Monday, August 25, 2014

வெண்முரசு – மிகுபுனைவு, காலம், இடம்

மகாபாரதத்தையும் வெண்முரசையும் ஒப்பிட்டு கேட்கப்படும் பொதுவான வினாக்களுக்கான விடைகள் இவை.


1. வியாச மகாபாரதத்தில் இருந்து வெண்முரசு வேறுபடும் இடங்கள் எவை? ஏன் அந்த வேறுபாடு?


வியாசமகாபாரதம் என்ற மாபெரும் படைப்பை உண்மையில் முழுக்க வாசித்தவர்களுக்கு தெரியும் அது ஒரு பிரம்மாண்டமான தொகைநூல். பல அடுக்குகள் கொண்டது அது. வியாசரால் இயற்றப்பட்ட ஜய என்னும் காவியத்துக்குமேல் அவரது மாணவர்களால் எழுதப்பட்ட நான்கு நூல்கள் இணைக்கப்பட்டன. அதன்பின் தொடர்ந்து துணைக்கதைகள் உபரிக்கதைகள் மூலம் குறைந்தது ஆயிரம் வருடம் அது விரிவாக்கம் செய்யப்பட்டது.

இக்காரணத்தால் இன்றுள்ள வியாசமகாபாரதம் சரளமான ஓட்டம் அற்றதாகவும், பலவகையான முரண்பாடுகள் கொண்டதாகவும், ஒவ்வொன்றிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுக்கள் கொண்டதாகவும் இருக்கும். இன்று கிடைக்கும் வியாசமகாபாரதத்தில் மிகப்பெரும்பாலான கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கும். ஒவ்வொரு கூற்றும் ஒன்றுடனொன்று முரண்பாடுகள் கொண்டிருக்கும்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் ஒருவிஷயத்தைச் சொல்கிறார். மகாபாரதத்தில் எங்கேனும் ஒரு கதை வேண்டுமென்றே திரிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ போயிருந்தால் சற்றுத் தேடினால் இன்னொரு இடத்தில் அதன் மூலவடிவை கண்டுபிடிக்கமுடியும் என. ஏனென்றால் அதன் அமைப்பு அத்தனை பெரியது.

இன்றைய மகாபாரதம் ஏட்டுச்சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்டபோது பலவகையான வட்டார மாறுபாடுகள் அதற்கு இருந்தன. பொதுவாக எட்டுவகையான மாறுபாடுகள் என்று சொல்லலாம். வட இந்தியாவில் விரஜ [பிரஜ்] மகாபாரத வடிவமும் காஷ்மீர வடிவமும் பிரபலம். தென்னகத்தின் சிறந்த ஏட்டுவடிவம் கேரளத்தில் கிடைத்தது. அது தட்சிணபாடம் எனப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் வேறுபாடுண்டு. மகாபாரதத்தில் ஒரு நூலில் இருந்து இன்னொன்றில் இல்லாத பகுதிகள் பிரக்‌ஷிப்தம் எனப்படுகின்றன.


இதைத்தவிர மகாபாரதத்தின் வட்டாரமொழி வடிவங்கள் உள்ளன. தமிழில் வில்லிபுத்தூரார் பாரதம் போல. அவை மகாபாரதத்தில் இருந்து வேறுபாடுகள் கொண்டுள்ளன. அதைப்போல மகாபாரதத்தின் நூற்றுக்கணக்கான நாட்டார் கலைவடிவங்கள் உள்ளன. நம் தெருக்கூத்து போல. அவையும் மகாபாரதத்தை விரிவாக்கம் செய்துள்ளன.


அக்னிபுராணம், விஷ்ணுபுராணம் போன்ற புராணங்களும் பாகவதம் முதலான பிற்கால நூல்களும் மகாபாரதக் கதைகளையும் கதாபாத்திரங்களையும் எடுத்து விரிவாக்கம் செய்துள்ளன. இவற்றில் உள்ள கதைகள் மூலக்கதைகளில் விரிவாக்கமாக மட்டுமல்லாமல் முரண்பட்டவையாகவும் பலசமயம் உள்ளன.


