இனிய ஜெயம்
வெண் முரசு அதன் அடுக்குகளுக்குள் வைத்திருக்கும் உச்சபட்ச அழகுகளில் ஒன்று இன்றைய அத்யாயம் . குந்தி கர்ணனை ஏன் கைவிட்டாள் ? இன்று கார்கோடகன் வழியே தனது நிலை இது என எதை கர்ணன் கண்டானோ அதைதான் அன்று குந்தி அந்த நதியில் கண்டாள். குந்தி செய்யக்கூடாதது எதுவோ அதை செய்தவள் அல்ல . கர்ணன் போன்ற ஒருவனுக்கு எது நேரக்கூடதோ ,அது நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறாள் குந்தி .
இன்றைய அத்யாயம் வாசித்து முடித்த பின் பெரிய பெருமூச்சுதான் எழுந்தது . குந்தி கர்ணன் உறவில் அனைத்தும் ஒரு வரிசையில் வந்து நின்று விட்டது . கதகளி காணொளிக் காட்சியில் கர்ண சபதம் இறுதிக்காட்சி கர்ணனிடம் குந்தி விடை பெரும் காட்சி தேடி எடுத்து கண்டேன் . இப்பொது அது வேறு ஆழம் கொண்டு விட்டது .
கர்ணன் மீண்டு விட்டான் . கர்ணனுக்கென ஒரு கீதை . இதை வாசிக்கும்போதே ஒரு பொறி தட்டியது ,ஆம் இந்த வெண் முரசு நாவலுக்குள் நீலன் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் நிகழ்த்தும் தருணமே தேவை இல்லை . ஏன் எனில் இத்தனை நெடிய பயணம் வழியே அர்ஜுனன் கடந்து வந்தது கீதையின் சொற்களைத்தான் .
இந்த நோக்கில் இந்த வெண் முரசு மகா பாரத மறுஆக்கம் அல்ல என்றே சொல்லி விடுவேன் . வெண் முரசு பகவத்கீதை என்னும் அழியா சொல் உயர்ந்து வந்த பின்புலத்தை ,அதன் களத்தை , நாடகீயமாக புனைந்து பார்க்கும் நாவல்
அதன் பேசுபொருள் சார்ந்து வியாசரின் பாரதம் அதற்குள் வந்து விட்டது : )
கடலூர் சீனு