Tuesday, October 29, 2019

நீர்ச்சுடர்
அன்புள்ள ஜெ

நேற்று உங்கள் வெண்முரசு தொகுப்பில் நீர்ச்சுடரின் அத்தியாயம் 8 முதல் 12 வரை தொடர்ச்சியாக படித்தேன். நான் உங்கள் தளத்தை கண்டடையும் போது தீயின் எடை இறுதி அத்தியாயங்களை அடைந்து கொண்டிருந்தது. முதலில் எனக்கு வெண்முரசில் ஈடுபாடில்லை.ஆனால் நாட்கள் செல்லச்செல்ல படித்து பார்ப்போம்.என்னதான் இருக்கிறது ? நமக்கு புரிகிறதா ? என்ற எண்ணங்கள் என்னை படிக்க துண்டின.
முதல்முறையாக மகாபாரதத்தை 5 ஆம் வகுப்பு படிக்கும்போது படித்து முடித்தேன். அது சோ அவர்களால் எழுதப்பட்டது. அந்தச் சிறுவயதில் ஒரு கதை என்றே படித்தேன். குறிப்பாக சாந்தி பர்வத்தில் யுதிஷ்திரருக்கு பீஷ்மர் சொல்லும் நீதி கதைகள் எல்லாம் எனக்கு வெறும் கதைகளாகவே இருந்தன.அவற்றின் மேலோட்டமான நீதிகள் மட்டும் என் அறிவிற்கு எட்டின.

அதன் பிறகொரு நீண்ட இடைவெளி.கிட்டதட்ட கதையின் பெரும்பாலான நுண்சம்பவங்கள் மறந்துவிட்டன.என் நினைவில் கதை ஒரு சுருக்கப்பட்ட வடிவில் நின்றிருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியான மஹாபாரதம் தொடர் மீண்டும் பழைய நினைவுகளை நினைவுபடுத்தின. அந்த தொடர் பார்ப்பதற்கு ஒரு நல்ல கதை அம்சத்தோடு இருந்தது. நடிகர்களும் நன்றாகவே பொருந்தி அமைந்திருந்தனர்.

ஆனால் எனக்கு அதில் சில போதமைகளும் இருந்தன.உதாரணத்திற்கு, யுதிஷ்திரருக்கும் அர்ஜுனனுக்கும் போரின் போது ஏற்படும் பிணக்கு, யுதிஷ்திரர் போரில் இருந்து விலகி சந்நியாசம் மேற்கொள்ள முயல்வது, பீமன் துச்சாதனனை கொன்று ஆடும் கோர தாண்டவம், அம்புப்படுக்கை பீஷ்மருடனான யுதிஷ்திரரின் உரையாடல். குறிப்பாக பாண்டவர்கள் அரசுரிமை ஏறுவதோடு தொடர் முடிவடைந்துவிட்டது.அதற்கு பிறகான நிகழ்வுகளான திருதராஷ்டிரர், காந்தாரி மற்றும் குந்தி மூவரும் வனம் புகுதல், யாதவ குலத்தின் அழிவு, அதிலும் கிருஷ்ணரின் நிலைத்த தன்மை, பாண்டவர்கள் வனம் புகுதல் போன்றவை காட்டப்படவில்லை என்பது என் குறை.

இவையெல்லாம் ஒரு வெற்றி கதையின் அம்சத்திற்கு இடையூறு என்று தவிர்த்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் கூறிய உதாரணங்கள் அனைத்தும் சோ அவர்கள் எழுதிய மகாபாரதத்தை படித்ததிலிருந்து தெரிந்து கொண்டது. இதை தவிர வேறேந்த தொகுப்பையும் படித்ததில்லை.

இந்த நினைவுகள் எல்லாம் எழவே உங்கள் வெண்முரசை வாசிக்க தொடங்கினேன். நீங்கள் அப்போது தீயின் எடையின் இறுதி அத்தியாங்களை தீட்டிக் கொண்டிருந்தீர்கள். நான் நகுலன் காந்தாரிக்கு துரியோதனனின் மரண செய்தியை எடுத்து சென்று சேர்ப்பதிலிருந்து படிக்க தொடங்கினேன். சில நாட்களிலேயே தீயின் எடை நிறைவுற்றது.
தங்களது அடுத்த நூலில் இருந்து தொடர்ச்சியாக படிக்கலாம் என முடிவெடுத்தேன்.அதன் படியே  நீர்ச்சுடரை தொடக்கம் முதலே வாசிக்க தொடங்கினேன்.அதன் முதல் அத்தியாயம் என்னை கவர்ந்தது. எனினும் அதன் இறுதி வரிகளான பேரன்னை என்பவள் தன் மைந்தரின் குருதியையும் உண்டவள் என்பதன் சாரம் எனக்கு விளங்கவில்லை. இன்றும் கூட இந்த வரிகள் எனக்கு புரியவில்லை.

