Thursday, November 14, 2019

நீர்ச்சுடர் - அவல நகைச்சுவை         இந்தக் கதை பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்கும்  என்று  நினைக்கிறேன்.   ஒருவன் தன் வாழ்நாளை ஒரு நிமித்திகரிடம் கணிக்கும்போது நாளை அவன் இறக்கப்போவதாகத் தெரிவிப்பார்.  அவன் தன் ஊழை மாற்றி மரணத்தின் கையிலிருந்து தப்பிக்க எண்ணினான்.  தான் இதுவரை இருக்கும் இடத்திலேயே இல்லாமல் வேறு இடம் சென்றுவிட்டால் மரணத் தேவதை அவன் வீட்டில் வந்து ஏமாந்து போய்விடும் என  எண்ணி கடுமையாக முயற்சி செய்து, விரைவு வண்டியில் பிரயாணித்துவெகுதொலைவில் பலநூறு  மைல்கள்  தாண்டி   வேறு ஒரு ஊருக்கு இரவோடு இரவாக சென்று விட்டான்.  ஆனால், மறுநாள் அவனிருக்கும் இடதிற்கு வரும்  மரணதேவதை, "ஓ  வந்துவிட்டாயா? உன் உயிரை  இன்று இங்கு நான் கவர வேண்டும் என உள்ளது.  ஆனால் நீ வெகுதொலைவில் இருக்கிறாயே என்று  எண்ணினேன்"   என்று சொல்லி அவன் உயிரை கவர்ந்து சென்றது.
                
         நமக்கு ஒன்று கிடைக்கவேண்டும், நம் வாழ்வில் இந்த நிகழ்வு நடக்கவேன்டும் என விழைகிறோம். ஆனால் அதன் மூலம் நமக்கு நன்மைதான் வருமா என்பது  நமக்குத்  தெரியாது.  இருவர் மிகுந்த விழைவுடன் வங்கிப்பணியில் சேர்வதற்கான தேர்வை எழுதுகின்றனர்.  ஒருவருக்கு கிடைத்து அவர் பணியில் சேர்கிறார். மற்றொருவருக்கு கிடைக்காமல் வருத்தமடைகிறார்.  பின்னர்  அவர் மேலும் உயர்கல்வி படித்து பேராசிரியர் பணி சேர்ந்து  பணியில் நிறைவும்,  செல்வமும் புகழும் கொண்டவராக  இருக்கிறார்.   ஆனால் வங்கிப் பணியில் சேர்ந்தவர் தம் பணியில் நிறைவு இல்லாமல், சலிப்புடன் இருக்கிறார்.  விழைந்தவை நமக்கு நன்மை தரவேண்டுமென்பதில்லை.    நமக்கு என்ன வேண்டும் என்று நமக்கே தெரியாது என்பதுதான் உண்மை.  இப்படி இருக்கையில் நாம் அறிய முடியாத எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஒன்றை மாற்ற நினைப்பது  எந்த அளவுக்கு நன்மைதருவதாக இருக்கும்?

          சுபத்திரை தன் மகனை பிறவிச் சுழலில் இருந்து விடுவிக்க, அவன் ஊழை மாற்ற  எண்ணுகிறாள். ஆனால் அவளே ஊழின் கைப்பாவையென ஆகி தன் மகனின் மறுபிறப்பின் வாழ்வை மீண்டும் வஞ்சச் சுழலில் சிக்க வைத்துவிடுகிறாள்.   சுபத்திரை கண்ணனின் தங்கை, திறனும் மதி சூழ்கையும் நிறைந்தவள்.   ஆனால். தன் அண்ணன் கண்ணனின் பேச்சைக் கேட்காமல் அவள் இவ்வாறு ஒரு முடிவு எடுத்ததற்குக் காரணம் அவளின் தாய்மையுணர்வு அவள் கண்ணை மறைந்த்துவிட்டது என்றுதான் நாம் கருத வேண்டியிருக்கிறது.  பல கண்ணிகள் கொண்டு நெய்யப்பட்டிருக்கும் ஊழினை ஒருவர் முன்னும் பின்னும் காண விழைவது எவ்விதத்திலும் சரியல்ல என்பதையே இது காட்டுகிறது. அல்லது அவ்வாறு காண்பவர் அந்த ஊழை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவராக இருக்கவேண்டும்.   

         ஊழ்தான் அனைத்தையும் தீர்மாணிக்கிறது என்றால் மனிதன் செயலினால் என்ன பயன் என்ற கேள்வி எழுகிறது.  செயல்கள் ஊழை மாற்றுவதில்லை  ஆனால் நம் வினைப் பயனை மாற்றுகின்றன. நாம் இயற்றும்  வினைகளின்  வழி   நாம்  காலத்தில்  நெய்யப்படும் ஊழில்  எவ்விடத்தில் எவ்வாறு கையாளப்படுகிறோம் என்பது அமைகிறது என்று கருதுகிறேன்.  நெய்யப்படும் பட்டுப்புடவையில் பூச்சித்திரத்தின் அமைப்பும் நேர்த்தியும் அது எங்கு  எப்படி அமையவேண்டும் என்பதை தீர்மாணிக்கப்படுகிறதோ, அதைப்போன்றது அது. வெண்முரசில் நான் அறிந்ததற்கேற்ப  தொகுத்துச் சொல்வதானால்,   நாம் நம் செயல்களைச் செய்யும்போது ஊழ் என ஒன்று இருப்பதை மறந்து செயலாற்றவேண்டும். ஆனால் அதற்கான பலன்களை அடையும்போது, அவற்றை  ஊழின் வழி கிடைத்ததாக எண்ணி அவற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டு  நிறைவடையவேண்டும்.   அப்படியல்லாமல் ஊழை மறுதலித்து முட்டி மோதி அதை மாற்றுவதற்கான முயற்சியில் அவர்களே  ஊழின் கைப்பாவைகளென ஆகிவிடுவது  ஒரு அவல நகைச்சுவையாகும்.


தண்டபாணி துரைவேல்