ஆகவே மகாபாரதத்தின் ஏதேனும் ஒரு சுருக்கப்பட்ட வடிவை வாசித்துவிட்டு மகாபாரதம் என்பது மாற்றமேதும் இல்லாததும், ஒற்றைப்படையான கதையோட்டம் கொண்டதுமான ஒரு நூல் என்று கற்பனைசெய்துகொள்ளலாகாது. நாம் பேசும் மகாபாரதம் என்பது பெரும்பாலும் செவிவழி அறிதல்களால் ஆனது. அது நம் கதைகாலட்சேப மரபால் சொல்லப்பட்டது. அதன் நோக்கம் பக்தி. பக்தியை முன்வைப்பதற்கு உகந்த ஒரு கதைவடிவத்தை நம் காலட்சேப மரபு பல்வேறு மகாபாரத வடிவங்களில் இருந்து எடுத்து தொகுத்துக்கொண்டிருக்கிறது. அதை முழுமையான மகாபாரதம் என நினைத்து விவாதிப்பதில் பொருளில்லை.


இன்று ஓர் ஒற்றைப்பிரதியாக மகாபாரதத்தை மாற்றும்போது நமக்குக் கிடைக்கும் வியாச மகாபாரதத்தில் உள்ள முரண்பாடுகளை தர்க்கபூர்வமாக களையவேண்டியிருக்கிறது. அதற்காக ஒன்று, மகாபாரதத்தில் உள்ள பல்வேறு கூற்றுக்களில் ஒன்றை எடுத்துக்கொள்கிறேன். அல்லது அதை யதார்த்த தளத்தில் வைத்து விளங்கிக்கொள்கிறேன். அல்லது சற்றே விரிவாக்கிக்கொள்கிறேன்.


உதாரணமாக காந்தாரி ஒரு சதைப்பிண்டத்தை பெற்றாள் என்றும் அதை வியாசர் வந்து நூறு துண்டுகளாக வெட்டி நூறு கலங்களில் போட்டு வளர்த்தமையால் நூறு கௌரவர் பிறந்தனர் என்றும் ஒரு மகாபாரத அத்தியாயம் சொல்லும்போது திருதராஷ்டிரர் பத்து காந்தார இளவரசியரை மணந்து நூறு பிள்ளைகளைப் பெற்றார் என்று இன்னொரு அத்தியாயம் சொல்கிறது. நான் இரண்டாம் கூற்றை எடுத்துக்கொண்டேன்.


குந்தி பாண்டவர்களை நியோகமுறைப்படி பெற்றாள் என்பதே யதார்த்த சித்திரம். அப்படி எடுத்துக்கொள்ள மகாபாரதம் அனைத்து ஆதாரங்களையும் அளிக்கிறது. மிகவிரிவான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


துரோணரின் கதை சிறிய உதிரிக்கதைகளாகவும் எளிமையாகவும்தான் மகாபாரதத்தில் உள்ளது. ஆனால் மாபெரும் போருக்கு காரணமாக அமைந்த அந்த வன்மத்தை விரிவாக்கவேண்டிய தேவை இன்றைய புனைவில் உள்ளது. ஆகவே மகாபாரதத்தின் பிற்பகுதியில் பல இடங்களிலாக வரும் குறிப்புகளை முன்னாலேயே கொண்டுவந்து விரிவாக்கம் செய்தியிருக்கிறேன்.


2. மகாபாரதக் கதாபாத்திரங்களின் வயதுகள் வெண்முரசில் ‘தவறாக’ உள்ளனவே!


இதை முன்னரே பலமுறை விளக்கியிருக்கிறேன். பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் தொடரை எழுதிய பேரறிஞரான ராகி மசூம் ராஸா அவர்களும் விளக்கியிருக்கிறார்கள். மகாபாரதத்தில் இடையிடையே கதைகள் சேர்க்கப்பட்டபடியே இருந்தன. ஒவ்வொன்றுக்கும் வருடங்கள் சேர்ந்தன. அவர்கள் சதசிருங்கம் விட்டு வரும்போதே பதினெட்டு தாண்டிவிட்டது. அதன்பின் 12 வருடம் குருகுல வாசம். அதன்பின் பல வருடங்கள் வனவாசம். விளைவாக மகாபாரத நிகழ்ச்சிகளை தொகுத்து நோக்கினால் மகாபாரதப்போர் நிகழ்கையில் அர்ஜுனனுக்கு எண்பதுக்கும் மேல் வயது வரும். பீஷ்மருக்கு இருநூறு தாண்டும்.


பாகவத மரபில் ‘அந்தக்காலத்திலே அவர்களுக்கெல்லாம் வயது நம்மைவிட இருமடங்கு’ என்று சொல்லி சமாளிப்பார்கள். ஆனால் வெண்முரசு அதன் மையக்கதைப்பெருக்கை முற்றிலும் யதார்த்தத்தில், வரலாற்றுவெளியில்தான் நிகழ்த்திச்செல்கிறது. அதற்கு இந்த மாதிரியான சில்லறை மிகைபுனைவுகள் பொருந்தாது. அதில் மிகைபுனைவு வருமென்றால் கவித்துவமாகவோ அல்லது தத்துவக்குறியீடாகவோ விரியும் தன்மைகொண்டதாக மட்டுமே இருக்கும்.

