Thursday, August 14, 2014

கர்ணனின் கண்ணீர்

அன்புள்ள ஜெமோ,

இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். பல முறை தங்களின் பல படைப்புகளுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் 'செயலின்மையின் மது' தந்த மயக்கத்திலிருந்த படியால் எழுதவில்லை. ஆனால் இன்றைய(ஆகஸ்ட் 9) வண்ணக்கடலைப் படித்த பிறகு என் உணர்வுகளைக் கொட்டாவிட்டால் சாதாரண நிலைக்கு மீள்வது கடினம்.

வெண்முரசில் கண்களையும், மனதையும் நிறைக்கும் பல பகுதிகள் வந்திருந்தாலும், இன்றைய வண்ணக்கடலின் கர்ணனின் பட்டாபிஷேகம் பகுதி தங்களின் அறம் வரிசைக் கதைகள் தந்த அதே நெகிழ்ச்சியைத் தந்தன. குறிப்பாக கர்ணன் களம் புகுந்த வேளையிலிருந்து முடியும் வரை விழி நீர்த்திரையோடு தான் படித்தேன். மூன்று முறை படித்த போதும் மனம் அந்த நெகிழ்விலேயே இருந்தது. நன்றாக யோசித்துப் பார்த்ததில் அதிரதனைக் கண்டவுடன் நானும் தான் துணுக்குற்றிருந்திருக்கிறேன். அவன் பாதத்துளியினை கர்ணன் சூடிய போது என் சிறுமையையும், எல்லையினையும் உணர்ந்து கண்ணீர் மல்கியிருக்கிறேன்.

வெண்முரசில் உண்மையில் என்னை ஆச்சரியப்படுத்திய கதாபாத்திரங்கள், பெருந்தன்மையே தன் உருவமான திருதராஷ்டிர மாமன்னர், சகுனி, தநதையின் பெருந்தன்மையின் முழு எடையும் தனதாக்கிக் கொண்ட, அதனாலேயே தன்னைத் தானே அஞ்சி வெகு அரிதாகவே உரையாடுகிற துரியோதனன் மற்றும் பீமன்.
நானறிந்த திருதராஷ்டிரன் சுயநலம் மிக்கவன். தன் மூர்க்கத்தனமான மகனுக்காக எந்த அறமில்லாததையும்செய்ய அனுமதி அளிக்கும் ஒரு தந்தை. மகாபாரதத்தை கருப்பு, வௌளையாக படித்ததன் விளைவு.!!! சிறுமையின் நிழல் கூட என் மைந்தனைத் தீண்டாது என அம்பிகையின் வாயிலிருந்து கேட் போது என் உடலில் ஓடிய அதிரவை இப்போதும் நினைவு கூர்கிறேன்.

பின் என் இளவல் வேண்டினான் என்றால் அதைத் தடுக்கும் கீழ்மையுடையவன் அல்ல விசித்திரவீரியனின் மூத்த புதல்வன் என்று கூறி முழு மனதோடு பாண்டுவை வாழ்த்திய அந்த பெருந்தன்மையால் என் கண்கள் நிறைந்த அன்றிலிருந்து இன்று வரை அவரின் பெரும் ரசிகன் நான். அவரின் ஒவ்வொரு தழுவலையும் நானும் உணர்ந்திருக்கிறேன். அவரைப் பற்றி எழுதும் போதெல்லாம் உங்களின் எழுத்தில் ஒரு வாஞசையான தந்தையின் குரலையே உணர்கிறேன்.இன்றும் கர்ணனை வாழ்த்தும் போதும் அதே வாஞ்சை தான.

அவரை விட பேராச்சரியம் அவரது மகன்.கர்ணனைப் போன்ற அறவான், சினத்திலும் கருணை மாறாக் கண்கள் உடையவன் எவ்வாறு தன் நண்பனுக்காக எத்தகைய அறப் பிழையையும் செய்யத் துணிவான்? அவ்வாறு அவனைச் செய்யத் தூண்டும் அளவிற்கு, அவன் கண்ணை மறைக்கும் அளவிற்கு அந்த நட்பு தந்தது தான் என்ன? இக்கேள்விகளுக்கு இப்பகுதி தெளிவாகவே விடையிறுத்திருக்கிறது. குலமற்றவன் என அவ்வாறழைக்கப் படுவதன் அனைத்து துயரங்களையும் நன்கு அனுபவித்தவரின் வாயாலேயே கேட்ட,  பார்க்கப் படும் போதெல்லாம் சூதன் மன் எனத் தன் தம்பியாலே அவமானப்படுத்தப்பட்ட தனக்காக, ஓர் இளவரசன், அதுவும் பாரத வர்ஷத்திற்கே தலைமையேற்கத் தகுதியான அஸ்தினபுரியின் வருங்கால அரசன், எவரிடமும் எதற்காகவும தலைவணங்காத துரியோதனன் அத்தகைய ஓர் அவையில் அனைவரின் முன்பும் தன் முன்னால் மண்டியிட்டு, தன்னிடம் தான் மட்டுமின்றி தன் குலமே தோற்றதாகச் சொன்ன அந்நட்புக்கு, அப்பெருந்தன்மைக்கு வேறு எவ்வகையில் ஒருவன் பதிலிறுக்க இயலும்? மொத்த மகாபாரதத்தையும் மாற்றுப் பார்வை பார்க்க செய்துவிட்டீர்கள் இப்பகுதியால்.

