Wednesday, November 13, 2019

நீர்ச்சுடர் - 49 காமம் என்ற தளிர்    ஒரு பூச்செடியை பிடுங்கி வேறு இடத்தில் நட்டால் கண்டிப்பாக அது பிழைத்துவிடும் என்று சொல்ல முடியாது. தினமும் அதற்கு நீ ஊற்றி கவனமாக பார்த்துக்கொள்வோம், ஆனால் அதன் இலைகள் தம் பசுமையை இழக்க ஆரம்பிக்கும். பின்னர்  இலைகள் ஒவ்வொன்றாக உதிரும்.  நாம் அச்செடி பிழைக்கும் என்ற நம்பிக்கையை இழக்கும் தருவாயில் அதன் கிளை ஒன்றில் மிகச்சிறிதாக ஒரு பச்சையான மொக்கு தோன்றி சிறு தளிரென  விரிவதைப் பார்த்தபிறகு நமக்கு முழு  நம்பிக்கை வந்துவிடும்.  இனி செடி பிழைத்துவிடும் என்பது உறுதியாகிவிடும்.  வனம் முழுக்க தீக்கிறையான பின் சில நாட்கள் கழித்து ஒரு புல் முளைத்தெழும்.  அந்த வனம் மீண்டும் வளந்தெழுவதை அந்தச் சிறு புல்லின் தளிர் நமக்கு உறுதிப்படுத்தும். 
    
     அஸ்தினாபுரம் பேரழிவைச் சந்தித்து இருக்கிறது.  ஆண்களில்   அதன் இளையோர்கள் எல்லோரையும் இழந்து முதியவர்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர்.   இறந்தவர்களைக் குறித்து  துயரம் அனைவரையும் கவ்விப்பிடித்திருக்கிறது.  வீட்டை புரப்பவர்கள் எல்லாம களம் பட்டுவிட்டதால்,  எதிர்காலம் மிக இருண்டு காணப்படுகிறது.  இனி இந்நாட்டிற்கு விடிவு  உண்டா எனத்  தெரியாத காரிருள் சூழ்ந்திருக்கிறது. மக்கள் துயரம் இறந்தவ்ர்களை எண்ணி பெருக்கிகொண்டு இருக்கிறது.   தன் பசுமைகளை இழந்து பட்டுப்போகும் நிலையில் இருக்குமொர் தாவரத்தைப்போல அஸ்தினாபுரம் இருக்கிறது.

   அத்தகைய தருணத்தில்  காமம் ஒரு சூதப் பெண்வழி ஒரு தளிரென துளிர்க்கிறது. அதை பூர்ணை உடன் கண்டுகொள்கிறாள்.  (வெண்முரசில் செவிலியரின் பங்கு மிகவும் பெரிது.  இப்பொது நாம் காணும் பூர்ணையின் பாத்திரம் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  செவிலியர் அரசகுடும்பத்தினருடனே தம் வாழ்நாளை கழிப்பவர்கள்.  அதனால் அரச குடும்பத்தினர் அடையும் அனுபவங்களை, உணர்வுகளை தாமும் அடையப்பெற்றவர்கள்.  அரசக் குடும்பத்தினர் அந்த உணர்வுகளுக்கு உள்ளிருக்கிறார்கள். ஆனால் செவிலியர்  அவற்றை  வெளியில் இருந்து அறிகிறார்கள்.  உணர்வுகளுக்குள் உள்ளிருப்பவரை வ்ட அதை வெளியில் இருந்து உணர்பவர்கள் தெளிவாக அவற்றை சிந்தித்து உணரமுடிகிறது. ஆகவே    பூர்ணை அடைந்திருக்கும் மன முதிர்ச்சி,  தெளிந்த அறிவு வியப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.  )

அவள் முகத்திலிருந்த பொலிவை, கைவிரல்கள் பதற்றத்துடன் ஒன்றையொன்று தொட்டு நிலையழிவதை பூர்ணை கண்டாள். ஒருகணம் சீற்றம் எழுந்தாலும் மறுகணம் புன்னகை வந்தது. அத்தனை துயரிலும் மானுடர் தங்கள் விழைவுகளை தொடர்கிறார்கள். இடுகாட்டில் பூக்கள் மலர்கின்றன என்ற சூதர் பாடல் நினைவு வந்தது. 

         ஆண்களின்  காமம் அள்ளித் தெளிப்பது, அசட்டுதனம் கொண்டது. ஒரு பெண்ணின் அழைப்பு, அது கூட தேவையில்லை அவள் இணங்கிய போக்கு, அதைவிடச் சிறிதாக அவளிடமிருந்து வரும் ஒரு பாவனை, ஏன் அவள் பெண் என்ற காரணம் மட்டும்கூட  ஒரு ஆணின் உள்ளத்தில் காமத்தை எழுப்புகிறது. ஆகவே ஆணின் காமம் அளிக்கும் பொருள் மிகச்சிறிது. ஆனால் பெண்ணின் காமம்,  பெற்று நிறைவது.  பெண்ணுள் காமம் எழ ஒரு ஆணின்  தோற்றமோ அழைப்போ  போதுமானதல்ல. அதற்கு தகுந்த ஆடவன், தகுந்த இயற்கைச் சூழல், சமூகச் சூழல், போன்ற   காரணிகள் பல  இருக்கின்றன.  ஆகவே ஒரு பெண்ணில் காமம் தோன்றுவது நுண்ணிய   பொருள்கொண்டதாக உள்ளது. ஆகவே அச்சூதப்பெண்ணில் காமம் மலர்வது,  மக்கள் துயர் விட்டு வெளிவந்துவிடுவார்கள் என்பதற்கான நம்பிக்கை,  அஸ்தினாபுரம் மீண்டும் மக்களால் நிறையும் என்பதற்கான  நிமித்தக் குறி,  நாட்டில் நலம் திகழ்ந்து மங்கலங்கள் வளரும் என்பதற்கான  முன்னறிவிப்பு என ஆகிறது. எந்தப் பேரழிவையும் தாண்டி  பெருந்துயரையும் கடந்து  இயற்கை தன்னை  காமத்தின் வழி உயிர்பித்துக்கொள்கிறது.
 
        காமமே உயிர்குலத்தை வாழவைக்கிறது.  உயிர்குலத்தின் மூச்சுக்காற்று காமம். காமம் நிகழாத களம் உயிர்கள் இல்லாத வெற்றுப்பாலை என ஆகிவிடுகிறது.  காமம் வடிவமைத்தவையே  விலங்குகளின் பிடறி, கொம்புகள்,  தாடி,  தோல் மினுமினுப்பு, தோல் ரோமங்களின் சித்திர வடிவங்கள்.  அதுவே  பறவைகளுக்கு விதவிதமான தோகைகள், சிறகுகளைத் தந்து, பல வண்ணக்கலவைகளை  பூசியிருக்கிறது, பல இனிய ஓசைகளை  குரல்களுக்கு தந்திருக்கிறது.  காமமே தாவரங்களில் மலர்களென மலர்கிறது.   மலர்களில் பலவண்ணங்களாக, அவற்றின் பல்வேறு மணங்களாக புன்னகைப்பது காமமே.

மலர்கள் புன்னகையின் தூய வடிவங்கள். ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் புன்னகைகளால் தேவர்கள் இம்மண்ணை பொலிவுறச் செய்கிறார்கள் என்ற சூதர் வரியை நினைவுகூர்ந்தாள்.
    
தண்ட்பாணி துரைவேல்