இதற்கு அடுத்த அத்தியாயங்களில் வந்த அஸ்தினாபுரியின் இருள் சூழ்ந்த நிலவறைகள் பற்றிய விவரணைகள் எனக்கு மேலும் புதிராகவே இருந்தன.அதன் இறுதி வரிகளை அடையும்போது இருள் வாழ்வின் முதலையும் முடிவையும் குறிக்கிறது என்னும் சிறு திறப்பு ஏற்பட்டது.எனினும் பெரும்பான்மை பகுதிகள் விளங்கவில்லை.எனவே எனக்கு புரிந்ததெல்லாம் அது எழுதப்பட்டிருப்பது படிம மொழியில் என்றும் அப்படிமங்களை விரித்தெடுத்து கொள்ளுமளவிற்கு எனக்கு திறனில்லை என்பது மட்டுமே
இவ்வாறு புரிதலற்று வெறுங்கதையெனவே சில நாள் படித்தேன்.ஒரு கட்டத்தில் புரியாததை படித்து என்ன பயன் என்று முடிவு செய்து வெண்முரசு வாசிப்பதை நிறுத்திவிட்டேன்.இந்நிலையில் தான் நேற்று மதியம் நான் விட்ட இடத்திலிருந்து தொடர்ச்சியாக ஐந்து அத்தியாங்களை படித்தேன்.படித்து முடித்தவுடன் நான் எங்கே இருக்கிறேன் என்று என்னையே வினவி கொண்டேன்.நானே அக்காட்சிகளை நேரில் கண்டது போல் இருந்தது.கனகர் சம்வகையிடம் அமைச்சு தொழில் குறித்து பேசியது, பின்பு ஏன் பேசினோம் என எண்ணியது, தீர்க்கசியாமர் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டது, அங்கே யாழிசைத்து அருள் உரைத்தது, வஜ்ர நாகினி அன்னையின் வரலாறு, வஜ்ர நாகினி அன்னையின் ஆலயம் அகழ்ந்தெடுக்கப்பட்டது என ஒவ்வோரு காட்சியும் நேரில் பார்த்ததாகவே தோன்றியது.அதில் வரும் அச்சம் பற்றிய விவரணைகள் என்னை அச்சம் கொள்ளவே வைத்து விட்டன.சிறிதுநேரம் ஒரு பித்துக்குளி போலவே என் அகம் இருந்தது.நான் பெற்ற அனுபவமாகவே அதை எண்ணுகிறேன்.எங்கோ கடந்த காலத்தில் வாழ்ந்த உணர்வு நிலை அது. அந்த உணர்வு நிலையை உள்ளது உள்ளபடி என்னால் விவரிக்க இயலவில்லை.ஏதோ என்னால் முடிந்தவரை பகிர்ந்து கொண்டேன்.ஒரு  ஆரம்ப நிலை வாசகனான எனக்கு ஏதேனும் வழிகாட்டுதல்கள் உண்டா ?

முக்கியமாக நான் இக்கடிதத்தை எழுதுவதன் நோக்கம். எனக்கு உங்களை விட்டால் வேறு யாரும் இலக்கியமறிந்தவர்கள் உடன் உறவு இல்லை. வீட்டில் சொன்னால் இந்த உணர்ச்சிகளை புரிந்து ஆட்கள் இல்லை. நான் மாற்றுதிறனாளி, நடக்க இயலாதவன் என்பதால் வெளியே செல்லவும் வாய்பில்லை. உங்களிடம் கூறுவது எனக்கு ஒரு மன நிம்மதியை அளிக்கிறது.அதற்காவே இக்கடிதம் எழுதினேன். இத்தனை நேரம் பொறுமையுடன் வாசித்தமைக்கு நன்றி.

சக்திவேல்