இப்பகுதி வரும் வரையில் கர்ணனுக்கும் துரியோதனனுக்குமான சந்திப்பு நிகழவேயில்லை. கர்ணன் பீமனால் அவமானப்படத்தப்பட்டு குருகுலத்தை விட்டுப் போன பிறகு அவனைத் தேடும் இரு கௌரவர்கள் அவனைத் தங்கள் நண்பன் என ஏகலவ்யனிடம் சொல்கின்றனர். பீஷ்மர் அஞ்சுவது அரங்கேற்றத்தின் இறுதியில்்வரப்  போகும் அழையா விருந்தாளியை என துரியோதனன் சொல்லும் போது கர்ணனின் வருகையை அவன் எதிர்பார்த்திருந்திருக்கிறான் என்பது தெரிகிறது.

இந்த இரு சம்பவங்களிலும் இப்படி ஓர் ஆழமான நட்புக்கு எந்த வித மூகாந்திரங்களும் இல்லை. பின் எவ்வாறு அத்தகைய ஓர் நட்பு சாத்தியமானது? கர்ணனின் அர்ஜூனனை விஞ்சும் வில் வித்தை தான் காரணமா? அப்படியென்றால் துரியோதனனின் நட்பு என்ன சந்தர்ப்பவாதமானதா?
நிச்சயம் இல்லை. கர்ணனுக்கான துரியோதனனின் செய்கையைப் புரிந்து கொள்ள நாம் துரியோதனனைப் புரிந்து கொள்ள வேண்டும். கர்ணனைப் போலவே துரியனும் தன் இளமையிலிருந்தே தன்னவர்களன்றி மற்ற அனைவரிடத்திலும் ஓர் மறைமுக புறக்கணிப்பையே பெற்று வந்திருக்கிறான். ஒருவன் தன்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் தன் அழிவை விரும்புகிறார்கள் என்றுணர்கையில் அவன் கொள்ளும் தனிமை எப்பேற்பட்டதாயிருக்கும்? அவ்வளவிற்கு பிறகும் அவனிடம் பெருங்கருணையும், பேரன்பும் தழும்பிக்கொண்டிருந்தால் அவன் தன்னைத் தானே அஞ்சுவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது அவனுக்கு? தன்னைப் போன்றே பெருங்கருணையும், பேரன்பும், தீராத் தனிமையும் கொண்ட இன்னொருவனைக் கண்டால் அவனால் எவ்வாறு நட்பு பாராட்டாமல் இருக்க முடியும்? இன்று துரியனின் செய்கை நீர் வழிப் படூம் புணையன்றி வேறென்ன!!!

என்னால் இன்னும் சரியாக புரிந்து  கொள்ள முடியாதவன் பீமன் தான். அவனது கர்ணன் மீதான வெறுப்புக்கு என்ன தான் காரணம்? அவன் தங்கள் அனைவருக்கும் மூத்தவன் என்பது பீமனுக்கு நன்றாகவே தெரிகிறது. அப்படியென்றால் அது உண்மையில் குந்தியின் மீதான வெறுப்பா? உண்மையில் கர்ணனின் திறமையை மற்ற எல்லாரையும் விட நன்றாக அறிந்திருப்பதால் உடன் பிறந்தாரைத் தூக்கிச் சுமக்கும் பால்ஹிஹனின் மனம் தந்த பீதியா? அர்ஜுனனுக்கிணையாக கர்ணன் வரும் போதெல்லாம் பீமனின் சொற்கள் கூர்மை கொள்கின்றன. நான் இது பற்றி முன்பு விவாதங்களில் வந்தவற்றை படித்து விட்டேன். இருந்தும் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. முடிந்தால் விளக்கவும்.

