளில் இருந்திருக்கலாம். கிபி ஏழாம் நூற்றாண்டுக்குப்பின்னர்தான் அக்கதாபாத்திரம் உதிரி பக்திப்பாடல்களில் தென்படத் தொடங்குகிறது. அதை பக்தி இயக்கத்துக் கவிஞர்கள் வளர்த்தெடுத்தனர். பக்தி இயக்கம் சொல்லும் முழுமையான சரணாகதி, ஆன்மாவின் அர்ப்பணம் ஆகியவற்றைச் சொல்லும் கதாபாத்திரமாக்கினர். குறிப்பாக புஷ்டிமார்க்க வைணவம் ராதாவின் கிருஷ்ண பக்தியையே முதன்மைப்படிமமாகக் கொண்டது. அதன்பின்னரே ராதை வட இந்தியாவை இன்றும் ஆளும் ராதாராணியாக ஆனாள்

ராதை தென்னகத்தில் முன்னரே இருந்த நப்பின்னை என்ற கதாபாத்திரம் வடக்கே எடுத்தாளப்பட்டு உருவானதே என ஆய்வாளர் சிலர் சொல்வதுண்டு. ராஜாஜி அப்படி எழுதியிருக்கிறார். நப்பின்னையை ஆழ்வார்கள் பாடியுள்ளனர். ஆனால் அது ஒரு மையப்படிமமாக இங்கே வளரவில்லை. காரணம் இங்கே வளர்ந்த வைணவம் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். அது சற்று தத்துவார்த்தமானது. பிற்காலத்தில் சடங்குகளை நம்பி வளர்ந்தது

ராதை வங்கம் ஒரிசா பிகார் மூன்று மாநிலங்களிலும் இன்றும் ஒரு பெரும் பித்து ஆக நீடிக்கிறாள். குஜராத் ராஜஸ்தான் உத்தரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் வைணவர்களின் பெருங்கனவு

ஜெ