ஆகவே யதார்த்தமான கணிப்பின்படி வயது போடப்படுகிறது.


3. மகாபாரத இடங்கள் சரியாக அமைந்துள்ளனவா? பல இடங்கள் மகாபாரதத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறதே?


மகாபாரதத்தில் சொல்லப்பட்ட இடங்கள் அல்லது மகாபாரத காலம் முடிந்ததுமே வந்த பௌத்தநூல்களில் சொல்லப்பட்ட இடங்களே இந்நாவலில் சொல்லப்படுகின்றன. பெரும்பாலும் இதுசார்ந்த ஆய்வாளர்களின் நூல்களை அடியொற்றியே அவை வகுக்கப்பட்டுள்ளன.

4. புராணங்கள் இதில் சில இடங்களில் சூதர்கள் சொல்வதாக வருகின்றன. சில இடங்களில் நேரடியாக வருகின்றன. இது குழப்பத்தை உருவாக்குகிறது. உதாரணமாக கார்க்கோடகனை குந்தி சந்திப்பது. பீமனின் கைகள் பாம்புகளாக ஆவது போன்றவை.</p>


இது இலக்கியத்தின் இயங்குவிதிகளை அறிந்த வாசகர்கள், அல்லது அறியமுற்படும் வாசகர்களுக்கான நூல். புராணங்களை சூதர்கூற்றாகச் சொல்லும்போது அவற்றுக்கு ஒரு வரலாற்றுத்தன்மை அல்லது தத்துவத்தன்மை இருக்கும்.

நேரடியாக வரும்போது அவை ஒரு மனமயக்க நிலையில், கனவுநிலையில் இருக்கும் – குந்தி கார்க்கோடகனைக் காண்பதுபோல. அல்லது கவித்துவமான குறியீடாக இருக்கும் – பீமனின் கைகள் போல. அல்லது அவை ஒரேசமயம் மிகைகற்பனையாகவும் நடக்கச் சாத்தியமானவையாகவும் இருக்கும் – பீமன், துரியோதனன் பிறப்பு போல. அல்லது அஸ்தினபுரியில் குருதிமழை பெய்வதுபோல. அவற்றை கற்பனைகொண்ட வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

மரபான இருவகை வாசிப்புக்கு பொதுவாசகர் பழகிவிட்டிருக்கலாம். ஒன்று எல்லாவற்றையும் ஒரேமாதிரியான புராணமாகக் கண்டு நேரடியாக எடுத்துக்கொள்வது. இன்னொன்று நடைமுறைத் தளத்தில் மட்டுமே வைத்து நேரடியாக வாசிப்பது. இரண்டுமே நேரடியான புரிதல்கள். ஒரு புராணம் என்பது பெரும்பொருள் கொள்வதற்குரிய கூறுமுறை என்பதை நினைவில் கொள்வோம். அது அளிக்கும் கவித்துவ எழுச்சியை, தரிசனத்தை நோக்கிச் செல்லும் வழி அது.

பீமன் கங்கையின் ஆழத்திற்குச் சென்று விஷம் அருந்தி ஆற்றல்மிக்கவனாக மீள்வது வெறும் ‘கதை’ அல்ல. நாம் கொள்ளும் அனைத்து பெரும் வஞ்சங்களையும் நம் ஆழத்துக்குச் சென்று அங்குள்ள விஷத்தை அருந்தித்தான அடைகிறோம். அந்த வகையான உணர்தல்கொண்ட வாசிப்பே இந்நாவலால் கோரப்படுகிறது.

*

நான் இந்த விவாதங்களை பெரும்பாலும் தவிர்க்கவே விரும்புகிறேன். ஏனென்றால் இது வியாசமகாபாரதத்தின் மொழிபெயர்ப்போ தழுவலோ அல்ல. மறு ஆக்கம், நவீன நாவல். வியாசமகாபாரதம் பற்றிய விவாதங்கள் முடிவற்றவை. நான் இருபதாண்டுகளாக அவற்றில் இருக்கிறேன். சமானமாக வாசித்தவர்களிடமே அர்த்தபூர்வமாக விவாதிக்கமுடியும். மற்றவர்களின் எளிய ஐயங்களை தீர்த்துவைத்தால் முடிவில்லாமல் பேசவேண்டும். அதன்பின் நான் வெண்முரசு எழுதமுடியாது