இனி என்னைப் பற்றி. நான் தங்களை தங்களின் தளம் வாயிலாக 2008 லிருந்து தொடர்ந்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தான் தான். கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவன் தான். தற்போது பணிக்காக நெதர்லாந்து நாட்டில் வசித்து வருகிறேன். தங்களை நேரில் சந்திக்க விருப்பம் இருக்கிறது. உங்களுடன் ஒரு பயணமாவது செய்ய ஆசை. ஒரு விதத்தில் நானும் ஒரு ஏகலவ்யன் தான். உங்களைத் தான் என் இலக்கிய ஆசானாக வரித்திருக்கிறேன். இன்னும் உங்களின் படைப்புகளையே முழுவதும் படித்து முடிக்கவில்லை. நீங்கள் அறிமுகப் படத்திய மற்றவர்களையும் படிக்க வேண்டும். எழுத்தால் என்னை ஆற்றுப்படுத்திக் கொண்டிருப்பதற்கு நன்றி.

அருணாச்சலம்

அன்புள்ள அருணாச்சலம்,

இன்றுதான் திரும்பி வந்தேன். நீலம் எழுதுவதற்கு முன் மதுரா செல்லவேண்டுமென நினைத்தேன். சென்றது நிறைவூட்டும் அனுபவமாக இருந்தது.

பொருள்மயக்கம் என்பது இலக்கியத்தின் முக்கியமான உத்திகளில் ஒன்று. தெரிந்தே ஆசிரியன் விட்டுவிட்டுச் செல்லும் இடைவெளிகளால் ஆன பொருள்மயக்கம் ஒன்று. ஆசிரியனுக்கே தெரியாமல் விழுந்து விடும் இடைவெளிகள் உருவாக்கும் பொருள்மயக்கம் இன்னொன்று

எப்படியானாலும் பொருள் மயக்கம் என்பது வாசகனை சிந்திக்கச் செய்கிறது. அவ்விடைவெளியை அவன் தன் கனவால், கற்பனையால், சிந்தனையால் நிரப்பிக்கொள்கிறான். அதன் வழியாக படைப்பு மேலும் விரிவடைகிறது

ஆகவே பொருள்மயக்கங்களை எழுத்தாளன் விரிவாக்கி விளக்கிச் சொல்லலாகாது. பீமனின் நடத்தைக்கு உங்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் கண்டடையும் ஒரு காரணம் இருக்குமே, அதுவே சரியானது

ஜெ




அன்பான ஜெயமோகன்

தருமன், பீமன் அர்ஜுனன் மூவருமே தாமறியாமலே கர்ணனால் கவரப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதன்முறையாக கர்ணன் மூத்தவரே என்று அழைக்கப் பட்ட தருணத்தில் இருந்து பீமன் அவன் யார் என்பதை அறிந்து கொண்டிருக்கிறான்.

முன்பொரு சமயம் கர்ணனுடன் மோதவிருந்த அர்ஜுனனை "மூடா, மூடா, மூடா" என்று இழுத்துச் செல்கிறான்.

இன்று  "எப்படிப் போக முடியும்" என்று குந்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறான்

பீமன் கர்ணனை அறிந்து கொண்டே இருக்கும்போதே அவமதித்துக் கொண்டு  இருக்கிறான்.

மெலிந்த, சற்றே கூனல் கொண்ட தருமனுக்கு கர்ணனின் அழகு அகம் நிறைத்துப் பொங்குகிறது.

வைரக்குண்டலங்களும் பொற்கவசமும் கூடியிருந்தோர் அனைவருக்கும் தெரிவது சொல்லப் படுகிறது.

கர்ணன் தன் தந்தையை அறிமுகப் படுத்துகிற போது அர்ஜூனன் கூட அழுகிறான்.

“இன்று அந்த முதுசூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்தபோது அவன் இடத்தில் என்னை வைத்து நடித்துக்கொண்டிருந்த நான் ஆழத்தில் கூசிச்சுருங்கினேன்."  என்று தருமன் உரைக்கின்றபோது எக்காலத்திலும் கர்ணனின் அறத்தைத் தான் அடையப் போவதில்லை என்று உணர்ந்து கொள்கிறானா?

பாண்டவர்கள் அனைவருமே கர்ணனை அறிந்து அறிந்து உணர்ந்து அவன் கால் பற்றி அழ வேண்டும் என எண்ணுகிற தருணங்களில் எல்லாம் இப்படித்தான் விலகி நின்று துடிக்கப் போகிறார்களா?

கூர்மையான அத்தியாயம்.

அன்புடன்

ரவிச்சந்திரிகா


அன்புள்ள ரவிச்சந்திரிகா,

அயலாக்கப்பட்டவனின் கண்ணீர் எப்போதுமே பேரிலக்கியத்தில் ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. கர்ணன், துரோணர், ஏகலைவன் மூவரும் அதன் மூன்று முகங்கள். மூன்றுவகை ஆளுமைகள் மூன்று வகையில் எதிர்வினையாற்றுகின்றன

ஜெ



<a href="http://www.venmurasudiscussions.blogspot.in/">வெண்முரசு விவாதங்கள் </a>